[X] Close
 

ஆப்பரேஷன் லோட்டஸ் என்றால் என்ன?-: அறிக சில தகவல்கள்


what-is-operation-lotus

  • பாரதி
  • Posted: 16 May, 2018 15:15 pm
  • அ+ அ-

ஆப்பரேஷன் லோட்டஸ் என்றால் என்ன தெரியுமா? 2008 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகளிடமிருந்து தன்வசம் 7 எம்.எல்.ஏ..க்களை இழுக்க பாஜக வகுத்து அரங்கேற்றிய அரசியல் வியூகம்தான் இப்படி அறியப்படுகிறது. 

2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 80, மஜத 28 தொகுதிகளில் வென்றன. 6 சுயேட்சைகளும் வென்றனர். அப்போது செயல்படுத்தப்பட்டது தான் ஆப்பரேஷன் லோட்டஸ்.

அந்த திட்டத்தின்படி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 எம்எல்ஏக்களை அவ்வப்போது ராஜினாமா செய்ய வைத்தது பாஜக. அரசியல் சூழ்ச்சியால் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது.  சட்டப்பேரவையில் பாஜகவின் பலமும் அதிகரித்தது.

தற்போது, 2018 கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியானதிலிருந்து ஆப்பரேஷன் லோட்டஸ் மீண்டும் பிரபலமாகிவிட்டது. 

பேரம் போன 7 எம்.எல்.ஏ.,க்கள்..
2008-ல் மாநிலத்தில் அரசு அமைக்க, பாஜக எதிர்க்கட்சிகளிடமிருந்து 7 எம்.எல்.ஏ.,க்களை தன்வசமாக்கியது. இவர்களில் 4 பேர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் காங்கிரஸ் கட்சியை சேர்தவர்கள்.

மஜதவைச் சேர்ந்த அந்த 4 எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களாக இருந்தனர். இதனால் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. இதனை சரிகட்ட இடைத்தேர்தல் நடத்தப்பட அந்த 4 எம்.எல்.ஏ.,க்களும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனால் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 120 ஆனது.

இப்போது மீண்டும் அதே குதிரை பேரங்கள் நடப்பதாக மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே ஆப்பரேஷன் லோட்டஸ் மீண்டும் பிரபலமாகியிருக்கிறது.

இத்தகைய சூழலில், பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காகவே காங்கிரஸும் மஜத கட்சியும் கைகோத்துள்ளன என்கிறது அரசியல் வட்டாரம்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, "2008 ஸ்டைலில் குதிரை பேரம் நடப்பதாக வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார். அத்துடன் நில்லாமல், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் நடத்தப்படுகிறது" என்று பகிரங்க புகாரை முன்வைத்துள்ளார்.

மேலும், எங்களிடம் இருந்து ஒரு எம்.எல்.ஏ.,வை பறிக்க  பாஜக முயன்றால் அவர்களிடமிருந்து 2 எம்.எல்.ஏ.,க்கள் பறிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ஆப்பரேஷன் லோட்டஸ் வெற்றி பெறுமா இல்லையா என்பதை பொறுத்திருத்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close