கோபால்ட் ப்ளூ: இந்தி/மலையாள திரைப்படம்
ஆதி ஈர்ப்பான காதலில் பேதம் ஏது? தன்பாலீர்ப்பாளர்களின் காதலைfககொண்டாடத் தொடங்கிய கலையுலகத்தில், அதிகம் பேசப்படாத இருபாலீர்ப்பு குறித்து ‘கோபால்ட் ப்ளூ’ (cobalt blue) பேசுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் குந்தல்கர் என்பவர் எழுதி விவாதத்துக்கு ஆளான, இதே தலைப்பிலான மராத்தி நாவலை மையமாகக் கொண்டு ‘கோபால்ட் ப்ளூ’ உருவாகி உள்ளது. கேரளத்தில் குடிபுகும் குடும்பத்தின் விருந்தினராக இணையும் இளைஞனுக்கு அக்குடும்பத்தின் அண்ணன், தங்கை இருவரிடத்தும் காதல் பிறப்பதும், அதையொட்டி தவிர்க்க முடியாத சம்பவங்களால் எழும் பிரச்சினைகளுமே கதை.
பிரதான மூன்று கதாபாத்திரங்களையும் அவரவர் பார்வையில் இருந்து பதிவு செய்த வகையிலும், இயற்கையின் மற்றுமொரு பாலீர்ப்பு குறித்து பேசியதிலும் ‘கோபால்ட் ப்ளூ’ தனித்து நிற்கிறது. பிரதீக் பாபர், நீலய் மகந்தேல், அஞ்சலி சிவராமன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
ஷர்மாஜி நம்கீன் - இந்தி திரைப்படம்
பணியிலிருந்து ஒருவர் ஓய்வு பெற்று வீடு திரும்புவதை சகலத்திலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவரது வீடும், சமூகமும் கருதுகிறது. அதுவரை சதா உழைத்துப் பழகியவரை நான்கு சுவர்களுக்குள் முடக்க முடியுமா? அப்படி முதிய வயதில் தனது இதயத்தைப் பின்தொடரும் முதியவர் ஒருவர், வாழ்க்கையின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக தொடங்குகிறார். தன்னையும் தனது விருப்பத்துக்குரிய தொழில் முயற்சிகளையும் எதிர்மறையாக அணுகும் குடும்பத்தினருடன் இதற்காக அவர் போராடவும் வேண்டியதாகிறது.
‘ஷர்மாஜி நம்கீன்’ (sharmaji namkeen) என்ற இந்த திரைப்படத்தின் கதை நாயகராக பாலிவுட்டின் சீனியர்களில் ஒருவரான ரிஷி கபூர் நடித்துள்ளார். பாதி படப்பிடிப்பில் ரிஷி கபூர் இறந்துவிட, விடுபட்ட காட்சிகளில் பரேஸ் ராவல் நடித்துள்ளார். அந்த வகையில் ரிஷி கபூரின் கடைசி திரைப்படமாகவும் ஷர்மாஜி நம்கீன் மாறியுள்ளது. குடும்ப அமைப்பில் குழந்தைகளின் உரிமை பேசும் திரைப்படங்களின் மத்தியில், அரிதான முதியோர் உரிமை பேசும் திரைப்படங்களில் இதுவும் சேர்ந்திருக்கிறது. ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் உடன் நடித்துள்ள கலகலப்பான இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
கௌன் பிரவீன் தாம்பே? இந்தி திரைப்படம்
முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் முப்பதின் இறுதியில் ஓய்வு பெறும் கிரிக்கெட் உலகத்தில், நாற்பதின் தொடக்கத்தில் தனது களமாடலைத் தொடங்கியவர் பிரவீன் தாம்பே. ராஞ்சியில் தொடங்கிய தாம்பேவின் கிரிக்கெட் கனவு ஐபிஎல் வாயிலாக நனவானபோது அவருக்கு வயது 41. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் சில காரணங்களால் இழந்திருக்கிறார். நாற்பதுகளின் மத்தியில் அவர் மைதானத்தில் சுழன்றதைப் பார்த்து வியந்த மக்களுக்கு, அதுவரை தாம்பே மேற்கொண்ட பயணத்தையும் விவரிக்கிறது.
வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பது மட்டுமல்ல, மனந்தளராத முயற்சிகளின் மகத்துவம் என்பதை விவரிக்கிறது இந்த சுயசரிதை திரைப்படம். பொழுதுபோக்குக்கு அப்பால் சுயமுன்னேற்ற படைப்பாகவும், நேரத்தை பயனுள்ளதாக்க உதவும் ’கௌன் பிரவீன் தாம்பே’ (Kaun Pravin Tambe?) திரைப்படத்தை, டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தரிசிக்கலாம்.
மூன் நைட்- ஹாலிவுட் வலைத்தொடர்
மார்வெல் நட்சத்திரங்கள் தனியாவர்த்தனமாய் சாகச அவதாரமெடுப்பதன் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது ’மூன் நைட்’ (Moon Knight). இந்த வலைத்தொடரின் முதல் பாகத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தற்போது காணலாம். மார்ச் 30 தொடங்கி மே 6 வரை வாரம் ஒன்றாக இதன் 6 அத்தியாயங்கள் வெளியாகின்றன.
வாழ்க்கையின் இயல்புக்கும் கனவுக்கும் இடையே மல்டபிள் பர்சனாலிட்டியில் ஊடாடும் சாமானியன் வழக்கம்போல விஷேச சக்திகளுடன் விற்பன்னன் ஆவதே கதை. சாகசங்களுக்கு முந்தைய சாமானியனின் தடுமாற்றங்களும், போராட்டங்களுமே முதல் பாகத்தில் அதிகம் ஆக்கிரமித்துள்ளது. காமிக்ஸ் கதையாகவும், அனிமேஷன் படைப்பாகவும் வெளியாகி உள்ள இந்த கதையை தற்போது வலைத்தொடராகவும் வெளியிட்டுள்ளது மார்வெல்.
இந்த வாரத்தின் இதர படைப்புகள்
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, திரை வெளியீட்டில் பெரிதாக சோபிக்காத ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம். பிரம்மாண்டம் மற்றும் தொழில்நுட்ப மிரட்டலான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை அதன் இசை மற்றும் ஒளிப்பதிவுக்காகவும் ரசிக்கலாம். மலையாளத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான மம்மூட்டியின் ’பீஷ்ம பர்வம்’ த்ரில்லர் திரைப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தமிழிலும் பார்க்கலாம். முன்னாள் தாதாவாக இருந்தவனின் தற்போதைய அமைதியான வாழ்க்கையைக் குலைக்கும் முயற்சிகள் எழுகின்றன. அவற்றை எதிர்கொள்ள மீண்டும் அவன் பழைய முகம் தரிப்பதை திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறது ‘பீஷ்ம பர்வதம்.’
தொண்ணூறுகளின் மத்தியில் கேரளத்தில் நில உரிமைக்காக 4 இளைஞர்கள் நடத்திய முன்னுதாரண போராட்டத்தை சுவாரசியமாக பதிவு செய்திருக்கும் ‘படா’ (PADA) திரைப்படத்தை அமேசானில் பார்க்கலாம். ‘ஜெய் பீம்’ பாணியிலான இதன் கதையும், போராட்டக் களங்களும் திரைப்படத்தை கவனிக்க வைத்திருக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்த ‘ஹே சினாமிகா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. ’எ பாய்ஃபிரண்ட் ஆஃப் மை லைப்’ என்ற சுவாரசியமான அர்ஜென்டினா திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களில் பால் மாற்றம் செய்து உருவான ’ஹே சினாமிகா’, துல்கரின் தனித்துவ கதாபாத்திரத்துக்காகவும் கவனம் பெற்றிருக்கிறது.
மலையாள மண்ணுக்கே உரிய அரசியல் கதையாக ’மெம்பர் ரமேஷன் 9-ம் வார்டு’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. அரசியல், எதார்த்தம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக இந்த திரைப்படம் கவனம் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் இளவரசியாக இங்கிலாந்து மக்களின் மனதில் வாழ்பவர் டயானா. மணமுறிவு மற்றும் அரண்மனையுடனான பிணக்கு ஆகியவற்றை ஒட்டி டயானாவின் விறுவிறுப்பான வாழ்க்கையை, உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கும் ’ஸ்பென்சர்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.