அடுத்தடுத்த கொலைகளும் ’அந்தாக்சரி’யும்!


நேரடி ஓடிடி வெளியீடாக அண்மையில் வெளியாகி, பரவலாக கவனம் பெற்றிருக்கும் மலையாள திரைப்படம் ’அந்தாக்சரி’. ஓடிடிக்கு உகந்த த்ரில்லர் வகையறாவில் சேரும் அந்தாக்சரியில் அப்படியென்ன சிறப்பு... ஒட்டுமொத்தமாய் படம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவிடுவோமா?

அந்தாக்சரி என்ற தலைப்பு வேண்டுமானால் அந்நியமாக இருக்கலாம். ஆனால், இளம் வயதில் பாட்டுக்குப் பாட்டு என போட்டியிட்டு அந்தாக்சரி பாடாதவர்கள் குறைவு. பாடும் ஒரு தரப்பு எந்த இடத்தில் பாட்டை நிறுத்தும் என்பதும், அதில் நூல் பிடித்து பாடத்தொடங்கும் எதிர்தரப்பு எந்தப் பாடலை பாட வேண்டியிருக்கும் என்பதுமான, அந்தாக்சரியின் எதிர்பார்ப்புக்குரிய சுவாரசியங்கள் ஒரு த்ரில்லருக்கு இணையானவை. அந்தாக்சரி திரைப்படத்திலும் இந்த சுவாரசியம் மற்றும் விறுவிறுப்பு பொருத்தமாய் கலந்திருக்கிறது.

கேதாரம் என்ற சிறுநகரில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தாஸ் ஓர் அலாதியான பேர்வழி. அன்றாடம் காவல் நிலையத்தை நாடும் பொதுஜனங்களின் பிரச்சினையை பேசி தீர்ப்பது முதல், வழக்கு விசாரணை வரை அந்தாக்சரியில் லயித்திருப்பார் தாஸ். முட்டல் மோதலில் பரஸ்பர புகார்களோடு படியேறும் இரு தரப்பினரையும் பாட்டு ஜோதியில் ஐக்கியமாகுமாறு ஆச்சரிய டார்ச்சர் கொடுப்பார். ஒரு பக்கம் அந்தாக்சரி கச்சேரி களைகட்ட, அதனூடாக சுமூகமும், கமுக்கமுமாய் வழக்கு விசாரணையை தீர்த்திருப்பார். ஊர் மக்கள் முதல் உயரதிகாரிகள் வரை கேலிக்கு ஆளானபோதும் இன்ஸ்பெக்டர் தாஸ் தனது அந்தாக்சரி பாணியில் அசருவதில்லை. அலுவலில் மட்டுமல்ல... பிரியத்துக்குரிய மனைவி, மகள் புடைசூழ தாஸ் வீட்டிலும் அந்தாக்சரி கச்சேரி தொடரும்.

அப்படியொரு நாள் வழக்கமான அந்தாக்சரிக்கு மத்தியில் காவல்நிலையத்தில் தாக்கீதான வழக்குகளை தீர்ப்பதில் மும்முரமாகும் இன்ஸ்பெக்டருக்கு அநாமதேய அழைப்பு வருகிறது. எதிர்முனை மர்மக்குரலோன், அலைபேசி வாயிலாக புதிய அந்தாக்சரி ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறான். நிறைவாக இன்ஸ்பெக்டரின் மகள் குறித்த சிறு மிரட்டலுடன் எதிர்முனை துண்டித்துக்கொள்கிறது. அந்த மிரட்டலின்படியே பள்ளியிலிருந்து வீடு திரும்பும் தாஸின் மகள், முகம் மறைத்த ஒரு சைக்கோவின் கொலைத்தாக்குதலுக்கு ஆளாகிறாள். சிறுமியின் தாயும் இந்த கொடூர சம்பவத்தின் நேரடி சாட்சியானதில் தாஸ் குடும்பம் வெலவெலத்துப் போகிறது.

எந்த முகாந்திரமும் இன்றி தனது குடும்பத்தை குறிவைத்த கொலைவெறி அநாமதேயன் குறித்து துப்பறியப் புறப்படும் இன்ஸ்பெக்டரின் பரிதவிப்போடு, பார்வையாளர்களை நிமிர்ந்து அமரச் செய்கிறது அந்தாக்சரி. இன்ஸ்பெக்டரின் துப்பறிதலில் அவர் மகளை கொல்லத்துடிக்கும் மர்ம நபர், அதே பாணியில் தொடர் கொலைகள் வெவ்வேறு ஊர்களில் நடந்தியிருப்பதாக விளங்கப்பெறும் அடுத்தடுத்த காட்சிகள் இருக்கை நுனிக்கும் தள்ளுகின்றன.

ஆரம்ப காட்சியே பரிதவிக்கச் செய்யும் ஒரு கொலைச் சம்பவத்துடன் திரைப்படம் தொடங்கினாலும் அது பெரிதாய் தாக்கம் தராது. ஆனால் ’தன்னுடைய மகளை கொல்ல முயன்ற மர்ம நபர் யார், அவரது பின்னணி என்ன’ என அனுபவமிக்க போலீஸ்காரனின் தீவிரத்தோடு இன்ஸ்பெக்டர் தாஸ் புலனாய்வில் குதிக்கும்போது, திரைக்கதை தீப்பிடிக்கத் தொடங்குகிறது. இந்த த்ரில்லர் கதையில், ’நசுக்கப்படும் குழந்தைமை, காவல்துறையின் அலுவலக அரசியல், சமூகத்தை பீடித்த சாதி - வர்க்க கேடுகள், மனச்சிதைவின் உச்சம்’ என பல்வேறு அம்சங்களை திரைப்படம் தொட்டுத் துலங்கிச் செல்கின்றன. பிரதான கதையுடன் ஒட்டியும் வெட்டியும் பயணிக்கும் இந்த கிளைக்கதைகளால், ’இவரா, அவரா யாரந்த கொலைகாரன்...’ என்ற பரிதவிப்புக்கும் பார்வையாளரை ஆளாக்குகிறார்கள்.

த்ரில்லர் கதைக்கு இசையும், ஒளிப்பதிவும் வித்தியாசமான கூட்டணி அமைத்து மிரட்டி இருக்கின்றன. கதைக்கு பிரதானமான ஃபிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இரண்டின் தாக்கமும் அதிகம். கதையோட்டத்தின் பல அடுக்குகளிலான மறைமுக விவரணைகளிலும் இயக்குநர் விபின் தாஸ் தனித்து நிற்கிறார். ஊர் பெயர், கதாபாத்திரங்களின் பெயர் ஆகியவற்றிலும் இசை மற்றும் பின்னணி பாடகர்களின் பெயர்களை சேர்த்திருப்பது, அவசியமான இடங்களில் வசனங்களை தவிர்த்துவிட்டு காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருப்பது போன்ற சுவாரசியங்களும் இவற்றில் சேரும்.

பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் சைஜு குருப், தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களிலிருந்து அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். அவரை கதையின் நாயகனாக்கி, நாயக பிம்பம் எதனையும் ஊதிப் பெருக்காது இயல்பாக நடமாட விட்டிருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற போதும் ’உயரதிகாரிகளிடம் திட்டு வாங்குவது, கீழ் பணியாற்றும் காவலர்களின் சதாய்ப்புக்கு ஆளாவது, அரசியல் புள்ளியால் வீடு தேடி வந்து மிரட்டப்படுவது, மகளுக்கு ஒன்று என்றதும் கையாலாகாத நிலையில் துடித்துப் போவது, எதிராளியிடம் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது பலத்த காயமடைவது’ என அலட்டிக்கொள்ளாத பாத்திர சித்தரிப்பை தெளிவாக வெளிப்படுத்துகிறார் சைஜூ குரூப்.

வழக்கமாக த்ரில்லர் கதையின் போக்கில் குற்றவாளியை ஊகிக்க வாய்ப்பில்லாது காட்சிகளை அடுக்குவதில் படக்குழுவின் திறமை பளிச்சிடும். அந்தாக்சரியில் அதற்கான முயற்சியில் ‘கிளைக் கதைகள் அதீதமாகவும், உரிய முடிவின்றி அந்தரத்தில் விடப்பட்டதாகவும்’ புலப்படுகின்றன. பிரதான கதையில் ஓட்டத்தை சிதறடிக்கும், முழுமையும் முடிவுமற்ற அந்தக் கிளைக்கதைகளுக்கு அத்தனை அழுத்தம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. வர்க்கம் அளவுக்கு சாதிக் கட்டமைப்பின் புரிதலில் சேட்டன்களுக்கே உரிய போதாமை இந்த படத்திலும் வெளிப்படுகிறது.

மலையாள அந்தாக்சரியை தமிழ் டப்பிங்கிலும் காண வழி செய்திருக்கிறார்கள். ஆனால், மலையாள அந்தாக்சரியில் அருமையான மலையாளப் பாடல்கள் இடம்பெறும் இடங்களில் எல்லாம், ஒருவாறாக தமிழில் ஒப்பேற்றி வைத்திருக்கிறார்கள். நல்வாய்ப்பாக தமிழ் ரசிகர்களின் இந்த ஏக்கம் பிற்பாடு க்ளைமாக்ஸில் நேர்செய்தும் விடுகிறார்கள். தமிழ் டப்பிங் சில இடங்களில் தகராறு செய்வதால், மலையாள பதிப்பில் ஆங்கில சப்டைட்டிலுடன் அந்தாக்சரியை பார்ப்பது திரை ரசனையை முழுமையாக்கும்.

பிரியங்கா நாயர், கோட்டயம் ரமேஷ், விஜய் பாபு உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். மேலடுக்கில் த்ரில்லரும், ஆழத்தில் உணர்வுபூர்வமான குழந்தை வளர்ப்பு அக்கறையையும் பரிமாறும் அந்தாக்சரி முழுமையான பொழுதுபோக்குக்கு உத்திரவாதமளிக்கிறது.

x