ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


கெஹ்ரயான் (இந்தி திரைப்படம் )

30 வயது பெண் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பணி வாய்ப்பும் தடுமாற்றங்களுக்கு ஆவதை உணர்கிறாள். வேலையில்லாத காதலன் வசம் பொறியில் சிக்கியதைப் போலவும் உணர்கிறாள். முதலீட்டு தேக்கத்தால் அவளது விருப்பத்துக்குரிய பணியும் சவால்களை சந்திக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று ஏமாற்றங்களை சகித்துக்கொண்டு செல்வபவளின் தடத்தில், இன்னொரு பெண்ணின் காதலன் குறுக்கிடுகிறான். சூழ்நிலைகளால் இருவரும் தத்தம் வேலிகளைத் தாண்டி புதிய உறவைத் தீண்டுகிறார்கள். இந்தப் போக்கு எங்கே கொண்டுபோய் சேர்க்கிறது என்ற பாலிவுட்டுக்கு பழகிய கதையை, புதிய பாணியிலான திரைக்கதையில் சுவைபட சொல்கிறது கெஹ்ரயான் (Gehraiyaan).

கெஹ்ரயான்

பிரதான கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் தோன்றுகிறார். சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 11-ல் நேரடியாக வெளியாகி இருக்கும் இப்படத்தை, ஷாகுன் பாத்ரா இயக்கியுள்ளார். நிறைய காதலும், கொஞ்சம் சஸ்பென்ஸும் கலந்த இப்படம், உறவுச் சிக்கல்கள், குடும்பத்தின் மாண்புகள், பெண்ணியம் ஆகியவற்றை இன்னொரு திசையிலிருந்து அலசவும் செய்கிறது. தீபிகா படுகோன் ரசிகர்கள் தவறவிடக்கூடாத திரைப்படம் கெஹ்ரயான்.

மகான் (தமிழ் திரைப்படம்)

காந்தியக் குடும்பத்தின் சகல கட்டுப்பாடுகளோடும் வளர்ந்த ஒருவர், தனது 40-வது வயதில் ஒருநாள் மட்டும் மனம்போனபடி வாழ நினைக்கிறார். அந்த முயற்சி, அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடுகிறது. எதிர்பாரா திசையில் அசுரத்தனமாய் வளரும் அவர், இழந்த குடும்பத்தையும், விருப்பத்துக்குரிய ஒற்றை பாச உறவையும் மீட்டாரா என்பதை, இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தனது பாணியில் சொல்லி இருக்கிறார். விக்ரம் வழக்கம்போல மிரட்டி இருக்கும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனாந்த் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

மகான்

சந்தோஷ் நாராயணனின் இசை சறுக்கினாலும், ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தை காப்பாற்றுகிறது. துருவ் விக்ரமைவிட, சனாந்த் திறமைக்கு நல்ல வாய்ப்பு வழங்கியிருக்கிறது மகான். அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9-ல் இப்படம் நேரடியாக வெளியாகி இருக்கிறது. ‘ஜகமே தந்திரம்’ படத்தில் விட்டதை மீட்கும் முயற்சியில் ஓரளவு தேறியிருக்கும் கார்த்திக் சுப்பாராஜுக்காகவும், கதாபாத்திரத்துகாக தன்னை உருக்கி நடிக்கும் விக்ரமுக்காகவும் ஆக்‌ஷன் த்ரில்லரான ‘மகானை’ தரிசிக்கலாம்.

பாமா கலாபம் (தெலுங்கு திரைப்படம்)

பெருநகர அடுக்ககம் ஒன்றில், சதா ஆர்வக்கோளாறுடன் வாழும் இல்லத்தரசியை சுற்றி நடக்கும் கதை. தான், தனது குடும்பம், சமையல் சார்ந்த தன்னுடைய யூடியூப் சானல், அக்கம்பக்கத்து வம்புகள் என்று அன்றாடங்களை நிம்மதியாய் போக்கும் இல்லத்தரசியின் வாழ்க்கை, ஓரிரவில் தலைகீழாகிறது. ஒரு நள்ளிரவுக் கொலை, ரூ.200 கோடி புராதனப் பொக்கிஷம் ஆகியவற்றை ஒட்டிய, குற்றச்செயல்கள் அப்பாவி இல்லத்தரசியையும் வளையமிடுகின்றன.

பாமா கலாபம்

நகரின் பெரும் குண்டர் முகாமும், துப்பாக்கிக் குண்டுகளும் அவளைத் துரத்தவும் ஆரம்பிக்கின்றன. அதிலிருந்து இல்லத்தரசி மீண்டாளா, கொலையின் மர்மம் என்ன, தொலைந்த பொக்கிஷம் எங்கே? என்ற கேள்விகளுக்கு ‘பாமா கலாபம்’ (Bhama Kalapam) சிரிக்கச் சிரிக்க பதில் சொல்கிறது. ப்ரியாமணி, ஜான் விஜய், சாந்தி ராவ், சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் நடித்திருக்கும், இந்தக் காமெடி த்ரில்லர் பிப்ரவரி 11-ல் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஃப்ரீடம் ஃபைட் (மலையாள ஆந்தாலஜி)

சமூகத்தின் வெவ்வேறு தளங்களின் ஊடாடும் பிரச்சினைகளை அலசும் 5 கதைகள், சுதந்திரம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைத்திருக்கும் ஆந்தாலஜி படைப்பே ஃபிரீடம் ஃபைட்(Freedom Fight). 5 மலையாள இயக்குநர்கள் 5 சமூகக் கதைகளை இயக்கி இருக்கிறார்கள்.

ஃபிரீடம் ஃபைட்

ஓர் இளம்பெண் தனிப்பட்ட கனவுகளுக்கும், தான் சார்ந்த சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் இடையே அல்லாடுகிறாள். பெண் தொழிலாளர்கள் சிலர் தங்களுக்கான பிரத்யேக கழிப்பறைக்காகப் போராடுகிறார்கள். ஒரு தூய்மைப் பணியாளர் தன் மீதான அடக்குமுறைக்கு எதிராக திமிறி நிமிற்கிறார். இப்படி ரகம் ரகமான கதைகள் இந்த ஆந்தாலஜியில் அணிவகுக்கின்றன. ஜோஜு ஜார்ஜ், ரோகிணி, ரஜிஷா விஜயன், சித்தார்த் சிவா உள்ளிட்டோர் நடித்த ஃப்ரீடம் ஃபைட், நேரடி ஓடிடி வெளியீடாக பிப்ரவரி 11-ல் சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது.

மல்லி முதலந்தி (தெலுங்கு திரைப்படம்)

கொடியில் ஒரு பூ உதிர்ந்தால் இன்னொன்று பூக்கத்தான் போகிறது. அப்படி, விவாகரத்துக்குப் பின்னரும் பூக்கின்ற காதலையும், அதை நம்பி மிச்சமிருக்கும் சொக்கத்தங்க வாழ்க்கையையும், காமெடி முலாமில் அலசுகிறது மல்லி முதலந்தி (Malli Modalaindi) தெலுங்கு திரைப்படம்.

மல்லி முதலந்தி

தலைமைச் சமையலராய் பலரையும் கவரும் இளைஞனுக்கு, ஆசை ஆசையாய் கைகோத்த மண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. தொடர்ந்து முடக்கும் விவாகரத்தால் சோர்ந்து தனிமரமாகி நிற்பவனுக்கு, இரண்டாம் வாய்ப்பு கதவைத் தட்டுகிறது. இம்முறையேனும் தனது மண வாழ்க்கையை கட்டிக் காக்கிறானா அல்லது கோட்டை விடுகிறானா என்பதே மல்லி முதலந்தி திரைப்படம். சுமந்த், நைனா கங்குலி, சுகாஷினி மணிரத்னம், பிருத்விராஜ், அன்னபூர்ணா உள்ளிட்டோர் நடித்த ரொமான்டிக், காமெடி திரைப்படம் பிப்ரவரி 11-ல் ஜீ 5 தளத்தில் வெளியாகி உள்ளது.

ட்வன்டி ஃபைவ் ட்வன்டி ஒன் (கொரிய வலைத்தொடர்)

காதலர் தினத்தை கொண்டாடும் முகமாய், காதலைக் கொண்டாடும் ஓடிடி படைப்புகளை தரிசிக்க காத்திருப்போர் தாரளமாய் இந்த கே-ட்ராமாவை பரிசீலிக்கலாம். பள்ளி - கல்லூரி, பணி என வெவ்வேறு வயதுகளில், குறுக்கிடும் இளஞ்ஜோடி ஒன்றின் பட்டாம்பூச்சி அனுபவங்களே இந்த ட்வன்டி ஃபைவ் ட்வன்டி ஒன்(Twenty Five Twenty One) வலைத்தொடர்.

ட்வன்டி ஃபைவ் ட்வன்டி ஒன்

வயதுக்கு ஏற்ப முதிரும் உணர்வுகள், பற்றிப்படரும் நேசம், நடைமுறை வாழ்க்கையின் வேகத்தடைகள், இருவரின் தனிப்பட்ட கனவுகள், அதை அடைவதற்கான போராட்டங்கள் ஆகியவற்றை வலைத்தொடர் பதிவு செய்திருக்கிறது. காதலுக்கே உரிய சீண்டல், மோதல், தன்முனைப்பு, பிரிவு, ஏக்கம் என அனைத்தும் இந்த வலைத்தொடரில் உண்டு. இளம்வயதினர் மட்டுமன்றி, பதின்பருவத்தின் நினைவுகளில் பதியமிட விரும்புவோரும், பிப்ரவரி 12-ல் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்தத் தென்கொரிய வலைத்தொடரை ரசிக்கலாம்.

x