தன் பாதையில் சுழித்தோடும் நதியென கதை. அதில் தங்களது அன்றாடங்களை இசைவோடு கடக்கும் இயல்பான கதாபாத்திரங்கள். அவரவர்களின் அந்த நேரத்து நியாயங்கள், அபிலாஷைகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள்! அனைத்தையும் உள்ளடக்கிய ஆர்ப்பாட்டமற்ற மற்றுமொரு மலையாளத் திரைப்படமாக வந்திருக்கிறது ‘சுந்தரி கார்டன்ஸ்’. சோனி லிவ் தளத்தில் சுமாரான தமிழ் டப்பிங்கிலும் இப்படத்தைக் காணலாம்.
நதி போல வாழ்ந்திரு
முப்பதுகளின் தொடக்கத்திலிருக்கும் விவாகரத்தான பெண் சுந்தரி. தான் படித்த கான்வென்ட் பள்ளியிலேயே நூலகராகப் பணிபுரிகிறாள். நோயுற்ற தாய், சொத்துக்களைச் சுரண்டும் அண்ணன் குடும்பம் தவிர்த்து அவளைப் பெரிதும் தனிமையே சூழ்ந்திருக்கிறது. இசை, வாசிப்பு, அவ்வப்போது அளவான தாகசாந்தி என வாழ்க்கையை அதன் போக்கில் கழிக்கிறாள். ஆங்கில ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு வருகை தரும் இளைஞன் விக்டர், அவளது தனிமைக் கோட்டையைக் தகர்க்கிறான். சின்னச்சின்ன சம்பவங்களின் தொடர்ச்சியாய் ஒருதலையாய் மெல்ல அவன் மீது மையலுறுகிறாள். தனது விருப்பத்தை அவனிடம் சொல்லக் காத்திருந்தவளை, உடன் பணியாற்றும் இன்னொருத்தி முந்திக்கொள்கிறாள்.
காதல் பித்தேறிய சுந்தரி அதன் பின்னர் செய்யும் சில சில்லறை காரியங்களால் அவளது விருப்பத்துக்குரியவன் இன்னும் எட்டிப்போக நேருடுகிறது. சொந்த வாழ்க்கையிலும் சோகங்கள், துயரங்கள் துரத்த மற்றுமொரு முறை வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறாள் சுந்தரி. அதன் பின்னர் அவள் எடுக்கும் தனித்துவ முடிவுகளும், அவளது காதலும் என்னவாகின்றன என்பதை ஒரு ஃபீல் குட் மூவிக்கான இலக்கணங்களோடு சொல்ல முயற்சிக்கிறது ‘சுந்தரி கார்டன்ஸ்’.
சுந்தரியின் நந்தவனம்
முதல் திருமணத்தின் கசப்பான அனுபவங்களிலிருந்து மீள முயற்சிக்கும் பெண். அதிலிருந்து விலகிய பிறகும் அதன் வடுக்கள் அவளைப் படுத்துகின்றன. மணவாழ்க்கை மட்டுமன்றி இதர வடிவங்களிலும் விரட்டும் சவால்களில் மீண்டெழ பெரும்பிரயத்தனம் கொள்ள வேண்டியதாகிறது. அதற்கென்ன என்பதுபோல அன்றலர்ந்த மலராகக் காட்சியளிக்கிறாள். தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் சக ஆசிரியரைச் சுலபமாக நிராகரிப்பவள், தனக்கானவன் தட்டுப்பட்டதும் சரிந்து விழுகிறாள். ஆனால் அவனிடம் காதலை சொல்வதற்கு மென்று விழுங்குகிறாள். ஆழமான நாவலின் எழுத்தோட்டதில் சித்தரிக்கப்படும் நாயகியைக் கண்முன்பாக நடமாட விட்டிருக்கிறது ‘சுந்தரி கார்டன்ஸ்’.
சுந்தரியாகப் படத்தைத் தோளில் சுமக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஒற்றைக் கேசத்தின் வெளுப்புக்கும், இடுப்பின் சுற்றளவுக்கும் புலம்பும் சாமானியப் பெண்ணாக அறிமுகமாகும் அபர்ணா, காதலின் பெயரில் பள்ளி மாணவியைச் சூறையாடும் இளைஞனைத் தாக்கும் இடத்தில் புயலாக மையம் கொள்கிறார். தனது தனிமையைத் தகர்க்கும் சக பணியாளனை விரிந்த பார்வையால் விழுங்கும் இடத்திலும், வசனங்களால் பிடிபடாத காட்சிகளை நகாசு முகபாவங்களில் நகர்த்திச் செல்வதிலும் பார்வையாளர்களை ஆக்கிரத்துவிடுகிறார். தனக்கு நேர்ந்துவிட்ட தனிமையை முழுமையாக ஏற்றுக்கொள்வதும், நிராகரிக்கும் மனிதர்களை புறக்கணிக்காததும், சரக்கடித்துவிட்டு சலம்புவதும், காதலைப் பிரிந்து ஏக்கத்துடன் விலகிச் செல்வதுமாக அபர்ணாவுக்கு கதை நெடுக கனமான வேடம்.
இயல்பான மனிதர்கள், காட்சிகள்
சுந்தரி மட்டுமன்றி கதையில் கலக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மலையாளத் திரைமொழிக்கே உரிய வகையில் இயல்பானவர்களாக ஒட்டிக்கொள்கிறார்கள். பள்ளியில் புதிதாய் பணியில் சேரும் இளைஞனைத் திறந்த வாய் மூடாது ரசிக்கும் ஆசிரியை, அவளது ஆழமற்ற காதலுக்கு யோசிக்காது மசியும் நாயகன், இந்த இருவருக்கும் வெளியே சொல்லாத காதலுடன் துயரத்தில் அலைக்கழியும் நாயகி என முக்கோண முதன்மை பாத்திரங்கள் அவற்றின் இயல்பில் அமைந்திருக்கின்றன. காதல் பித்தில் சிறுபிள்ளைத்தனமான தவறுகளை இழைத்து அதற்காகப் பின்னர் வருந்தும் நாயகி, குட்டு வெடித்ததும் தண்டனையின் பாரத்தை சுயமாக சுமப்பதும் இவற்றில் சேரும். இந்த பிரதான பாத்திரங்களுக்கு அப்பால் வருபவர்களும் இயல்பாகவே கடந்து போகிறார்கள்.
மகனின் தோழி விவாகரத்தானவள் என்றதும் நாடகீயமின்றி அவளை நேரடியாக எச்சரித்து விரட்டும் தாய், சுந்தரியின் தோழனாக வரும் மருத்துவர், ஹார்மோன் விபத்தில் சறுக்கி எழும் பள்ளி மாணவி, தங்கையிடம் சொத்துக்காகக் கொந்தளிக்கும் சகோதரன் என்று குணச்சித்திர வேடங்களும் குறைகாண முடியாத இயல்பில் வந்து செல்கின்றன. வழக்கமான சினிமாக்கள் போனன்றி மணமுறிவான நாயகியை இரக்கம் தொனிக்காது நடமாட விட்டதிலும் இயக்குநர் சார்லி டேவிஸ் எதார்த்தம் சமைக்கிறார். மேகங்களின் நிழல்கள் வருடும் மலைமுகடுகள், தேயிலை தோட்டங்கள் என கண்ணைக் கவரும் கோட்டயத்து அழகை கேமராவில் சுட்ட ஸ்வரூப் பிலிப், படம் நெடுக மனதை வருடும் பின்னணி இசையுடன், அபர்ணாவின் அதிரடிக்குத் தனியாக பிஜிஎம் வழங்கிய அல்போன்ஸ் ஜோசப் என பலரும் சுந்தரி கார்டன்ஸை கவனமாகப் பராமரித்திருக்கிறார்கள்.
காதலை கொண்டாடு
தனிப்பட்ட நடிப்பில் சோடை போகாத நாயகன் நீரஜ் மாதவ், சில காட்சிகளில் கதாநாயகி அபர்ணாவுக்குத் தம்பி போல காட்சியளிப்பது நெருடல். அவரது தாடியும் காட்சிகளின் தொடர்ச்சிக்கு உறுத்தலாக நிற்பதை கவனிக்க மறந்திருக்கிறார்கள். பாடல்கள் தவிர்க்க முடியாத திரைப்படம் என்றபோதும், பாகவதர் காலம்போல முணுக்கென்றால் பாட்டுகளை ஓடவிட்டிருப்பது பெரும் சோதனை! தமிழ் டப்பிங்கிலும் மலையாள பாடல்களை அப்படியே ஒலிக்க விட்டதுடன், அபர்ணாவுக்கு தமிழில் பின்னணி பேசியவருமாக தனியாகச் சோதிக்கிறார்கள். கலை ஆசியராக தோன்றும் கதாபாத்திரம் காமெடிக்கோ, மையக் கதைக்கோ உதவவில்லை. மற்றபடி காதலைக் கொண்டாடிய வகையில் சுந்தரியின் நந்தவனம் தனித்தடம் பதிக்கிறது.
காதல் பித்தில் இழைக்கும் தவறுகள், அதற்காக தாமதமாக மண்டியிடும் மன்றாடல்கள், காதலில் கரையாத சுயம், குறைகளைப் பெரிதுபடுத்தாத காதல் மனம், பரிதாபத்தில் கட்டமைக்கப்படாத காதல் என பிரியத்தின்பால் எழுந்தடங்கும் காதல் உணர்வுகளை காமெடி தோய்த்து பரிமாறியதிலும் ‘சுந்தரி கார்டன்ஸ்’ ரசிக்க வைக்கிறது. எளிதில் ஊகிக்கக்கூடிய காட்சிகள் மற்றும் பெரிய திருப்பங்கள் திரைப்படத்தில் கிடையாது; மிகையான உணர்வு கொப்பளிப்புகள் மற்றும் வசனங்கள் கிடையாது. ஆனபோதும் அதிகாலை நந்தவனத்தின் ஊடான நடைபோல ரசிக்க வைக்கிறது சுந்தரி கார்டன்ஸ். மசாலா ரசிகர்கள் விலகியிருக்கலாம். மற்றபடி பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி ரசிப்பவர்களை இந்தத் திரைப்படம் திருப்தி செய்யும்.