ஓடிடி தளங்களின் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் படையலிடும் நெட்ஃபிளிக்ஸ், இந்திய திரைப்படங்களை பொறுத்தளவில் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் செய்துள்ளது.
ஓடிடி தளங்களின் சிறப்பே, தணிக்கைக்கு அப்பாற்பட்ட அதன் காத்திரமான படைப்புகள்தான். வன்முறை, பாலியல், வசவு சொற்கள், போதை பயன்பாடுகள் என வழக்கத்தில் நாம் திரையில் காண வாய்ப்பில்லாத காட்சிகளை அப்பட்டமாக ஓடிடி தளங்கள் காட்சிப்படுத்தும். படைப்பின் வீரியத்தை பார்வையாளருக்கு கடத்த இவை முக்கியம் என படைப்பாளர்கள் வாதிடுவார்கள்.
ஓடிடி தளங்களின் இந்தப் போக்குக்கு எதிராக இந்தியாவில் முட்டுக்கட்டை விழுந்தது. அரசின் நெருக்கடி காரணமாக தணிக்கை செய்யப்பட்ட படைப்புகளை வெளியிடும் கட்டாயத்துக்கு நெட்ஃபிளிக்ஸ் ஆளானது.
வழக்கமாக இந்தியாவுக்கு வெளியிலுள்ள பார்வையாளர்களுக்கு திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பையே நெட்ஃபிளிக்ஸ் வழங்கும். ஆனால், முன்சொன்ன வன்முறை, பாலியல் காட்சிகள் மட்டுமன்றி, அதிகாரத்துக்கும், அரசியலுக்கும் சர்ச்சைகளை கூட்டக்கூடிய காட்சிகள் தணிக்கையானதன் பதிப்பையே ஒளிபரப்ப நெட்ஃபிளிக்ஸ் முன்வந்துள்ளது.
இதற்கு அரசின் நெருக்கடி காரணமா என வெளிப்படையான தகவல் ஏதும் இல்லை. ஆனால் சர்வதேச அளவில் போட்டி ஓடிடி தளங்களின் மத்தியில் தள்ளாட்டத்தை எதிர்கொண்டிருக்கும் நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவின் பரந்த சந்தையை புறந்தள்ள விரும்பவில்லை.
இதன் விளைவாக, தணிக்கை வாரியம் தந்த பதிப்பையே சர்வதேச அளவில் காட்சிக்கு வழங்கும் முடிவுக்கு நெட்ஃபிளிக்ஸ் வந்துள்ளது. அண்மை படங்களின் வரிசையில், அடுத்த கட்டமாக ஓடிடி தளங்களின் தனிச்சிறப்பான வலைத்தொடர்களும் இந்த மாற்றங்களுக்கு உட்பட இருப்பதாக சொல்லப்படுகின்றன. இதனால் ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.