ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?


1. கலகல காமெடி - மலையாளத் திரைப்படம்

லூசிஃபர் திரைப்படத்தை தொடர்ந்து மோகன்லால் -பிரித்விராஜ் இணையும் இரண்டாவது திரைப்படம் ’ப்ரோ டாடி’. மலையாள சினிமாவின் நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் பிரித்விராஜ், இயக்குநராகவும் இந்தத் திரைப்படத்தில் ஜெயித்திருக்கிறார். திருமணமாகாத மகன் பிரித்விராஜ், தான் தந்தையாக காத்திருக்கும் சங்கடத்தை வீட்டில் எப்படிச் சொல்வது என்று பம்மும்போது, “நீ அண்ணனாகப் போகிறாய்” என்று வெட்கக் குண்டு வீசுகிறார் அப்பா மோகன்லால்.

அதாவது, டாடியாகும் கனவோடு காத்திருக்கும் பிரித்விராஜ் பிரதராகவும் மாறுவதை முன்னிட்டு அரங்கேறும் ஜாலி களேபரங்களே ’ப்ரோ டாடி’ திரைப்படம். மோகன்லால் ஜோடியாக மீனா, பிரித்விராஜ் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் கனிகா, சௌபின் ஷாகிர், உன்னி முகுந்தன் என ஒரு பட்டாளமே நடித்திருக்கிறது. குடியரசு தினத்தன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

2. பதின்மத்து ஸோம்பிகள் - கொரிய வலைத்தொடர்

பெருந்தொற்று காலத்தில் ஸோம்பி படங்கள் பார்ப்பது ஏகப்பொருத்தமானது. தென்கொரிய படைப்பான ’ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட்’ (All Of Us Are Dead) என்ற வலைத்தொடர், ஸோம்பி ரசிகர்களின் அட்ரீனலை அதிகரிக்க வந்திருக்கிறது. விளையாட்டும் படிப்புமாக பதின்ம வயதினர் வளையவரும் பள்ளிக்கூடம், எதிர்பாரா தருணத்தில் ஸோம்பிகளின் கூடாரமாகிறது. அவர்கள் மத்தியிலிருந்து நமது பிரதான கதாபாத்திரங்கள் உயிர் பிழைத்தார்களா என்பதுடன், வெளியிலிருந்து தம் குழந்தைகளை காப்பாற்ற முயலும் பாச பெற்றோர், ஸோம்பிகளை அழிக்க அரசு எடுக்கும் முடிவு, ஸோம்பிகள் உருவாகக் காரணமான வில்லன் யார்... என்பதான கேள்விகளுக்கு விடை காண்பதே, புதிய ஸோம்பி வலைத்தொடர்.

படம் முழுக்க உற்சாகம் கொப்பளிக்கும் பதின்ம வயது ஸோம்பிகள், அவர்களை வைரஸ் தாக்குவதற்கு முந்தைய நெகிழ்ச்சியான கதை என திகில் கதையில் நெகிழ்வையும் கலந்திருக்கிறார்கள். அத்தியாயங்கள் தலா 1 மணி நேரத்துக்கு நீள்வதால், 12 அத்தியாயங்களுக்கான நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். ஸோம்பி ரசிகர்களை ஏமாற்றாத ’ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட்’ வலைத்தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஜனவரி 28-ல் வெளியாகி உள்ளது.

3. ’ஐஸ் ஏஜ்’ வரிசை - அனிமேஷன் திரைப்படம்

20 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘ஐஸ் ஏஜ்’ (2002) திரைப்படத்தின் வரிசையில், 6-வது படைப்பாக வெளியாகி இருக்கிறது ’தி ஐஸ் ஏஜ் அட்வென்சர்ஸ் ஆஃப் பக் வைல்ட்’ (The Ice Age Adventures of Buck Wild). நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு என்றே உருவான இந்தத் திரைப்படம், வழக்கமான ஐஸ் ஏஜ் கதையில் ’பக் வைல்ட்’ கதாபாத்திரத்தை மட்டுமே மையாகக் கொண்ட ஒரு ’ஸ்பின் ஆஃப்’ திரைப்படமாகும். குகையினுள் தொலைந்து போகும் தனது தோழர்களை மீட்க, ஒற்றைக் கண் பக் வைல்ட் நடத்தும் சாகசக் கதம்பமே இந்தப் புதிய ஐஸ் ஏஜ் திரைப்படத்தின் கதை.

பனிப்பாளங்கள் உருக, கண்டத்திட்டுகள் நகர, டைனோசர்கள் ஊடுருவ ஐஸ் ஏஜ் அங்கத்தினர்களுக்கு புதுப்புது சவால்களும் எழுகின்றன. இவற்றை சமயோசிதமாய் கடக்கும் பல் வைல்டின் வேடிக்கை சாகசமே, இந்த ஸ்பின் ஆஃப் திரைப்படத்தின் கதை. குழந்தைகளுடன் கண்டுகளிப்பதற்கான ’தி ஐஸ் ஏஜ் அட்வென்சர்ஸ் ஆஃப் பக் வைல்ட்’ கிராஃபிக்ஸ் திரைப்படம், ஜனவரி 28-ல் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

4. ரொனால்டோவின் காதலி - ஸ்பானிஷ் தொடர்

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி அறியாதோர் குறைவு. அவரது காதலியான ஜியார்ஜினா பார்வையிலான நெட்ஃப்ளிக்ஸ் ரியாலிடி ஷோ வாயிலாக, ரொனால்டோ குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, உலகம் அதிகம் அறிந்திராத ஜியார்ஜினா பற்றியும், ரொனால்டோவின் 5 குழந்தைகள் குறித்தும் நெட்ஃப்ளிக்ஸ் பாணியில் விவரிக்கிறார்கள்.

உலக அளவில் கொண்டாடப்படும் பிரபலத்தின் வாழ்க்கைத் துணையாக இருப்பது, இருவருக்கும் இடையிலான காதல், ஜியார்ஜினா வாயிலாக ரொனால்டோ மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள், இந்தப் பிரபல ஜோடியின் அன்றாடங்கள், அவர்களின் லைஃப் ஸ்டைல் குறித்தும் சுவாரசியமான தகவல்கள் வருகின்றன. ஜனவரி 27-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’I Am Georgina’ என்ற இந்த ரியாலிட்டி ஷோவின் முதல் சீஸன், தலா 40 நிமிடங்கள் கொண்ட 6 அத்தியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

5. பொறியில் சிக்கிய தீரன் - இந்தி குறும்படம்

குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெளியாகி இருக்கும் குறும்படம் ’வெர்சஸ் ஆஃப் வார்’ (Verses of War). ராணுவ அணி ஒன்றை தலைமையேற்று செல்லும் இந்திய வீரர், எதிரிகளின் பிடியிலிருந்து தன்னுடைய அணியை தப்பவைக்கும் முயற்சியில் தான் மாட்டிக்கொள்கிறார். தேசபக்தி, மகத்தான துணிச்சல், வீரம் அனைத்தும் உருவாய் கொண்ட அந்த வீரர், எதிரியின் பிடியில் சிக்கியபோதும் கலங்காதிருக்கிறார்.

அந்த இந்திய வீரருக்கும், பாகிஸ்தான் எதிரிக்கும் இடையிலான உரசல்களே ’வெர்சஸ் ஆஃப் வார்’ குறும்படம். ஒரு உருக்கமான ஆக்‌ஷன் கதையை கவித்துவமான வசனங்களுடன் பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய - பாகிஸ்தான் ராணுவ தரப்பினராக விவேக் ஒபராய் மற்றும் ரோஹித் ராய் நடித்துள்ளனர். யூடியூபில், ஜனவரி 27-ல் இந்தக் குறும்படம் வெளியாகி இருக்கிறது.

6. பகடி க்ரைம் திரில்லர் - ஆங்கில வலைத்தொடர்

’சதா ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கும் பெண், ஒரு மர்மக் கொலையை கண்ணுறுகிறாள். ஆனால், அவள் சொல்வதை இந்த உலகம் நம்ப மறுக்கிறது. எனவே. சுயமாய் களமிறங்கி மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்கிறாள்’. இப்படியான கதையில் சற்று வெட்டியும் ஒட்டியுமாய் ஒரு டஜன் திரைப்படங்களேனும் வெளியாகி இருக்கும். ஆனபோதும் இந்த ’ஒன் லைன்’ சுவாரசியத்துக்காக, முந்தைய திரைப்படங்களை கலாய்த்து, புதிய பிளாக் காமெடியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தலைப்பைக் கூட ’The Woman in the House Across the Street from the Girl in the Window’ என்று இதுவரையிலான கதைகளின் தலைப்புகளை கொண்டே உருவாக்கி இருக்கிறார்கள். இந்த டார்க் காமெடி - க்ரைம் திரில்லர் வலைத்தொடரை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். தலா 20-30 நிமிடங்களில் விரையும் 8 அத்தியாயம் கொண்ட வலைத்தொடர், ஜனவரி 28-ல் வெளியாகி இருக்கிறது.

x