சமந்தா படத்துக்கும் சிக்கல்: தள்ளிப்போகிறது ஓடிடி ரிலீஸ்


யசோதா

சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற யசோதா திரைப்படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு யசோதா ஏமாற்றம் தந்துள்ளது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அதே உடலே ஆளானது, தசை அழற்சி என தீவிர உடல்நல பாதிப்புக்கு சமந்தா ஆளானதில் அவரது ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர். அந்த நிலையிலும் சமந்தா ஆர்வத்துடன் நடித்த யசோதா திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி மதிப்பான விமர்சனத்தையும் வசூலையும் அள்ளியிருக்கிறது. தற்போது சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்திக்கு மத்தியில், அவரது யசோதா திரைப்படமும் நீதிமன்ற வழக்கில் சிக்கி உள்ளது.

சமந்தா

வாடகைத் தாயாக ஆட்படும் இந்திய இளம்பெண்களை மையமாகக் கொண்ட மற்றுமொரு திரைப்படம் என்றபோதும், கதைப்போக்கும் சமந்தாவின் நடிப்பும் யசோதாவை வேறு தளத்தில் அமர்த்தி இருந்தன. தனது தங்கையின் மருத்துவ செலவினங்களுக்காக வாடகைத் தாயாக சம்மதிக்கும் சமந்தா கதாபாத்திரம் ஹைதராபத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்படும். அங்கே அவரைப் போன்றே வணிக ரீதியிலான வாடகைத் தாயாக இளம்பெண்கள் பலரும் இருப்பார்கள். படத்தில் அந்த மருத்துவமனையின் பெயர் ’ஈவா’.

அதே பெயரில் ஹைதராபாத்தில் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு நடத்தும் மருத்துவர்கள் தற்போது யசோதா திரைப்படத்தை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கிறார்கள். தங்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவ சேவையின் நம்பிக்கை மற்றும் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மருத்துவமனை பெயரை யசோதா கையாண்டிருப்பதாக ஈவா நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது. யசோதா படத்துக்கு எதிரான வழக்கோடு படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கையும் ஈவா மருத்துவமனை பதிந்திருக்கிறது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-க்கு ஒத்தி வைத்தது. இதே நாளில் யசோதாவின் ஓடிடி வெளியீடு முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நாள் குறிப்பிடாது அது ஒத்திப்போகிறது. திரையரங்கில் யசோதாவை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாத ரசிகர்கள், அதன் ஓடிடி வெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். சமந்தாவின் மருத்துவமனை அனுமதியால் கவலையுற்றிருந்த அவரது ரசிகர்கள், யசோதாவின் புதிய வில்லனாக நீதிமன்ற வழக்கு முளைத்ததில் மேலும் சோர்ந்திருக்கிறார்கள்.

x