உலக அளவில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் 5 சீசன்களை முடித்துள்ளது. இந்த 5 சீசன்களையும் நடிகரும் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 5 சீசன்களும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், ஓடிடியில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வெளியாக இருப்பது குறித்து, அதன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன.
பிக்பாஸ் 5?வது சீசனின் இறுதி நிகழ்வின்போது, தனது தயாரிப்பு நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். மேலும் ’பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாக இருக்கும் பிரத்யேக நிகழ்ச்சி குறித்தும் கமல் அறிவித்தார். இந்தப் புதிய நிகழ்சிக்கான பிக்பாஸ் கண் லோகோவை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.
பிக்பாஸ் அல்டிமேட் என்பது 24x7, அதாவது 24 மணி நேரமும் அப்படியே ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகச்சி என்பதுதான் இதன் சிறப்பு! இதை வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் வார இறுதியில் தொகுத்து வழங்க வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆணிவேர், அதில் இடம்பெறும் போட்டியாளர்கள்தான். போட்டியாளர் தேர்வில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. அதன்படி வழக்கமான விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள், நாட்டுப்புற பாடகர்கள், தொகுப்பாளர்கள், பிற சேனல்களின் பிரபலங்கள், டான்ஸ் மாஸ்டர் ஒருவர், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வாழ் தமிழர்கள் சிலர், மாடல் உலகத்தினர் என்ற கலவையாகவே, புதிய போட்டியாளர்களின் தேர்வும் அமைய இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்தான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானதும், அதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்புகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. அதன்படி, பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருந்தே, இதன் பங்கேற்பார்கள் இடம்பெறுவார்கள் என அறிவித்தார்கள்.
இம்மாத இறுதியில், அதாவது ஜனவரி 30 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த அறிமுகங்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அதன்படி அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கவிஞர் சிநேகன் முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் முதல் மூவரில் இடம் பிடித்தவர். இரண்டாவது போட்டியாளரான ஜூலியும், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பல எதிர்மறையான விமர்சனங்களால் புகழ் அடைந்தவர்.
அடுத்த போட்டியாளராக, 3-வது சீசனில் பங்கேற்று பிக்பாஸையே தெறிக்க விட்ட நடிகை வனிதா விஜயகுமார் களம் இறங்க உள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் இன்னும் பலர் இடம்பெற உள்ளனர். இப்படி 5 சீசன்களிலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற, நிகழ்ச்சியின் சுவாரசியமான உள்ளடக்கத்துக்கும் விறுவிறுப்புக்கும் காரணமான போட்டியாளர்களையே பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு தேர்வுசெய்து வருகிறார்கள். இந்த வரிசையில் பரணி, ஓவியா, அனிதா, சுஜா வருணி, அபிராமி ஆகியோரும்; அண்மையில் நிறைவுற்ற 5-வது சீசனின் சுருதி, நிரூப், தாமரை, அபிநய் போன்றவர்களும் எதிர்பார்ப்புக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்தான அதிகாரபூர்வமான அறிவிப்புகளை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, 24x7 என ஒளிபரப்பாக இருப்பதால், அது தொடர்பான லைவ் எடிட்டிங் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மற்றபடி வழக்கமான சண்டை, சச்சரவு, கிசுகிசு, புறணி, காதல் உள்ளிட்டவை உடனுக்குடன் பார்வையாளர்களுக்கும் கிடைக்க வாய்ப்பாகும். இதனால் நிகழ்ச்சி கூடுதல் விறுவிறுப்பு பெறவும் வாய்ப்புள்ளது. பார்வையாளர்களைக் கருத்தில்கொண்டே வழக்கமான 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சிகளை, ஒரு மணி நேரமாக சுருக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ஆனால், பிக்பாஸ் அல்டிமேட்டில் சண்டை, சச்சரவு, காதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் எதற்கும் தணிக்கை இருக்கப்போவதிலை. எனவே, அவற்றை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரைப் பார்க்க அனுமதிக்கலாமா என்பதைப் பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த புதிதில் அதன் கான்செப்ட் என்பது, போட்டியாளர்கள் - பார்வையாளர்கள் என இரு தரப்பினருக்குமே புதுசு. ஆனால், அடுத்தடுத்த சீசன்களில் பிக்பாஸ் இல்லத்து விளையாட்டின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு, போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவு சுவாரஸ்யத்தை வழங்கினார்கள். அப்படி கடந்த 5 சீசன்களில் அதிக கவனம் பெற்ற போட்டியாளர்களையே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். தங்கள் அனுபவத்தின் வாயிலாகவும், தொடர் வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், இந்தப் போட்டியாளர்கள் எந்த அளவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பலமும், சுவாரஸ்யமும் சேர்க்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.