[X] Close

தொடங்கியது 'காலா' அரசியல்.. தொடங்கிவைத்தார் ஜெயக்குமார்


tn-minister-on-kaala

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 May, 2018 15:06 pm
  • அ+ அ-

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் படம் காலா. இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போர்க்கொடி உயர்த்த, மெர்சல் எதிர்ப்பு பற்றி எரிந்தது.

நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. ஒரு சுமாரான படத்தை சர்ச்சைக்குள்ளாக்கி சூப்பராக ஓடவைத்துவிட்டதாக நீதிபதியே விமர்சித்ததை மறக்க முடியாது. மெர்சல் படத்துக்கு இலவசமாக விளம்பரம் தேடித் தந்ததாக தமிழிசை மீதும் விமரசனங்கள் வைக்கப்பட்டன. இறுதியில், காட்சிகள் ஏதும் நீக்கப்படவில்லை. மெர்சல் நல்ல வசூலுடன் திரையரங்குகளில் ஓடி முடிந்தது.

இந்த நிலையில்தான் 'காலா' படம் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதுவும் தமிழக அமைச்சர் ஜெயக்குமர் முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியிருக்கிறார். ரஜினி, கமல் அரசியல் பக்கம் தலைதூக்க ஆரம்பித்த நாள் முதலே இருவரையும் சரமாரியாக விமர்சித்து வருபவர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலா பாடல்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இங்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ள அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். காலா போன்ற காளான்கள் விரைவில் காணாமல் போய்விடும். 

சமுதாயத்துக்கான நல்ல கருத்தை தெரிவித்தவர் எம்ஜிஆர் மட்டுமே. எந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தார், எந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் சிகரெட்டை தூக்கிபோட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தார், எந்த படத்தில் மதுபாட்டிலுடன் நடித்தார். சமுதாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்த கருத்தை ரஜினி தெரிவித்தார்?.
நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான், பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான், திருடாதே பாப்பா திருடாதே உள்ளிட்ட நல்ல கருத்துகளை சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் படங்களிலேயே நடித்தார். அவரது பாடல்கள் 50 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் கேட்கப்பட்டுதான் வருகின்றன.

அரசியல் சுயலாபத்துக்காக குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கக் கூடாது. காலா பாடல்கள் அப்பாவி மக்களை தூண்டிவிடும் வகையில் இருந்தால் அதை அரசு ஏற்காது. எல்லாரும் தலைவனாக முடியாது, மீசை வைத்தவர் எல்லாம் கட்டபொம்மன் அல்ல. ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் நியாயம் வந்துவிடுமா?" என ஆவேசமாக தெரிவித்தார்.
இப்படி எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் அதுவும் அரசியல்வாதியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் காலாவுக்கான ஹைப் ஒருபுறம் அதிகரித்துள்ளது. இனி, யார் யாரெல்லாம் என்னவெல்லாம் விமர்சனத்தை முன்வைக்கவிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close