[X] Close

அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்: பாஜக 10 தொகுதிகள் கேட்பதால் இழுபறி?


admk-bjp

  • kamadenu
  • Posted: 16 Feb, 2019 16:39 pm
  • அ+ அ-

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந் துள்ளது. 10 தொகுதிகள் வேண்டும் என பாஜக கேட்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில், அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்துக்கு சென்ற அவர், அதிமுக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார்.

நள்ளிரவு 1 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவுக் கான தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இடையிடையே தொலைபேசி யில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பியூஸ் கோயலுடன் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த் தையின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.

கடந்த 1998-ல் கன்னியாகுமரி, தென்காசி, தென் சென்னை, கோவை, நீலகிரி, திருச்சி, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகளையும், 2004-ல் கன்னியாகுமரி, வட சென்னை, கோவை, நீலகிரி, சிதம்பரம், தருமபுரி, புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு ஜெயலலிதா வழங்கினார். இதை சுட்டிக்காட்டிய பியூஸ் கோயல், தங்களுக்கு குறைந்தது 10 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார். இதுதவிர புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு தலா 1 என 3 தொகுதிகளையும் கேட்டுள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே இதற்கு மறுப்பு தெரிவித்த பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், ‘‘கடந்த 2016-ல் தனித்துப் போட்டியிட்டு பாஜக பெற்ற வாக்குகள் 3 சதவீதம் மட்டுமே. கன்னியாகுமரி, கோவை தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை எனவே, 4 தொகுதிகள் மட்டுமே தர முடியும்'' என தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென் சென்னை ஆகிய 4 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என பாஜக கேட்டுள்ளது. கன்னியாகுமரி, கோவையை தருகிறோம். மற்ற தொகுதிகளை நாங்கள்தான் முடிவு செய்வோம் என அதிமுக தரப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

3 மணி நேரம் நடந்த பேச்சில் என்ன நடந்தது என்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் 3 கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 13 தொகுதிகள் கேட்டோம். அவர்கள் மொத்தமாக 4 மட்டுமே தர முடியும் என்றார்கள். நேற்றைய பேச்சில் 7 தொகுதிகள் தர அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது. எண்ணிக்கை மட்டுமல்ல, சில தொகுதிகளை இரு கட்சிகளும் விரும்புவதால் சிக்கல் நீடிக்கிறது'' என்றார்.

இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் சென்னை வரவுள்ள பியூஸ் கோயல், அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டதும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திப்பார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close