ஓடிடி உலா: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


ஓ மை டாக்: தமிழ் திரைப்படம்

கோடை விடுமுறைக்கான குழந்தைகளின் பொழுதுபோக்கு வரிசையில் சேர்ந்திருக்கிறது, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘ஓ மை டாக்’ (Oh My Dog) திரைப்படம். ஊட்டியில் நடைபெறும் வளர்ப்பு நாய்களுக்கான போட்டிக்காக ரகம்ரகமான வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் கோடீஸ்வரர், பார்வையற்ற நாய்க்குட்டி ஒன்றைக் கொல்ல உத்தரவிடுகிறார். அங்கிருந்து தப்பும் அந்த ஜீவன் ஒரு பள்ளிச் சிறுவன் கையில் அடைக்கலமாகிறது. அன்பாலும், அரவணைப்பாலும் நாய்குட்டியை அதன் குறைபாட்டிலிருந்து மீட்க முயல்கிறான் சிறுவன். இருவருமாக சேர்ந்து வளர்ப்பு நாய்களுக்கான போட்டியில் கோடீஸ்வரனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே ’ஓ மை டாக்’ கதை.

ஓ மை டாக்

சிறுவன் அர்னவ் மற்றும் ’சிம்பா’ என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டி ஆகியோரே கதையின் நாயகர்கள். அர்னவின் தந்தை அருண் விஜய், தாத்தா விஜய்குமார் ஆகியோர் படத்திலும் அதே உறவில் வருகிறார்கள். கலைக்குடும்பத்து வாரிசு அறிமுகத்துக்காக இந்த தந்தையும், தாத்தாவும் அடக்கி வாசிக்கிறார்கள். குழந்தைகளுக்கான திரைப்படத்தில் நாயகி மகிமா நம்பியார் மட்டுமன்றி வில்லனாக வரும் வினய்க்கும் பெரிதாக வேலையில்லை. மனிதரில் மட்டுமன்றி மாற்றுத்திறனாளியாகும் பிராணியிடமும் நேசம் பேணுவது, குழந்தை வளர்ப்பில் எழும் சிக்கல்கள் என களமாடுவதற்கான வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தபோதும் அதற்கான சுவாரசியங்களின்றி திரைப்படம் செல்கிறது. ஜோதிகா -சூர்யா தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்திலான ’ஓ மை டாக்’ வயதிலும், மனதிலும் குழந்தைமை நிரம்பியவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை நேசிப்போர் விரும்பி ரசிப்பதற்கானது.

அனந்தம்: தமிழ் வலைத்தொடர்

வீடு எனப்படுவது பிரியங்கள் சமைக்கும் கூடு. கூடவே அதில் வாழும் மனிதர்களின் ஏராளமான அந்தரங்க கதைகள் கலந்தது. அங்கு வாழும் உறவுகள் மத்தியில் ஒளிந்திருக்கும் சங்கடங்கள், சண்டைகள், சோகங்கள், சமாதானங்கள், சந்தோஷங்கள் மற்றும் அமானுஷ்யங்களையும் வீட்டின் நான்கு சுவர்கள் ரகசியம் காக்கின்றன.

அனந்தம்

அப்படியொரு வீட்டில் வசிக்கத் தலைப்பட்ட வெவ்வேறு தலைமுறை மனிதர்கள், அந்த வீட்டுக்கான விருந்தாளிகள், குடியேறும் வேற்று மனிதர்கள் எனப் பலரது பின்னணிகளையும் நவரசங்கள் கலந்து பரிமாறுகிறது ’அனந்தம்’ வலைத்தொடர். பிரகாஷ் ராஜ், வி.ப்ரியா, சம்பத், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அனந்தம் வலைத்தொடரை வி.ப்ரியா இயக்கியுள்ளார். தலா 45 நிமிடங்களுக்கு நீளும் 8 அத்தியாயங்களுடனான இந்த வலைத்தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.

கேஸ்லிட்: அமெரிக்க ஆந்தாலஜி தொடர்

எழுபதுகளில் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர் கேட் ஊழலின் பின்னணியை அதன் மறைக்கப்பட்ட கோணங்களின் வழியாக அணுக முயற்சிக்கிறது ’கேஸ்லிட்’ (Gaslit) என்ற ஆந்தாலஜி தொடர். அப்போது அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸனின் நம்பிக்கைக்கு உரியவர்களான வெள்ளை மாளிகை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், ஊழல் விவகாரத்தை அம்பலப்படுத்திய விசிலூதிகள் உள்ளிட்டோரின் பார்வையில் வாட்டர் கேட் ஊழல் விவகாரத்தை இந்த ஆந்தாலஜி ஆராய்கிறது.

கேஸ்லிட்

இவர்களில் நிக்ஸனின் முக்கிய விசுவாசியான அட்டர்னி ஜெனரல் ஜான் மிச்செலாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ஆவணப்படுத்தியதில் அண்மையில் பிரபலமான சீன் பென் நடித்துள்ளார். இவரது மனைவி மார்தா மிச்செல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜூலியா ராபர்ட்ஸ் தயாரிப்பிலும் இணைந்துள்ளார். ஏப்ரல் 22 அன்று தொடங்கி வாரம் ஓர் அத்தியாயமாக இந்த ஆந்தாலஜி தொடர் வெளியாக உள்ளது. அரசியல் த்ரில்லரான கேஸ்லிட், லயன்ஸ் பிளே தளத்தில் வெளியாகி உள்ளது.

அந்தாக்சரி: மலையாள திரைப்படம்

தனது காவல் நிலையத்தில் அவ்வப்போது ‘அந்தாக்சரி’ முறையில் பாடல் போட்டி நடத்துவதில் பிரபலமான ஓர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை, அந்த அந்தாக்சரி அடிப்படையிலே மர்மங்கள் துரத்த ஆரம்பிக்கின்றன. சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நீளும் அந்த புதிர்களையும் அதன் பின்னே இருப்பவர்களையும் அந்த காவல் அதிகாரி ஆராய்கிறார். சைக்கோ த்ரில்லரில் தொடரும் கதையை நான் லீனியரில் முன் வைக்கிறது அந்தாக்சரி (Antakshari) திரைப்படம்.

அந்தாக்சரி

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் வலம்வந்த சைஜு குருப், இந்த திரைப்படத்தின் பிரதான பாத்திரத்தில் பொருந்துகிறார். பிரியங்கா நாயர் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் திரைப்படத்தை விபின் தாஸ் இயக்கி உள்ளார். சோனி லிவ் தளத்தில் இந்த மலையாள த்ரில்லரை தமிழிலும் ரசிக்கலாம்.

இதர ஓடிடி படைப்புகள்

லண்டனில் இயங்கும் பிரபல இந்திய ஊடக அதிபரின் மகள் திடீரென்று காணாது போகிறாள். இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் புலனாய்வு மேற்கொள்ள நியமிக்கப்படும் டிடெக்டிவ் விசாரணையின் வளையத்தில் ஊடக அதிபர் உள்ளிட்ட பலர் மீது சந்தேகங்கள் எழுகின்றன. இந்த புலனாய்வின் இறுதியில் கண்டடையப்படும் அதிர்ச்சிகரமே ’லண்டன் ஃபைல்ஸ்’ என்ற இந்தி வலைத்தொடராக, வூட் செலக்ட் தளத்தில் வெளியாகி உள்ளது.

கில்டி மைண்ட்ஸ்

‘கில்டி மைண்ட்ஸ்’ (Guilty Minds) என்ற இந்தி கோர்ட் ரூம் டிராமா அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. 10 அத்தியாங்களுடன் மொத்தமாய் நான்கரை மணி நேரத்துக்கு நீளும் இந்த படைப்பு, வலைத்தொடர் ரசிகர்களுக்கானது. கேத் வின்ஸ்லெட்டின் விவரணைக் குரலுடன், மற்றுமொரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆவணப்படமான ‘Eating Our Way to Extinction’ அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

ரஷ்யன் டால் 2

’டாக்ஸி டிரைவர்’ என்ற கொரியன் ஆக்‌ஷன் த்ரில்லர், கால வளையத்தில் சிக்கிக்கொள்ளும் காமெடி கதையான ’Russian Doll 2’, ஆங்கில அறிவியல் புனைவான ’The Sandman’, துருக்கிய சஸ்பென்ஸ் ரகமான ‘Yakamoz S-245’ மற்றும் ‘The Marked Heart’ என்ற ஸ்பானிஷ் மர்மத் தொடர் ஆகியவை நெட்ஃப்ளிக்ஸின் வலைத்தொடர் ரசிகர்களுக்கானவை.

திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு

காஃப்கா புதினம் ஒன்றின் தழுவலாகவும் தமிழில் அரிதான மாய யதார்த்த படைப்பாகவும், அண்மையில் வெளியான ‘குதிரை வால்’ திரைப்படத்தை தற்போது நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

குதிரை வால்

மன்மதலீலை

தெலுங்கு ஸ்போர்ட்ஸ் டிராமாவான ’கானி’ (Ghani), திரையரங்கில் வெளியான இரண்டே வாரத்தில் 'ஆஹா' தளத்தில் அடைக்கலமாகி உள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக்செல்வன், ஸ்மிருதி வெங்கட் நடித்த ‘மன்மத லீலை’ திரைப்படமும் ஆஹா தளத்தில் வெளியாகி உள்ளது.

x