பிக்பாஸ் பிடியிலிருந்து நழுவிய வனிதா: இனி வீடு சுணங்குமா சூடு பிடிக்குமா?


வனிதா

பிக்பாஸ் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் அவற்றை பொருட்படுத்தாத வனிதா, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.

14 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, வாராந்திர எவிக்‌ஷன் நடைமுறைகளை அடுத்து, இந்த வாரம் 10 போட்டியாளர்களுடன் களைகட்டியிருந்தது. வார இறுதியில் கமலுக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் பிரசன்னமாகப் போவதால், அதனை முன்னிட்டு எவிக்‌ஷன் இருக்காது என்று சொல்லப்பட்டது. ஆனால் வனிதா வம்படியாய் வெளியேறி, எவிக்‌ஷன் என்பதை வேறுவகையில் சாத்தியமாக்கினார்.

தணிக்கை இன்றி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு, போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மூலமாக சோதனை வந்தது. நேற்று இரவு 10 முதல் 12 மணி இடையே நடந்த களேபரங்களில் பிக்பாஸ் வீடு திணறிப்போனது. வனிதாவை சமாதானப்படுத்த வழியின்றி, நிதானத்துக்குப் பெயர் போன பிக்பாஸ்கூட விழி பிதுங்கிப் போயிருப்பார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் வேகம் கண்டு சுதாரித்த சக போட்டியாளர்கள், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முன்னேற்பாடாகவே இருந்தனர். வனிதாவின் அதிரடி வாயாடலும், வீச்சான பேச்சுமாய் அவற்றை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கினை தந்திருக்கலாம். ஆனால் வீட்டில் வனிதாவுக்கு ஈடுகொடுத்து தாமரையில் தொடங்கி நிரூப் வரை பலரும் இறங்கி விளையாடினார்கள்.

இறுதியில் சகல திசைகளிலும் எதிரிகளை சம்பாதித்த வனிதா இயல்பு கெட்டார். வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது தவித்தார். சில தினங்களுக்கு முன்பே தன்னை வெளியேற்றும்படி வெளிப்படையாகவே பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தார் வனிதா. தனது பாணியில் பிக்பாஸ் சமாதானப்படுத்தி வனிதாவின் நீட்டிப்பை உறுதி செய்தார். ஆனால் நேற்றிரவு வனிதா தனது கட்டுப்பாட்டினை இழந்தார்.

அதனையொட்டி அவர் பேசியது, நடந்துகொண்டது என பல இடங்களில் பிக்பாஸ் அல்டிமேட் குழு கத்தரி வைத்ததாக தெரிகிறது. பிக்பாஸை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் வனிதா வேகம் கொண்ட காட்சிகள் அவற்றில் அடங்கும்.

கடைசியில் வனிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிக்பாஸ் பலவாறாக அவரை சமாதானப்படுத்த முயன்றார். பிக்பாஸ் வீட்டில் தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்படுவதாக வனிதா முன்வைத்த வாதத்தை பிக்பாஸால் உடைக்க முடியவில்லை. கடைசி அஸ்திரமாக, பங்கேற்பாளராக வனிதா மேற்கொண்ட ஒப்பந்த நகலை வாசித்துவிட்டு முடிவெடுக்கும்படி பிக்பாஸ் கேட்டுக்கொண்டார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பங்கேற்புக்காக வரவேண்டிய வருமானத்தை வனிதா இழக்க நேரிடும் என்ற பொருளும் அதில் இருந்தது. ஆனால் வனிதா அதற்கெல்லாம் மசியவில்லை. ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கே பரிதாபம் தொனிக்கும் வகையில் வனிதா அழுது புலம்பினார். கடைசியில் தான் வெளியேறியதன் மூலம் வனிதா வென்றார்.

வனிதா இல்லாத வீடு இனி என்னாகும் என்ற கேள்வியும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்கே உரிய ரகளைகள், வாயாடல்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், பிரச்சினைகளை ஊதிப் பெருக்குவது, சரிக்குசரி நின்று பேசுவது ஆகியவற்றில் வனிதாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. தாமரை போன்றவர்களுக்கு பதிலடி தரவும் அங்கே ஆட்கள் குறைவு. இந்த நிலையில் பிக்பாஸ் வீடு சுணங்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே கமல் ஹாசன் வெளியேறியது நிகழ்ச்சியை பாதிக்குமோ என்ற கவலையில் இருந்த பிக்பாஸ் குழுவினருக்கு, வனிதாவெளியேறியதும் ஒருவகையில் ஏமாற்றம் தந்திருக்கும். வேறு வழியின்றி எல்லோருடைய பார்வையையும் புதிய தொகுப்பாளர் திசையில் திருப்ப வேண்டிய கட்டாயம் பிக்பாஸ் குழுவினருக்கு நேர்ந்திருக்கிறது. தொகுப்பாளராக பிரவேசிக்கும் சிம்பு அவற்றை நிறைவேற்றுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

x