நெட்ஃபிளிக்ஸிலும் சொல்லியடிக்கும் ‘லவ் டுடே’


திரையரங்க வெற்றியை தொடர்ந்து ஓடிடியில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படம் அங்கேயும் தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கிய தமிழ் திரைப்படம் லவ் டுடே. இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். காதல் ஜோடி ஒன்று செல்ஃபோனை பரஸ்பரம் மாற்றிக்கொள்வதால் நேரும் பாஸ்பரஸ் வெடிப்புகளை, ஜாலி கேலி கலந்து சொல்லியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். மிகச் சாதாரணமான் ஓபனிங் கிடைத்த நிலையில், வாய்வழி பாராட்டு வாயிலாகவே நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

திரையிட்ட இடங்களில் எல்லாம் இளம் வயதினர் இன்னமும் கொண்டாடி வருகின்றனர். ஆயினும், ரிலீஸான ஒரு மாத இடைவெளியில் ஓடிடியில் வெளியிடும் அண்மை வணிக சடங்குக்கு உட்பட்டு, டிச.2 அன்று நெட்ஃபிளிக்ஸில் லவ் டுடே வெளியானது. ஒரு சில தினங்களிலேயே இந்திய அளவிலான நெட்ஃபிளிக்ஸ் ’டாப் டென்’ பட்டியலில் ’லவ் டுடே’ இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.

அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ’குட்பை’ பாலிவுட் திரைப்படம் முதலிடம் பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை லவ் டுடே பிடித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை, ’2கே கிட்ஸ்’ நாடித்துடிப்பை அறிந்த திரைக்கதை மற்றும் வசனங்கள் என, பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது திரைப்பட முயற்சி ஓடிடியிலும் சாதனை படைத்திருக்கிறது.

இதற்கிடையே தெலுங்கில் டப் செய்யப்பட்ட 'லவ் டுடே' அங்கேயும் பரவலான வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

x