சூப்பர் ஹீரோ வேடத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் தோன்றுவது அரிது. ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான சில்வஸ்டர் ஸ்டோலன் 76 வயதில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’சமாரிட்டன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அடித்துத் துவைத்த அதே நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தை ஒரு சூப்பர் ஹீரோவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரகசியங்களின் பின்னணியில் பேசுகிறது சமாரிட்டன் திரைப்படம். எளிமையான ஆக்ஷன் த்ரில்லர் கதையில் சுவாரசியமான பூச்சுகளையும் திருப்பங்களையும் புகுத்தியதில் சமாரிட்டன் கவனம் ஈர்க்கிறது.
குப்பை பொறுக்கும் சூப்பர் ஹீரோ
கிரானைட் நகரில் தாயின் அரவணைப்பில் வாழும் 13 வயது சிறுவன் சாம். அந்த வயது சிறுவர்களுக்கே உரிய துடிப்பும், கதைகளில் படித்த சூப்பர் ஹீரோ மீதான கனவுமாக வலம் வருகிறான். அப்படி அவனது ஆதர்ச ஹீரோவான ’சாமரிட்டன்’, தன் எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர் என்பதாகக் கணிக்கிறான். தனது ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய மேற்படி நபரை ஒற்றறிவதுடன் நெருங்கிப் பழகவும் செய்கிறான். சிறுவனின் எதிர்பார்ப்புக்குரிய நபர் முதியவராக இருக்கிறார். குப்பைத் தொட்டிகளில் துழாவி கிடைக்கும் பழுதடைந்த பொருட்களை சீரமைத்து அதனை விற்று பிழைப்பதை வாடிக்கையாக அவர் வைத்திருக்கிறார்.
இவர் எப்படி சூப்பர் ஹீரோவாக இருக்க முடியும் என்ற சிறுவனின் ஏமாற்றம் தோய்ந்த எதிர்பார்ப்புகள் பார்வையாளர்களை தொற்றிக்கொள்ள, நகரில் தீயவர்களின் புதிய புறப்பாடு தொடங்குகிறது. ஊரையும் மக்களையும் காக்க இப்போது சூப்பர் ஹீரோ வெளிப்பட்டாக வேண்டுமே! அந்த சூப்பர் ஹீரோ யார், தக்க தருணத்தில் அவர் வெளிப்பட்டாரா, அவர் தயக்கத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன, கடைசியில் நகரமும் மக்களும் காப்பாற்றப்பட்டார்களா, சிறுவனின் கணிப்புகள் பூர்த்தியானதா... உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையாக நீள்கிறது சாமரிட்டன் திரைப்படத்தின் கதை.
சூப்பர் ஹீரோவாக சூப்பர் ஸ்டார்
ஒருவரால் 4 தசாப்தங்களாக தொடர்ந்து தன்னை ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக்கொள்ள இயலுமா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார் சில்வஸ்டர் ஸ்டோலன். ராக்கி மற்றும் ராம்போ படங்களில் பார்த்த சில்வஸ்டரின் தேக முறுக்கு தற்போது தளர்ந்திருக்கலாம். ஆனால், கிழட்டுச் சிங்கத்தின் கர்ஜனையும், கம்பீரமும் துளியும் குறையவில்லை. வயோதிகம் காரணமாக சட்டையைக் கழற்றாது சண்டை போடுவதில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. மற்றபடி பார்வையாலும் குரலாலும் மிரட்டுகிறார்.
தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் ஆக்ஷன் காட்சிகளில் புஜபலம் காட்டுகிறார். இவர் அடித்தால் எதிராளி பறப்பதை இயற்பியல் கோட்பாடுக்கு அப்பால் நம்பச் செய்கிறார். கூடவே, நடிக்கவும் செய்திருக்கிறார். கடந்த காலத்தின் மர்மங்களை புதைத்த முகம், வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளும் முனைப்பு, அன்றாடங்களில் குறுக்கிடும் சிறுவனுடான நட்பு, பொத்தி வைத்திருந்த ரகசியங்களில் இருந்து அவனுக்காக விடுபடுவது என சில்வஸ்டர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் தீவிரமாக திரையை ஆக்கிரமிக்கிறார்.
சமாரிட்டன் Vs நெமிஸிஸ்
ஆதியில் தொடங்கிய தீராது தொடரும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரே சமாரிட்டனிலும் தொடர்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே விஎஃப்எக்ஸ் காட்சிகளில் கால் நூற்றாண்டுக்கு முந்தைய சமாரிட்டன் Vs நெமிஸிஸ் மோதலும், முடிவும் சொல்லப்படுகிறது. பிறப்பில் இரட்டையரான இந்த இருவரில் சமாரிட்டன் மக்களைக் காக்கும் காவலானகவும், நெமிஸிஸ் ஊரை அழிக்க முற்படும் வில்லனாகவும் உருவாகிறார்கள். இறுதி மோதலில் இந்த இருவருமே இறந்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சாமாரிட்டன் உயிரோடு இருப்பதாக மக்கள் மத்தியில் கதைகள் புழங்குகின்றன.
பிற்பாடு சைரஸ் என்ற தாதாவின் தலைமையிலான தீயவர் கூட்டம் நெமிஸிஸ் நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்த இரு எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடத்தில் ஊரில் கலவரம் மூள்கிறது. தீயவர் கொட்டம் தீவிரமடைய மறைந்திருக்கும் சூப்பர் ஹீரோ வெளிப்பட்டே தீர வேண்டும் என்ற நெருக்கடி முளைக்கிறது. இதனால் மற்றுமொரு முறையாக மூளும் நன்மை - தீமைக்கு இடையிலான யுத்தத்தில் புதிய நீதியும் பாடமும் பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகின்றன. அந்த எளிமையான நிதர்சனத்தை புகட்டிய வகையில் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் தன்னையும் பார்வையாளர்கள் மனசாட்சியையும் புடம் போடவும் செய்கிறது.
நன்மையும் தீமையும் நாடி...
கெட்டவர்களால் மட்டுமே இந்த உலகில் அநீதி இழைக்கப்படும் எனில், அந்த கெட்டவர்களையும் அவர்கள் இழைக்கும் தீமைகளையும் களைவது என்றோ எளிதாகி இருக்கும். உண்மையில், நல்லதும் கெட்டதும் எல்லோர் நெஞ்சங்களிலும் புதைந்திருப்பதும், இந்த இரண்டில் ஒன்றை தெரிவு செய்வது நம் கையிலிருப்பதையும் சமாரிட்டன் திரைப்படம் உடைத்துப் பேசுகிறது. இந்த விளக்கத்தில் சமாரிட்டன் கதையின் முடிச்சுகளும், ரகசியங்களும் ஒருங்கே வெளிப்படுகின்றன. போகிற போக்கில் இப்படி தூவிச் செல்லப்படும் கருத்துகளும் பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கு கனம் சேர்க்கின்றன.
ஆனால், கிளைமாக்ஸ் தவிர்த்து முந்தைய காட்சிகளின் முக்கிய திருப்பங்கள் அனைத்தும் எளிதில் ஊகிக்க கூடியவையாக இருக்கின்றன. திரைப்படத்தின் மொத்த தொனியுமே தொண்ணூறுகளின் திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. சில்வஸ்டர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும்போது அதன் வீரியம் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படியான மாயாஜாலம் ஏதும் சமாரிட்டனில் நிகழவில்லை. அம்ப்ரெல்லா அகடெமி தொடரில் ஈர்த்த சிறுவன் ஜாவன் வால்டன், சாமாரிட்டனில் புதிய தடம் பதித்திருக்கிறார். கிளைமாக்ஸ் வரை புதிரை அவிழ்க்காத காட்சியமைப்புகளில் இயக்குநர் ஜூலியஸ் அவெரி முத்திரை பதித்திருக்கிறார்.
ஓடிடியில் நேரடியாக வெளியாகியிருக்கும் ’சமாரிட்டன்’, சில்வஸ்டர் ஸ்டோலன் மற்றும் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கானது.