ஓடிடி உலகம்: இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


சல்யூட்: மலையாள த்ரில்லர் திரைப்படம்

பிருத்விராஜ், ஜெயசூர்யா நடிப்பில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மும்பை போலீஸ்’ என்ற தரமான த்ரில்லரை தந்த குழு, இம்முறை ’சல்யூட்’ என்ற திரைப்படத்தின் மூலம் துல்கர் சல்மானுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது. கதையின் தொடக்கத்தில் அரங்கேறும் மர்மக் கொலையில் அப்பாவி ஒருவர் கொலையாளியாக சித்தரித்து வளைக்கப்படுகிறார். அவரை விடுவிக்கும் காவல் உயரதிகாரி, புலனாய்வு புலியான இளம் அதிகாரி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். அவர் எப்படி வழக்கை துப்புத் துலக்குகிறார் என்பதே கதை.

சல்யூட்

போலீஸ் புலனாய்வு கதைகளில் சற்று வித்தியாசமாகவும், காக்கி உடுப்புகளின் விறைப்புக்கு நெருக்கமாகவும் உருவாகி இருக்கிறது சல்யூட் திரைப்படம். ‘மும்பை போலீஸ்’ அளவுக்கு திரைக்கதையின் செறிவும், க்ளைமேக்ஸ் திருப்பமும் இதில் இல்லை என்றபோதும், த்ரில்லர் கதைகளுக்கே உரிய பின்னணி இசையும், ஒளிப்பதிவும் வலு சேர்க்கின்றன. துல்கர் சல்மான், மனோஜ் கே ஜெயன் என இருவரும் பிரதான போலீஸ் கதாபாத்திரங்களில் வரும் காட்சி தோறும் தெறிக்கும் விறுவிறுப்பு சுவாரசியம் கூட்டுகிறது. ஆங்கில சப்டைட்டில் மற்றும் தமிழ் மொழியாக்கத்துடன் சோனி லிவ் தளத்தில் ’சல்யூட்’ திரைப்படத்தை காணலாம்.

டீப் வாட்டர் - சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்

ஏகபோக வசதிகள் வாழ்க்கை, அழகான குடும்பம் என நிறைவான வாழ்க்கையில் திளைப்பதாக கருதியிருந்த கணவன், மனைவியின் விசித்திர போக்கால் இடிந்து போகிறான். கணவன் அலுத்துப்போனதாக சலித்துக்கொள்கிறாள் மனைவி. அவள் எதிர்பார்க்கும் விவாகரத்தினை தவிர்ப்பதற்காக, விரும்பும் ஆண்களுடன் மனைவியை நெருங்கிப் பழக அனுமதிக்கும் விநோத முடிவை எடுக்கிறான் கணவன். அப்படி அவளுடன் நெருங்கும் ஆண்களை விபரீதங்கள் துரத்துவது தொடர்கதையாக, அதன் பழி கணவன் மீது விழுகிறது. இதில் தொடங்கி கணவன் - மனைவி இடையிலான மனோதத்துவ யுத்தங்கள் பல கட்டங்களில் உச்சம் பெறுகின்றன.

டீப் வாட்டர்

80 மற்றும் 90-களில் பிரபல எரோடிக் - ரொமான்டிக் வகையறா திரைப்படங்களை இயக்கிய ஏட்ரியன் லைன் தனது 80 வயதில் இயக்கியிருக்கும் மற்றுமொரு 18+ திரைப்படம் இது. பென் அஃப்லெக் உடன் ஜோடி சேர்ந்திருக்கும், க்யூபா- ஸ்பானிஷ் அழகு கலவையான அனா டி ஆர்மஸின் இளமையும், டீப் வாட்டர் (Deep Water) திரைப்படத்தின் ஈர்ப்புகளில் சேரும். அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

ஜல்சா - இந்தி த்ரில்லர் திரைப்படம்

கணவனைப் பிரிந்து, மகன் மற்றும் வயதான தாயுடன் வாழும் பிரபல பெண் பத்திரிகையாளர் மாயா. இவரது மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பவராகவும், வீட்டு சமையலராகவும் இருக்கும் ருக்சனா என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஒரு விபரீதம் குறுக்கிடுகிறது. ருக்சனாவின் 18 வயது மகள் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபரின் கார் மோதி பலியாகிறாள். இதனையடுத்து, மாயா - ருக்சனா என்ற 2 பெண்கள் இடையே தங்கள் பாதையில் மண்டும் ரகசியங்களையும், தலையெடுக்கும் பொய்களையும் தடுமாறி எதிர்கொள்கின்றனர்.

ஜல்சா

வித்யா பாலன் - ஷெஃபாலி ஷா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜல்சா (Jalsa) திரைப்படம், இருவரின் நடிப்புக்காகவே கவனம் பெறுகிறது. பெண்மையக் கதையோட்டம், வீரியமான நடிகர்கள் என இந்த த்ரில்லர் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுக்கு நியாயம் சேர்த்திருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

லலிதம் சுந்தரம்: மலையாள காமெடி திரைப்படம்

உறவின் மேன்மையை உணராது தத்தம் பாதையில் பிரிந்து கிடந்த சகோதர சகோதரிகள், தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது நினைவு நாளில் ஒன்று கூடுகிறார்கள். அப்போது எழும் சிக்கல்களை ஒருசேர சமாளிக்கும் முயற்சியில் குடும்பம் என்ற அமைப்பின் அருமையையும், உறவுகளின் உன்னதத்தையும் உணர்கிறார்கள். அதன் பின்னர் கண்கள் பனிக்க, இதயம் இனிக்க ஒரு தாய், பிள்ளைகளின் காமெடி உற்சவமாக தொடர்கிறது லலிதம் சுந்தரம் திரைப்படத்தின் கதை.

லலிதம் சுந்தரம்

அறிந்த கதை, ஊகிக்கக் கூடிய திருப்பங்கள், சாமானிய காட்சிகள் என மிக இயல்பான திரைப்படத்தில் கனமான செய்தியை சொல்லும், வழக்கமான கலகலப்பான மலையாளத் திரைப்படங்களின் வரிசையில் லலிதம் சுந்தரமும் சேர்கிறது. மஞ்சு வாரியர், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை மஞ்சு வாரியரின் அண்ணன் மது வாரியர் அறிமுக இயக்கம் செய்திருக்கிறார். குடும்பத்தோடு சேர்ந்து ரசிப்பதற்கான ’ஃபீல் குட்’ படங்களின் வரிசையில் சேரும் லலிதம் சுந்தரம் திரைப்படம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த வாரத்தின் இதர ஓடிடி படைப்புகள்

’பிளடி பிரதர்ஸ்’ என்ற டார்க் காமெடி இந்தி வலைத்தொடரின் முதல் சீஸனை ஜீ5 தளத்தில் காணலாம். ’ஜஹான்’(Jahaan) என்ற இந்தி காதல் குறும்படம் அமேசான் வர்த்தக செயலியில் உள்ளடங்கிய அமேசான் மினி டிவியில் வெளியாகி இருக்கிறது. பெல்ஜியம் வாழ் இஸ்லாமியரின் வாழ்வியல் பின்னணியிலான விநோத வழக்கத்தை பதிவு செய்யும் ’சாயில்’ (Soil) என்ற காமெடி வலைத்தொடர் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்றை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியூட்டும் திரைப்படமான ’ரெஸ்க்யூட் பை ரூபி’ (Rescued by Ruby) என்ற ஆங்கில திரைப்படம் ஆகியவற்றை நெட் ஃப்ளிக்ஸில் காணலாம்.

ரெஸ்க்யூட் பை ரூபி

தனிமை விரும்பியும், தயக்க சொரூபியுமான இளைஞன் ஒருவனுக்கு, காதலில் வெல்ல மாயசக்தி வழிகாட்டும் காமெடியும் கலந்த Eternally Confused And Eager For Love என்ற இந்தி வலைத்தொடர் மற்றும் விண்ட்ஃபால் (Windfall) என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆகியவற்றையும் நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

மோர் தென் ரோபாட்ஸ்

பெருந்தொற்றுப் பரவலின் மத்தியில் சர்வதேச அளவிலான எந்திரன்களை உருவாக்கும் போட்டியில் பங்கேற்கும், பதின்ம வயது மாணவர்களின் சவால்களையும், சாதனைகளையும் பதிவு செய்த ’மோர் தென் ரோபாட்ஸ்’ (More Than Robots) என்ற ஆவணப் படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். தங்களது மற்றும் தத்தம் குழந்தைகளுடன் தம்பதியராய் சங்கமிக்கும் அக்மார்க் அமெரிக்க கணவன் - மனைவி, சுமார் டஜன் குழந்தைகளுடன் அல்லாடும் கதையை ’சீப்பர் பை தி டஜன்’ (Cheaper by the Dozen) என்ற ரீமேக் திரைப்படமாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் காணலாம்.

x