[X] Close
 

ராணுவம் எதற்கு ஐடி ரெய்டு போதுமே... சத்யராஜுக்கு தமிழிசை எச்சரிக்கை பதிலடி


tamilisai-vs-sathyaraj

  • பாரதி
  • Posted: 09 Apr, 2018 10:47 am
  • அ+ அ-

'காவிரி உரிமையை மீட்கும் போராட்டத்தில் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம்' என நடிகர் சத்யராஜ் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கும் விதத்தில் பேசியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர் கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நியாயமாக போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய சத்யராஜ், "தமிழர்களின் உணர்வை மதியுங்கள், எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம் ராணுவம் வந்தாலுமே அஞ்சமாட்டோம். குரல் கொடுக்கத் தைரியம் இருப்பவர்கள் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள். இல்லையென்றால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்" என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

அதற்கு, பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்துப் பேசிய தமிழிசை, "இதுல வேற ஒரு நடிகர் சொல்றாரு.. ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்று. ஐடி ரெய்டு வந்தால் நீங்கள் எப்படி பயப்படுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? ராணுவம் உங்களுக்கு எதுக்கு? ராணுவம் வருவதற்குக்கூட நீங்களெல்லாம் தகுதி இல்லாதவர்கள்" எனப் பேசியிருந்தார்.

வருமான வரித் துறை மத்திய அரசின் ஏவல் அலுவலகமாக இருக்கிறது எனப் பல்வேறு தருணங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராணுவம் எதற்கு ஐடி ரெய்டு போதாதா? என்ற தமிழிசையின் பேச்சு மிரட்டல் பாணியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close