[X] Close

சொந்த ஊரிலேயே வாங்கிய ’முட்டை’: தேர்தல் மன்னனின் ‘கலகல’ நேர்காணல் - பத்மராஜனின் 200-வது வேட்புமனு


padmarajan-interview

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 06:59 am
  • அ+ அ-

எஸ்.ராஜாசெல்லம்

‘அட போப்பா.. அவருக்கு வேற வேலையே இல்ல’ என்ற விமர்சனங் களை பொருட்படுத்தாமல், கவுன் சிலர் தேர்தல் தொடங்கி, ஜனாதிபதி தேர்தல் வரை சளைக்காமல் வேட்புமனு தாக்கல் செய்து, ‘தேர்தல் மன்னன்’ என்று அறியப்படுபவர் பத்மராஜன்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று முதல் ஆளாக தருமபுரி மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவரது 200-வது வேட்புமனு. அவர் தேநீர் அருந்த ஒதுங்கிய தருணத்தில் ஓரம்கட்டி நடத்திய சுவாரஸ்ய நேர்காணல்..

கின்னஸ் சாதனைக்காக என்றபோதிலும், விரயச் செலவு செய்வதாக யாரும் கிண்டல் செய்தது இல்லையா?

பலரும் கிண்டல் செய்வார்கள். 1988-ல் முதல் முறையாக மேட்டூர் தொகுதிக்கு மனு தாக்கல் செய்தபோது, ‘பஞ்சர் கடைக்காரனுக்கு எம்எல்ஏ ஆசையா?’ என்று காதுபட பேசினார்கள். என் நோக்கம் தவறானது அல்ல எனும்போது யாரோ என்னவோ பேசிவிட்டு போகட்டுமே.

வீட்டில் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

(அருகில் மகன் இருப்பதால் நெளிந்தபடியே) வீட்டிலும் என் செயலை ஜீரணிக்கவே மாட்டார்கள். இதுவரை ரூ.30 லட்சத்துக்கு மேல் செலவழித்திருப்பேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், வேறுவழியின்றி என் போக்குக்கு விட்டுவிட்டார்கள்.

பிரச்சினைகளை சந்தித்த அனுபவம் உண்டா?

1991-ல் பிரதமர் நரசிம்மராவ், ஆந்திர மாநிலம் நந்தியால் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை போட்டியின்றி தேர்வு செய்வதை பெருமையாக கருதுகிறோம் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் கூறியிருந்தார். ஆனால், முதல் நாள் முதல் ஆளாக நான் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டேன். மனு கொடுத்துவிட்டு சென்ற என்னை, ஜீப்பில் வந்த 5 மர்ம நபர்கள் ஒரு காட்டுக்கு கடத்திச் சென்றுவிட்டனர். நான் தேர்தலில் நிற்கக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். காவலுக்கு 2 ஆட்கள். வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் வரும். ‘வாபஸ் வாங்கலைன்னா போட்டுருவோம்’னு தெலுங்கில் பேசிக்கிட்டாங்க. ‘நான் அவ்ளோ ஒர்த்தான பீஸ் இல்லப்பா’னு சொல்லத் துடிப்பேன். ஆனா தெலுங்கு தெரியாது. 5 நாட்களுக்கு பிறகு, அவர்கள் அசந்த நேரத்தில் இரவில் 15 கி.மீ. ஓடிவந்து தப்பினேன். அவர்கள் விரும்பியதுபோலவே, என் வேட்புமனு தள்ளுபடி ஆகிவிட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தது பற்றி..

1997-ல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு அளிக்க நாடாளுமன்றம் போனேன். ‘எந்த ஊர்?’ என்றனர் காவலர்கள். ‘தமிழ்நாடு’ என்றேன். ஒல்லியான தேகம், முறுக்கு மீசையை பார்த்ததும் என்னை வீரப்பன் என்று நினைத்துவிட்டார்கள் போல. அவர்களுக்கு புரியவைத்து உள்ளே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

அதிகபட்சமாக எத்தனை வாக்குகள் பெற்றிருக்கிறீர்கள்?

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் பெற்ற 6,273 வாக்குகள்தான் அதிகபட்சமானது. ஒருமுறை உள்ளாட்சி தேர்தலில் என் சொந்த ஊரான குஞ்சாண்டியூரில் வார்டு உறுப்பினர் தேர்தலில் நின்றபோது ஒரு வாக்குகூட கிடைக்கவில்லை. வார்டு மாறி நின்றதால் என் ஓட்டைக்கூட போட்டுக்கொள்ள முடியவில்லை.

அரசியல் எப்படி இருக்கணும்னு விரும்புறீங்க?

அரசாட்சி பற்றி வள்ளுவர் கூறியுள்ளபடி ஆட்சி நடத்தினால், சிறந்த ஆட்சியாக அமையும்.

சரி, இந்த தேர்தலில் நீங்கள் ஜெயித்து, எம்.பி.யாகி, பிரதமராகவும் ஆகிவிட்டால் (கேள்வியை முடிக்கும் முன்பு ‘தெய்வமே..’ என்று கும்பிடுகிறார்..) என்ன செய்வதாக உத்தேசம்?

ஒவ்வொரு திங்கள்கிழமை.. ஒரு மாவட்டம்னு நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, குறைதீர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு, மக்களிடம் மனுக்களை வாங்கி அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பேன்.

நீங்க கலாய்க்கலாம்.. நான் கலாய்க்கக் கூடாதா!

சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close