தனது சமையல் வீடியோவுக்கு அநாவசிய கமெண்ட் அடித்ததாக, ரசிகர் மீது காட்டம் காட்டியிருக்கிறார் சமையல் நிகழ்ச்சிகளால் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். இவரது சமையல் திறமைக்கு அப்பால், வெங்கடேஷ் பட் ஜாலியாக கோமாளிகளை மிரட்டும் விதம், இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலகலப்பை கொடுக்கும்.
இதுமட்டுமன்றி, சமையலுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றையும் வெங்கெடேஷ் பட் நடத்தி வருகிறார். இதில் ரகம்ரகமாய் உணவு பொருட்களை சமைத்துக் காட்டுவார். இந்த சமையல் வீடியோக்களுக்கென நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
நல்ல விதமாய் சொல்ல நாலு பேர் இருக்கையில் அவற்றில் நொள்ளை சொல்லவும் ஓரிருவர் இருப்பதும்தானே சமூக வலைதளங்களின் இயல்பு? அது போலவே, செஃப் வெங்கடேஷ் பட்டின் சமையலை பாராட்டி கமெண்ட் செய்வோருக்கு மத்தியில், ஏதாவது எதிர்மறை கருத்துகளுடன் எட்டிப் பார்ப்போரும் உண்டு. அந்த வகையிலான ஒரு சர்ச்சை சம்பவம் வெங்கடேஷ் பட்டின் யூடியூப் பக்கத்தில் நேற்று அரங்கேறியது.
வெங்கடேஷ் பட் தான் வெளியிட்ட சமையல் வீடியோவில், ஓர் உணவு பதார்த்தத்தில் சற்றே தூக்கலாக நெய் வார்த்திருந்தார். இந்த வீடியோவை முன்வைத்து ரசிகர் ஒருவர் பதிவிட்ட கமெண்ட்டால், எரியும் நெருப்பில் நெய் வார்த்தது போலானார் வெங்க்டேஷ் பட். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடிகை ஜோதிகா அள்ளி ஊற்றுவாரே, அந்த கேலிக்கு இணையாக வெங்கெடேஷ் பட்டின் நெய் வார்ப்பு சம்பவமும் ஆகிப்போனது. ஜோதிகா விளம்பரத்தில் உருவான சர்ச்சை, நெல்லெண்ணெய் நிறுவனத்துக்கு நல்லெண்ண விளம்பரமாகவும் மாறிப்போனது. ஆனால், வெங்கடேஷ் பட் வீடியோவின் நெய் வார்த்த விவகாரம், வெங்கடேஷ் பட்டை கடுகுபோல பட்டென பொரியச் செய்தது.
‘இந்த பதார்த்தத்துக்கு இவ்வளவு நெய் தேவை தானா? வெங்கடேஷ் பட்டின் சமையல் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாமே அதிகம் சேர்ப்பது போலவே இருக்கிறதே! உடல்நலம் முக்கியமில்லையா? இவர் இந்த வீடியோவில் உபயோகித்த இந்த நெய்யை வைத்து, இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூடுதலாக சமைக்கலாம் போலிருக்கிறதே’ - இதுதான் ரசிகரின் கமெண்ட். .
இதற்கு வெங்கடேஷ் பட், காட்டமாக பதில் பதில் கொடுத்துள்ளார். ‘உங்களுக்கு வேண்டும் என்றால் நெய் ஊற்றுங்கள். வேண்டாம் என்றால் ஊற்றாதீர்கள். சமையல் இப்படிதான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் பொருட்கள் சேர்க்க வேண்டும் என என்றைக்காவது நான் உங்களை வற்புறுத்தி இருக்கிறேனா? எனக்கு தெரிந்த சமையலை நான் செய்கிறேன். என் வீடியோவை பார்த்து, அதே போல சமைப்பதும் சமைக்காததும் உங்கள் இஷ்டம்!’ -இப்படி பொரிந்து தள்ளிவிட்டார் பட்.
பட்டின் இந்த பதிலுக்கு அதிகமானோர் அவருக்கு ஆதரவாகவே கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், ’இவ்வளவு நெய் தேவையா?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் பட் அதிகம் ரியாக்ட் செய்திருப்பதாக வருந்திருயிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தனது கமெண்டில், ‘நிறைய ஊற்றினால் சுவை கூடும் என்றோ அல்லது வேறு மாதிரியாகவோ பதில் சொல்லி இருக்கலாமே. இது எடுத்தெறிந்து பேசுவது போல இருக்கிறதே?’ என வெங்கடேஷ் பட்டிடம் உரிமையுடன் கேட்டார்.
இதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், சற்றே ஆசுவாசமானவராக ‘உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ; அதே அளவு உரிமை எனக்கும் உரிமை இருக்கிறது. பிறரை புண்படுத்தாது இங்கு பேச வேண்டியது முக்கியம். அப்படி இல்லாத போது, நான் எனக்காக பேசுவேன். இன்றைய இளம் தலைமுறைக்கும் இது உதாரணமாக அமையட்டும் என்றுதான் இதை சொல்கிறேன்’ என தனது தரப்பில் உறுதியாக கூறியுள்ளார் வெங்கடேஷ் பட்.
டிவி ரியாலிட்டி ஷோக்களில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யவும், அவர்களை தொடர்ந்து பார்க்கச் செய்யவும் என்று சில உத்திகளை நிகழ்ச்சியாளர்கள் சமயோசிதமாய் திணிப்பார்கள். அப்படித்தான் சற்றும் தொடர்பே இல்லாத சண்டைகள், முரண்பாடுகள், சச்சரவுகள் இந்த நிகழ்ச்சிகளில் திடீரென வெடித்து, ரசிகர்களின் பேசு பொருளாகும். டிஆர்பி ரேட்டிங் வரை எகிறவும் இது காரணமாகி விடும். டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைக்காட்ட ஆரம்பித்த பிறகு, வெங்கடேஷ் பட்டும் அதே பாணியில் தனது யூட்யூப் பக்கத்தை பிரபலப்படுத்த, இம்மாதிரி உத்திகளை பயன்படுத்துகிறாரோ என்ற கமெண்ட்டையும் சமூக ஊடக வெளியில் பார்க்க முடிகிறது. அப்படியானால் செஃப் வெங்கடேஷ் பட், சமையல் மற்றும் நகைச்சுவையில் மட்டுமல்ல; நிகழ்ச்சிக்கான உத்திவகுப்பிலும் தேறி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.