பிக்பாஸ் அல்டிமேட்: கமல் இடத்தை சிம்பு நிரப்புவாரா?


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல் ஹாசன் விலகியதை அடுத்து, அந்த இடத்தில் நடிகர் சிலம்பரசன் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிவந்த கமல் ஹாசன், அதன் ஓடிடி பதிப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இதனிடையே கட்சிப் பணிகள் மற்றும் ’விக்ரம்’ படப்பிடிப்பு பணிகள் காரணமாக அவரால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு நாள் ஒதுக்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால், ஓடிடி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும், விஜய் டிவியில் வழக்கம்போல வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் சந்திப்போம் என்றும் விடைபெற்றுள்ளார்.

இதனையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கப்போகும் நட்சத்திரம் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. பிக்பாஸ் 5வது சீஸனின் இடையில் கமல் மருத்துவமனையில் அனுமதியானபோது, அந்த இடைவெளியை ரம்யா கிருஷ்ணன் நிரப்பினார். அதே போல கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சரத்குமார் பெயரும், பிக்பாஸ் அல்டிமேட்டுக்காக அடிபட்டது.

இதனிடையே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. மாநாடு திரைப்படத்தின் வெற்றி மூலமாக அடுத்த சுற்றுக்கு தயாராகி உள்ள சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக, பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்புவுக்கு இயல்பாகவே ஆர்வம் உண்டும். இதற்குக் காரணமாக, சிம்புவின் விருப்பத்துக்குரிய நடிகர் சல்மான்கான் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை சொல்கிறார்கள். மேலும் விஜய் டிவியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், நடிகர் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள் என்பதாலும் இந்த ஏற்பாடு முடிவானதாக தெரிவிக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு இணையாக எதையாவது சர்ச்சையாக பேசக்கூடியவர் என்பதாலும், அந்த வகையில் சோர்ந்து கிடக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு சிம்பு புது ரத்தம் பாய்ச்சுவார் என்றும் அவருக்கான முன்னுரிமைக்கு காரணம் சேர்க்கிறார்கள். எனினும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக பிக்பாஸ் ரசிகர்கள் காத்துள்ளனர்.

x