மேலடுக்கில் குழந்தைகளுக்கான குதூகல கதையாகவும், உள்ளடுக்குகளில் பெரியவர்களுக்கான ஆழமான கருத்துகளையும் ஒருங்கே கொண்ட திரைப்படங்களின் வரிசையில் அண்மையில் சேர்ந்திருக்கிறது ’தி ஸீ பீஸ்ட்’(The Sea Beast).
’கொம்பன்சுறா’ வேட்டைக் கப்பல்
கற்பனை தீவு தேசத்தை அச்சுறுத்தும் கடல் வாழ் ராட்சத மிருகங்களை வேட்டையாட பிரத்யேக கப்பலில் பயிற்சி பெற்ற வேட்டையர்கள் பயணிக்கின்றனர். கடல்வாழ் ராட்சத பிராணிகள் அவ்வப்போது கரையேறி மனிதர்களை விழுங்குவதாக ராஜ குடும்பம் பரப்பிய தகவல்களால், அந்த கடல் விலங்குகள் மீது நாட்டு மக்கள் அச்சமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். இந்த ராட்சத பிராணிகளை குறிவைத்து கொல்லும் கடல் வேட்டையாளர்கள், அதற்கான சான்றினை அரசவையில் சமர்ப்பித்து பரிசுகள் பெறுகிறார்கள். பல தலைமுறைகளாக இந்த வேட்டைக்காகவே பிறந்து மரிக்கும் குழுவில் ’க்ரோ’ என்ற கேப்டனை சுற்றி கதை தொடங்குகிறது.
அவனுக்கு வலதுகரமான ’சாரா’ என்ற மாலுமி, வாரிசாக வளரும் ’ஜேகோப்’ என்ற வீரன் ஆகியோரின் தீரங்களும் வேட்டைக்கு உறுதுணையாகின்றன. படத்தின் தொடக்க சாகசமாக, கேப்டன் க்ரோ தலைமையிலான ’கொம்பன் சுறா’ பாய்மரக் கப்பல் ’பிரிக்கிள் பேக்’ என்ற ராட்சத கடல் மிருகத்தை வேட்டையாடுகிறது. நேருக்குநேர் மோதலில் அதனை கொல்லும் கேப்டன் க்ரோ, சான்றாக அதன் ஒற்றை தந்தத்தை கைகொள்கிறான். அரசின் பரிசில் பெற தந்தத்துடன் தீவு தேசத்தை அடையும் வேட்டையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
ரெட் பிளஸ்டர் எனும் கடல் பீஸ்ட்
பல தலைமுறைகளாக தீவு தேசத்தை காக்கும் வேட்டையாளர்களின் தியாகத்தை துச்சமாக மதிக்கும் மகாராணி, கடல் பீஸ்டுகளில் உச்ச அச்சுறுத்தலான ’தி ரெட் பிளஸ்டரை’ இன்னமும் வேட்டையாடாது விட்டுவைத்திருப்பதாக குற்றம் காண்கிறாள். விசுவாச வேட்டையாளர்களுக்கு பதிலாக அரசாங்கத்தின் கடற்படை தயாரித்துள்ள வேட்டைக் கப்பலை அறிவிக்கிறாள். இதனால் வேட்டையாளர்கள் அவமானம் அடைகிறார்கள். ட்ரக்மோர் ஆழ் கடல் பிராந்தியத்தை ஆளும் ரெட் பிளஸ்டரை அழிப்பதற்கு கடைசி அவகாசம் கேட்கிறார்கள். அரை மனதாய் அரசி அனுமதிக்கிறாள்.
ரெட் பிளஸ்டர் உடனான மோதலில் தனது ஒரு கண்ணை இழந்து அதனை பழிவாங்குவதற்காக 30 வருடங்களாக காத்திருக்கும் கேப்டன் க்ரோ இம்முறை அதனைக் கொன்று முடிப்பேன் என சபதமேற்கிறான். திமிங்கலமும், காட்ஸில்லாவும் கலந்த தோற்றத்திலான ரெட் பிளஸ்டர் குறித்த பீதியூட்டும் கதைகள் தீவு தேசம் முழுக்க சிதறிக் கிடக்கின்றன. கேப்டன் க்ரோவின் வளர்ப்பு மகனான ஜேகோப்பும், ரெட் பிளஸ்டருக்கு எதிரான போரில் குதிக்கிறான். இன்னொரு திசையிலிருந்து புறப்பட்டு வரும் சிறுமி ஒருத்தி அவர்களின் கடல் சாகசத்தில் வேண்டா விருந்தாளியாக இணைந்து கொள்கிறாள்.
மெய்சியின் பீஸ்ட் கரிசனம்
மெய்சி என்ற அந்த சிறுமியின் பெற்றோர் கடல் வேட்டையர்களாக வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்கள். அதன் பாதிப்பில் கடல் பீஸ்ட் அழித்தொழிப்பு தொடர்பாக நிறைய வாசித்து அறிகிறாள் அந்த சிறுமி. கடல் வேட்டையர்களின் மகளாக பிறந்தபோதும் கடல் பீஸ்டுகளின் மீது இனம்புரியா கரிசனம் மேலிட வளர்கிறாள். குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் மெய்சி அங்கிருந்து தப்பி கொம்பன் சுறா கப்பலில் கேப்டன் க்ரோவின் அபிமானத்தையும், ஜேகோப்பின் அலட்சியத்தையும் சம்பாதிக்கிறாள்.
இம்முறை ட்ரக்மோர் கடலில் கொம்பன் சுறா வேட்டையர்கள் - ரெட் பிளஸ்டர் இடையிலான வாழ்வா சாவா யுத்தம் உக்கிரமாக மூள்கிறது. பிரம்மாண்ட தேகமும் பலமும் கொண்ட ராட்சத பிராணி அசாத்தியமான மூளையும் கொண்டிருக்கிறது. அதன் மோதல் வியூகத்தின் முன்பாக வேட்டையாளர்களின் மதியூகம் முனை முறிகிறது. மோதலின் தீவிர கட்டத்தில் ஜேகோப், சிறுமி மெய்சி இருவரையும் படகோடு சேர்த்து விழுங்குகிறது ரெட் பிளஸ்டர். கொம்பன் சுறாவின் வேட்டையாளர்களுடன் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் ஆழ, அதன் பின்னரான காட்சிகளில் ’கேப்டன் க்ரோவின் சபதம் நிறைவேறியதா, ஜேகோப், மெய்சி இருவரும் உயிர் தப்பினார்களா, கடல் வாழ் பீஸ்டுகளுக்கு எதிரான கற்பிதங்கள் உண்மைதானா’ என்பது போன்ற வினாக்களுக்கு விடை தேடுகிறது ’தி ஸீ பீஸ்ட்’ திரைப்படம்.
குழந்தைகள் விரும்பும் மாயலோகம்
’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, ’ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன்ஸ்’, ’மோனா’ உள்ளிட்ட முந்தைய ஹாலிவுட் திரைப்படங்களின் வீச்சு ஆங்காங்கே தென்பட்ட போதும் ’தி ஸீ பீஸ்ட்’ தனித்துவமான அனிமேஷன் படைப்பாக நிற்கிறது. அதிலும் குழந்தைகள் கொண்டாடும் நீர்-நில பரப்புகள், விநோத விலங்குகள், அதனுடனான சாமானிய மனிதர்களின் மோதல்கள், கௌரவமிக்க மரணத்தை விரும்பும் வேட்டையாளர்கள், குழந்தைகளின் பிரதிநிதியாக வலம் வரும் சிறுமி, பெரியவர்களின் கற்பித உலகிலிருந்து விலகி பரந்த நேசத்துடன் சிந்திக்கும் அவளது தேடல்கள்... உள்ளிட்ட அனிமேஷன் காட்சிகள் குழந்தை மனம் கொண்டவர்களை திரைப்படத்தோடு கட்டிப்போடும்.
பிரம்மாண்ட விலங்கு மனிதர்களுடன் சிநேகம் கொள்வது, இளஞ்சிவப்பு கடற்கரை தீவில் விரியும் வேடிக்கை அனுபவங்கள், அங்கு எதிர்ப்படும் பலூன் உயிரினங்கள், சிறுமியின் செல்லப் பிராணியாகும் ’ப்ளூ’... போன்றவை குழந்தைகளுக்கான மாய உலகை சிருஷ்டிக்கின்றன. திரைப்படத்தின் நிறைவாக சொல்லப்படும் நீதி குழந்தைகளின் முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டது என்ற போதும் அதன் தாக்கம் நிச்சம் நேர்மறையானது.
பீஸ்ட் பேசும் அரசியல்
குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படத்தில், பெரியவர்களுக்காக ’தி ஸீ பீஸ்ட்’ அலசும் அரசியலும் முக்கியமானது. காலம் காலமாய் அரசுகளும் அதிகாரங்களும் தத்தம் பீடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சாமானியர்களை ஆள்வதற்காகவும் கட்டமைத்த கற்பிதங்களை கதை கேள்விக்குள்ளாக்குகிறது. அதிலும், நமக்காக எழுதப்பட்ட நூல்கள், அதில் புனையப்பட்ட கட்டுக்கதைகள், திரிக்கப்பட்ட சரித்திரங்கள் ஆகியவற்றை உடைத்துப் பேசுகிறது. இன்னொரு கோணத்தில், பூமிக் கோளத்தில் நிறைந்திருக்கும் மனிதர் - இதர ஜீவிகள் இடையிலான சமன்பாட்டை எடை போடுகிறது. எல்லோருக்குமான இந்த உலகை மனிதன் தனது சுயநலத்துக்காக சிதைப்பதையும், மற்ற ஜீவராசிகளை நசுக்குவதையும் முகத்திலறைகிறது.
விலங்குகளை வெறுக்க கற்றுத் தருவோர், அவற்றை வேட்டையாட தனி சமூகத்தை உருவாக்குவோர், அந்த வேட்டையர்கள் மற்றும் அவர்களால் கொல்லப்படும் ஜீவன்களின் ரத்தத்தில் ஊறிப் பிழைக்கும் அரசுகள், தங்களது பொய்களை தொடர்ந்து கட்டமைப்பதன் மூலம் தப்பிப் பிழைக்கும் அதிகார வர்க்கம், அந்த பொய்களை உயிரோடு வைத்திருப்தற்காக அரசுகள் செய்யும் மாய்மாலங்கள், பின்னணியில் தொடரும் பேராசைகள் ஆகியவற்றையும் தி ஸீ பீஸ்ட்’ கதை அம்பலப்படுத்துகிறது. இவற்றில் சமூகம், வர்க்கம், வேறுபாடு, அதிகாரம் என பார்வையாளர் தான் நிற்கும் இடத்திலிருந்து தனக்கான அரசியல் அடைவைக் கண்டுகொள்ளலாம்.
நெட்ஃப்ளிக்ஸின் இந்த தனித்துவ அனிமேஷன் திரைப்படத்தை ’பிக் ஹீரோ 6’, ’மோனா’ உள்ளிட்ட அனிமேஷன் படைப்புகளை தந்த கிறிஸ் வில்லியம்ஸ் இயக்கியுள்ளார். ஆங்கில மூலத்துக்கு பின்னணி குரல் தந்திருக்கும் ஹாலிவுட் பிரபலங்களுக்கு நிகராக தமிழ் டப்பிங்கிலும் மெனக்கிட்டு இருக்கிறார்கள்.
மொழிபெயர்ப்புக்காக அலட்டிக்கொள்ளாது உதட்டசைவில் உட்காரும் டப்பிங் பொருந்திச் செல்கிறது. கம்ப்யூட்டர் வரைகலைக்கு பொறுப்பேற்ற ’சோனி பிக்சர்ஸ் இமேஜ் ஒர்க்ஸ்’ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸின் செறிவுக்காக உழைத்திருக்கிறது. குடும்பத்தோடு கண்டுகளிப்பதற்கான அனிமேஷன் திரைப்படம் ’தி ஸீ பீஸ்ட்’!