கார்மேகம் – தமிழ்/தெலுங்கு வலைத்தொடர்
தேனிலவு முடிந்து வீடு திரும்பும் புதுமண ஜோடி கொடூரமாக கொல்லப்பட, இருவீட்டாரும் துடித்துப் போகிறார்கள். தொடரும் தினமொன்றில் கொலையாளியாக சந்தேகிக்கப்படும் ஒருவன் படுகாயங்களுடன் அவர்கள் வீட்டு வாசலை அண்டுகிறான். அவன்தான் நிஜமான கொலையாளியா, புதுமண ஜோடி கொல்லப்பட்டதன் உண்மையான பின்னணி என்ன, இருவீட்டார் மத்தியில் புதைந்திருக்கும் மர்மம் எது... என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் ’கார்மேகம்’ வலைத்தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடுபடுகின்றன.
ராதிகா, சாய் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ’ஜீ5’ தெலுங்கு தொடர், தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. ராதிகா உள்ளிட்ட பலரின் சொந்தக் குரல் தமிழ் டப்பிங்கில் விடுபட்டிருப்பது துறுத்தலான போதும், த்ரிஷ்யம்/பாபநாசம் கதை பாணியிலான வலைத்தொடரின் விறுவிறுப்பு கட்டிப்போடுகிறது. ‘பிபிசி’யின் ’ஒன் ஆஃப் அஸ்’ (One of Us) என்ற பிரபலமான தொடரின் ரீமேக் என்ற வகையிலும் இந்த வலைத்தொடர் கவனம் பெறுகிறது. ஒன் ஆஃப் அஸ் ஒரிஜினல் தொடரை பிபிசி ஒன் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களில் காணலாம்.
மாய்: இந்தி க்ரைம் வலைத்தொடர்
தன்னுடைய குடும்பம், பராமரிப்புக்குரிய உறவினர் குடும்பம், பணிபுரியும் முதியோர் இல்லம் என பம்பரமாகச் சுழலும் நடுத்தர வயது தாயின் வாழ்க்கையில் எதிர்பாரா சோகம் நிகழ்கிறது. அவர் கண் முன்பாகவே ஆசை மகள் விபத்தின் பெயரால் கொல்லப்படுகிறாள். அப்பாவி தாயும் அதனை விபத்தாகவே ஆரம்பத்தில் கருதுகிறாள். போலீஸார் முதல் கோர்ட் அப்படித்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், நிகழ்ந்தது கொலை என அறியவரும்போது, சாமானிய குடும்பத்தின் 47 வயது தாய் சினந்து எழுகிறாள்.
மகளின் கொலைக்குப் பின்னிருக்கும் நிழலுலக குற்றவாளிகள், கறைபடிந்த அரசியல்வாதிகள் என சகலத்தாருடனும் மோதுகிறாள். இதில் புதிய குற்ற வரலாறு பிடிபட, மகளின் சாவுக்கு நீதி கேட்ட தாயின் ஆவேச புறப்பாடு அதன்பின்னர் என்னவானது என்பதே ’மாய்’ வலைத்தொடரின் கதை. கிளைக்கதைகள் அலுப்பூட்டினாலும், பாசத் தாயாக தோன்றும் சாக்ஷி தன்வர் உள்ளிட்ட சிலரின் நடிப்பில் வலைத்தொடர் கட்டிப்போடுகிறது. 6 அத்தியாயங்களில் நீளும் ’மாய்’ வலைத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
ப்ளடி மேரி – தெலுங்கு த்ரில்லர் திரைப்படம்
ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் மூவர் வளர்ந்த பிறகும் ஒன்றிணைந்து தங்கள் கனவுகளைத் துரத்த முயல்கின்றனர். இவர்களில் இருவர் மாற்றுத்திறனாளிகள். ஒருத்தி முற்றிலும் புதிரானவள். இந்த மூவரும் அடுத்தடுத்து நிகழும் 2 கொலைகளின் நேரடி சாட்சிகளாகின்றனர். மூவரையும் நெருக்கும் போலீஸ் விசாரணை, திறக்கும் மர்ம மறுபக்கம் என பரபரப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது ‘ப்ளடி மேரி’ திரைப்படம்.
நிகழ்காலத்து குற்றச் சம்பவங்களுக்கும் இந்த மூவரின் கடந்தகாலத்தின் பால்யத்துக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்ணிகளாக இணைத்து க்ரைம் கதை நகர்கிறது. ஓடிடி இலக்கணத்துக்கு ஏற்ப த்ரில்லர் காட்சிகளை வடித்திருக்கும் ’ப்ளடி மேரி’ மூலமாக நிவேதா பெத்துராஜ் தனது நேரடி ஓடிடி கணக்கை தொடங்கி இருக்கிறார். ஆஹா தளத்தில் ’ப்ளடி மேரி’யை தரிசிக்கலாம்.
அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்: சூழியல் ஆவணத்தொடர்
அமெரிக்க முன்னாள் அதிபரான ஒபாமா, ஓவர் நைட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலராகிவிடவில்லை. டேவிட் அட்டன்பரோ பாணியில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருக்கும் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ (Our Great National Parks) என்ற சூழியல் ஆவணத் தொடரை தயாரித்து, அதில் அக்கறை பொங்கும் தனது பின்னணிக் குரலை வழங்கியதில் இதனை உணர வைத்திருக்கிறார். புளூ பிளானட் தொடரின் வரிசையில், உலகின் 5 கண்டங்களில் விரவிக் கிடக்கும் தேசிய பூங்காக்களையும் அதில் தப்பிப்பிழைத்திருக்கும் அரிய உரியினங்களையும் அடையாளம் காட்டுகிறார்.
உயிரின சுழற்சியில் மகத்தான பங்காற்றும் இந்த உயிரினங்களின் இருப்பை, கண்ணில் ஒற்றிக்கொள்ளும் தரமான ஒளிப்பதிவுடன் நெட்ஃப்ளிக்ஸ் பதிவு செய்திருக்கிறது. அட்டன்பரோ அளவுக்கு இல்லை என்றாலும், குறையின்றி வளையவருகிறது பராக் ஒபாமாவின் பரிவான குரல். கலிஃபோர்னியாவின் மான்டரி வளைகுடாவில் தொடங்கி, கென்யாவின் சாவோ தேசிய பூங்கா, இந்தோனேஷியாவின் குனங்க் பூங்கா, சிலியனின் மலைக்குன்றுகள் என்று பிரதான சூழியல் தலங்களை அங்கு வாழும் உயிரினங்களின் வாழ்வியலோடு பதிவு செய்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸின் இந்த ஆவணத்தொடர்.
இதர ஓடிடி படைப்புகள்
அறிவியல் புனைவும், அமானுஷ்யமும் கலந்த ’அவுட்டர் ரேஞ்ச்’ (Outer Range) வலைத்தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. ராம்கோபால் வர்மாவின் வழக்கமான பழிவாங்கல் கதை, ’தகனம்’ என்ற தலைப்பிலான வலைத்தொடராக, ’எம்எக்ஸ் பிளேயர்’ தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.
’தி கார்தஷியன்ஸ்’ (The Kardashians) என்ற தலைப்பில், சர்வதேச மாடல்களான கார்தஷியன் சகோதரிகளின் குடும்பம், வணிகம், வருமானம், பொழுதுபோக்கு என சுவாரசியமான தகவல்களைத் தொடராக வெளியிட்டுள்ளது டிஸ்னி+ஹாட்ஸ்டார். பெருந்தொற்று பரவல் பின்னணியில் பயமுறுத்தும் கொரியன் தொடரான ‘ஹேப்பினஸ்’ (Happiness), நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
திரையரங்கிலிருந்து ஓடிடிக்கு
தமிழில் வெளியான ‘ஜிகர்தண்டா’, அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக்கான ‘பச்சன் பாண்டே’ மற்றும் ஃபீல் குட் வரிசையில் மலையாளத்தில் வெளியான ‘வெயில்’ ஆகிய திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம். அகதா கிறிஸ்டியின் ’டெத் ஆன் தி நைல்’ புதினம், அதே தலைப்பில் ஹாலிவுட்டில் சினிமாவாகி வசூலிலும் வாரிக் குவித்ததை, தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ரசிக்கலாம்.
ராஷ்மிகா மந்தனா, சர்வானந்த், ராதிகா, குஷ்பு என பெரும் நடிகர் பட்டாளம் நடித்த கலகல ஃபேமிலி டிராமாவான ’ஆடவல்லு மீக்கு ஜோஹர்லு’ தெலுங்கு திரைப்படம் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. மறைந்த புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ’ஜேம்ஸ்’ கன்னட திரைப்படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம்.
ஜி.வி.பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்த ’செல்ஃபி’ தமிழ் ஆக்ஷன் த்ரில்லரை ’ஆஹா’ தளத்திலும், சதீஷ், பவித்ரா நடித்த ’நாய் சேகர்’ நகைச்சுவை திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் தளத்திலும் காணலாம். அஸ்வின் குமார், தேஜஸ்வனி, அவந்திகா நடித்த காதல்-காமெடியான ‘என்ன சொல்லப் போகிறாய்?’ திரைப்படம் ’ஜீ5’ தளத்தில் சேர்ந்துள்ளது.