அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதை முன்னிட்டு இன்றைய தினம் தமிழகத்தின் சகல திசைகளிலும் அவர் பெயர் எதிரொலித்தது. ஓடிடியை மட்டும் விட்டுவைப்பானேன் என்று நெட்ஃபிளிக்ஸ் தளமும் உதயநிதியை உச்சரித்திருக்கிறது.
வேறொன்றுமில்லை. உதயநிதி நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘கலகத்தலைவன்’ திரைப்படம், அதன் ஓடிடி வெளியீடாக நெட்ஃபிளிக்ஸில் களம் காண இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதியுடன், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்த கலகத்தலைவன் திரைப்படம், நவ.18 அன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தற்போதைய திரைப்படங்கள் அதன் திரையரங்க வெளியீட்டிலிருந்து ஒரு மாத இடைவெளியில் ஓடிடியில் வெளியாகும் சடங்கின்படி, கலகத்தலைவன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தமிழகம் முழுக்க உதயநிதி கவனம் ஈர்த்திருந்ததன் மத்தியில் நெட்ஃபிளிக்ஸும் சேர்ந்து கொண்டது. உதயநிதி தயாரித்து நடித்த கலகத்தலைவன் திரைப்படம் நாளை மறுநாள்(டிச.16) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் உலகத்தை மையமாக கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக கலகத்தலைவன் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
அமைச்சர் பொறுப்பேற்றதால் நடிப்பை தலைமுழுக முடிவு செய்துள்ள உதயநிதி, அடுத்து வெளியாகவிருக்கும் ’மாமன்னன்’ திரைப்படத்தோடு நடிப்பை நிறுத்திக் கொள்வதாகவும், கமல்ஹாசன் தயாரிப்பில் திட்டமிட்ட புதிய திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்வதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.