ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


பொக்கிஷப் பன்றி

(தமிழ்த் திரைப்படம்)

சீன தேசத்து பின்னணியிலான, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி சிலை ஒன்றுக்கு அபூர்வ சித்திகள் வாய்த்திருக்கின்றன. தமிழகத்தில் தொலைந்துபோகும் அந்தச் சிறு சிலையையும், தங்கள் அதிர்ஷ்டத்தையும் தேடிச் சிலர் கிளம்புகின்றனர். அவர்கள் வெளியிலும், தங்களுக்குள்ளும் எதிர்கொள்ளும் களேபர சவால்களே ’பன்றிக்கு நன்றி சொல்லி’ தமிழ்த் திரைப்படம். குறைந்த பட்ஜெட், நிறைவான உள்ளடக்கம் என்பதில் நம்பிக்கை கொண்ட திரைக்கலைஞர்கள் உருவாக்கத்தில் விளைந்திருக்கும் மற்றுமொரு டார்க் காமெடி இது.

பன்றிக்கு நன்றி சொல்லி

கணிசமான புதுமுகங்கள் நடித்த இந்தத் திரைப்படம், செல்போன் திரைக்கான பொழுதுபோக்கைத் தந்துவிடுகிறது. படத்தின் நீளமும் அதிகமில்லை என்பதால், சுவாரசியம் கூட்டுகிறது. சோனி லைவ் தளத்தில், பிப்ரவரி 4-ம் தேதி முதல் பார்க்கக் கிடைக்கும் ’பன்றிக்கு நன்றி சொல்லி’ படத்தில், ஜோ மல்லூரி, நிஷாந்த், விஜய் சத்யா உள்ளிட்டோர் நடிக்க, பாலா அரன் இயக்கி உள்ளார்.

பகடி பணயக் கைதிகள்

(கன்னடத் திரைப்படம்)

அரசுப் பள்ளி ஒன்றில் பணியில் சேரும் கலை ஆசிரியருக்கு, அன்றைய தினம் சோதனைகள் அணிவகுக்கின்றன. ஆசிரியரும் பள்ளிக் குழந்தைகளுமாக கடத்தல்காரர்கள் சிலரிடம் பணயக்கைதிகளாகப் பிடிபடுகிறார்கள். இந்தப் பணயக்கைதிகள் - கடத்தல்காரர்கள் இடையிலான மோதல், காமெடி ஆகியவையே ’ஒன் கட் டூ கட்’ (one cut two cut) கன்னடத் திரைப்படம். நகைச்சுவை நடிகர்கள் கதையின் நாயகர்களாகும் வரிசையில் கன்னடத்தின் டேனிஷ் முழுப் படத்தையும் சுமக்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சம் நேராதும் பார்த்துக்கொள்கிறார்கள்.

’ஒன் கட் டூ கட்’

போகிறபோக்கில் ’மணி ஹெய்ஸ்ட்’ வலைத்தொடரையும் கலாய்த்திருக்கிறார்கள். ஓடிடி திரைக்கு என்றே எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 3-ம் தேதி வெளியானது. குழந்தைகள் சகிதம் குடும்பத்தோடு அமர்ந்து நகைச்சுவைத் திரைப்படத்தை ரசிக்க விரும்புவோருக்கு ’ஒன் கட் டூ கட்’ உதவலாம். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் தயாரித்த திரைப்படம் என்பதாலும், கன்னட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு இப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

ஆருயிர் அறிவியலாளர்கள்!

(இந்தி வலைத்தொடர்)

அணுசக்தியிலும், விண்வெளித் துறையிலும் நாம் இன்று எட்டியிருக்கும் உயரத்துக்கு, இரு முன்னோடிகளுக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் என்ற இரு விஞ்ஞானிகளை, தேசத்தின் 75-வது சுதந்திர ஆண்டில் நன்றியுடன் நினைவுகூர்கிறது ‘ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys) வலைத்தொடர். அறிவியல் ஆராய்ச்சிக்காகத் தோள்சேர்ந்த இரு தோழமைகளின் வாழ்வையும், சாதனைக்கான போராட்டத்தையும் நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த வலைத்தொடர்.

‘ராக்கெட் பாய்ஸ்’

காலனியாதிக்க இந்தியாவில் தொடங்கி 1968 வரையிலான தேசத்தின் அறிவியல் வளர்ச்சியை, படைப்பின் சுவாரசியத்துக்கான புனைவுகள் கலந்ததாக இத்தொடரை தரிசிக்கலாம். இந்திய அணுசக்தியில் தவிர்க்க முடியாதவரான, அப்துல் கலாமும் இந்த வலைத்தொடரில் வருகிறார். சராசரியாக தலா முக்கால் மணி நேரத்துக்கு நீளும் 8 அத்தியாயங்களுடன், இந்த வலைத்தொடர் அமைந்துள்ளது. பிப்ரவரி 4 முதல் இந்த வலைத்தொடர் சோனி லைவ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

இது ஜப்பான் ஸோம்பி!

(ஜப்பானிய வலைத்தொடர்)

கொரிய படைப்புகள் போலவே ஜப்பானிய ஆக்கங்களுக்கும் ஓடிடி தளங்களில் தனி ரசிகர்கள் உண்டு. அவர்களுக்காக வெளியாகி இருக்கும் ஜப்பானிய வலைத்தொடர் ’லவ் யூ அஸ் தி வேர்ல்ட் எண்ட்ஸ்' (Love You as the World Ends). கார் மெக்கானிக் ஒருவன் தனது நேசத்துக்குரியவளிடம் காதலைச் சொல்ல நாள் குறித்திருக்கிறான். இதற்கிடையில் சுரங்கப்பாதை ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியவன், 4 நாள் கழித்தே வெளி உலகத்துக்கு திரும்புகிறான்.

லவ் யூ அஸ் தி வேர்ல்ட் எண்ட்ஸ்

அங்கே அவனது உலகம் அடியோடு மாறிப்போயிருக்கிறது. அவனது காதலியையும் காணோம். திகில் சம்பவங்களுக்கான தடயங்கள் நிறைந்திருக்கும் அந்த நகருக்கு என்னவானது என்பதை மற்றுமொரு ஸோம்பி கதையாக விவரிக்கிறார்கள். தலா 45 நிமிடங்களுக்கு நீளும் 26 அத்தியாயங்கள் கொண்ட இந்த ஜப்பானிய வலைத்தொடரின் முதல் சீசன், பிப்ரவரி 1 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

பரபர திரில்லர்

(இந்தி வலைத்தொடர்)

இந்தியாவின் கவனிக்கத்தக்க ஆங்கில நாவலாசியர்களுள் ஒருவர் விகாஸ் ஸ்வரூப். இவர் எழுதிய இரண்டாவது படைப்பான ’சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்’ நாவல், ’தி கிரேட் இந்தியன் மர்டர்’ (The Great Indian Murder) என்ற வலைத்தொடராக வெளியாகி இருக்கிறது. இவரது முதல் நாவலைத் தழுவி உருவானதுதான் ’ஸ்லம்டாக் மில்லியனர்’. அதனாலேயே இந்த வலைத்தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மாநில உள்துறை அமைச்சரின் மகன், அன்றைய தினம் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறான். அவன் முன்பு செய்த ஒரு குற்றச்செயல் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாய் ஏற்பாடான விருந்தின்போதே, அவன் கொலைசெய்யப்படுவதுதான் தொடரின் மையச் சரடு.

’தி கிரேட் இந்தியன் மர்டர்’

விருந்துக்கு அழைக்கப்பட்ட மற்றும் அழையா விருந்தாளிகளை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறது. மிகவும் சாதாரண கதையோட்டத்தில் நாற்காலியின் நுனியில் அமர்த்தும் திருப்பங்களுக்கு வலைத்தொடர் உத்தரவாதமளிக்கிறது. தலா 40-50 நிமிடங்களுக்கு நீளும் 9 அத்தியாயங்களுடன் கூடிய, ’தி கிரேட் இந்தியன் மர்டர்’ இந்தி வலைத்தொடர், பிப்ரவரி 4 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.

லூப்பில் டாப்ஸி!

(இந்தித் திரைப்படம்)

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் நாம் ரசித்த ‘டைம் லூப்’ சாத்தியங்களை, கால் நூற்றாண்டுக்கு முன்பே வெற்றிகரமாக பரிசோதித்த திரைப்படம் ’ரன் லோலா ரன்’. உலக சினிமா ரசிகர்கள் நன்கறிந்த இந்த ஜெர்மனியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வத் தழுவலாக, ’லூப் லபேடா’ (Looop Lapeta) என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பிப்ரவரி 4 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் காணக்கிடைக்கிறது.

லூப் லபேடா

தடகள வீராங்கனையான டாப்ஸி, இக்கட்டில் சிக்கிய தனது காதலனை மீட்க ஓடுகிறார். இதில் சிக்கிக்கொள்ளும் கால வளையங்களும், இதர சவால்களுமே கதை. இந்திய தழுவலுக்காக கதையோட்டத்தைக் கூடுதலாய் இழுத்திருக்கிறார்கள். காமெடியும், விறுவிறுப்பும் கூடிய திரைப்படத்தை தமிழ் டப்பிங்கில் ரசிக்கவும், நெட்ஃபிளிக்ஸ் வழி செய்திருக்கிறது.

x