பெண்மையில் மாயம் நிகழ்த்தும் மீராபெல்!


பெண் மைய கார்ட்டூன் கதாபாத்திரம் என்றதும், ஒடிசலான உடல்வாகும் ஒய்யார நடையும் ’சிவப்பழகு’ம் ததும்பும் கவர்ச்சிகரமான பார்பி பொம்மை வகையறா அனிமேஷன் உருவம்தான் கண்முன்னே வரும்.

அதெல்லாம் அந்தக் காலம், ‘ஸ்நோ வொய்ட்’, ‘ஸ்லீப்பிங் பியூட்டி’, ‘சிண்ட்ரெல்லா’ கதைகளெல்லாம் மேற்குலக கதைச் சூழலிலும் வழக்கொழிந்துவிட்டன; அங்கேயும் மாநிற சருமமும் கொஞ்சம் பருமனான உடலமைப்பும் கொண்ட ‘மோனா’ மாதிரியான கதாநாயகிகளை உருவகப்படுத்தும் வழக்கம் தோன்றிவிட்டது என்று நீங்கள் நினைத்தால், வேறொன்றையும் இங்கே நினைவுபடுத்திவிடுகிறேன். அலாவுதீனின் காதலி இளவரசி ஜாஸ்மின் ஆனாலும் மோனாவானாலும் அந்தப் பெண்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது காப்பாற்ற எல்லாம் வல்ல கதாநாயகன்தான் இன்றும் வந்து கொண்டிருக்கிறான்.

கொடி இடையும் நீண்ட கூந்தலும் ஆபத்பாந்தவனான காதலனின் வருகைக்குக் காத்திருப்பதும்தான் பெண்மை என்ற எண்ணத்தை, இத்தகைய கதைகளும் கதாபாத்திரங்களும் நெடுங்காலமாக விதைத்துள்ளன. இவற்றைத்தான் நாம் குழந்தையாக இருந்தபோதும் பார்த்து ரசித்தோம். இன்றைய குழந்தைகள் மனதிலும் இத்தகைய கதை மாந்தர்கள்தான் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவை அத்தனைக்கும் புதிய மாற்றாக, இந்த விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை குஷிபடுத்தவும் பெண்மையின் இலக்கணத்தைப் புரட்டிப்போடவும் வந்துவிட்டாள், ‘மீராபெல்’. 80 ஆண்டுகளுக்கும் மேலாக அனிமேஷன் உலகில் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் வெற்றிக்கொடி பறக்கிறது. இந்நிறுவனத்தின் 60-வது படம் ‘என்கான்ட்டோ’.

ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கும், இந்த மாயாஜால அனிமேஷன் திரைப்படத்தின் கதாநாயகிதான் மீராபெல்.

காதல் கணவனை கொள்ளையர்கள் கொலை செய்ய, 3 கைக்குழந்தைகளுடன் தவித்து நிற்கிறாள் அபுலா அல்மா. அப்போது இயற்கை அவளுக்கு அற்புத மெழுகுவர்த்தி ஒன்றை பரிசளிக்கிறது. அதைக் கொண்டு தென் அமெரிக்காவின் கொலம்பியா காட்டுக்குள் என்கான்ட்டோ என்ற மலை கிராமத்தை உருவாக்குகிறாள் அபுலா அல்மா. நிர்கதியான அனைவருக்கும் அந்த ஊர் ஒற்றுமையாக வாழ இடம் அளிக்கிறது. பேத்திகள், பேரன்கள்வரை அபுலாவின் குடும்பம் ’மேட்ரிகல்ஸ்’ என்ற பெயரில் ஒரே மாளிகையில் தழைத்தோங்குகிறது.

அபுலா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மாயாஜால சக்திகள் கைவரப்பெற்றவர்களாக இருக்கிறார்கள். அபுலாவின் மகள், தொட்டாலே போதும் காயங்கள் தானாக ஆறிவிடும். ஒரு பேத்தி, மலையைக்கூட ஒரே கையால் தூக்கி எறியும் பலசாலி. மற்றொரு பேத்தி, ஒரு சொடுக்கில் காற்றிலேயே மிதக்கும் ரோஜா தோட்டத்தை படைப்பாள். இப்படி இயற்கையுடன் இயைந்த அற்புத சக்திகள் நிறைந்த குடும்பத்தினருக்கு மத்தியில், எந்த வரமும் கிடைக்கப் பெறாத ஒருத்தி மீராபெல் மட்டுமே. குடும்பத்தின் கடைக்குட்டியான பேரனுக்குக்கூட புலி, எலி என அத்தனை விலங்குகளும் நண்பர்கள். பறவைகளின் பேச்சுகள்கூட அவனுக்குப் புரியும். ஆனால், மீராபெல்லுக்கு மட்டும் எந்த சக்தியையும் அற்புத மெழுகுவர்த்தி ஏனோ அருளவில்லை.

இது மீராவை சஞ்சலப்படுத்தினாலும் அவள் தன்னம்பிக்கை இழக்காமல் துடிப்போடும் உற்சாகத்தோடும் சுற்றி வருகிறாள். ஒரு கட்டத்தில், தனது குடும்பத்துக்கு ஏதோ படுபயங்கரமான ஆபத்து நேரவிருக்கிறது என்பதை மீரா உணர்கிறாள். அதன் பிறகாவது அவளுக்கு அதுவரை கிடைத்திடாத அற்புத சக்தி கிடைத்ததா, இல்லையா? 3 தலைமுறையைக் கொண்ட தனது பெரிய குடும்பத்தை மீராவால் காப்பற்ற முடிந்ததா, இல்லையா? என்பதுதான் மீதிக் கதை.

இதில் கெட்டித்தட்டிப்போன பெண்மையின் வரையறையை எங்கே இந்தப் படம் புரட்டிப்போட்டது என்ற கேள்வி எழலாம். கதாநாயகனே இல்லாத இந்தப் படத்தின் கதாநாயகி மீராபெல். இவள் குட்டை சுருள் முடியும், வட்டக் கண்ணாடி அணிந்த முட்டைக் கண்களும், உருண்டையான நாசியும், மாநிறமும், சாதாரண விடலைப் பெண்ணின் உடல்வாகும் கொண்டவளாகவே தோன்றுகிறாள். இவளது ஆடையிலும் உடலமைப்பிலும் போகப்பொருளாக எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் தனது நடவடிக்கையால் நம்மை கவர்ந்திழுத்துவிடுகிறாள்.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்வென்றால், பொதுவாக அழகின் இலக்கணத்தை தகர்க்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கதாபாத்திரத்தை அவலட்சணமாகக் காட்டும் கொடுமையும் சினிமாவில் வழக்கம். ஆனால், ’என்கான்ட்டோ’ அப்படி எங்கேயும் செய்துவிடவில்லை. மீராபெல் மட்டுமல்ல... அவளுடைய அக்காவான லூயிசா கதாபாத்திரமும் பெண்மை என்றால் மென்மை என்ற விதியை ஒற்றை விரலில் தூக்கிக் கடாசும் புஜபலம் மிக்கவள்.

ஊருக்குள் மேயும் கழுதைக்கூட்டத்தையே தனது தோளில் தூக்கி வந்துவிடுபவள் லூயிசா. வெறெந்தப் படமாக இருந்தாலும் ஒரு ஆணுக்கு மட்டுமே அந்தக் கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கும். அதேநேரத்தில், ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தில் வரும் பளுதூக்கும் முறைப்பெண் கதாபாத்திரம் போல, இங்கு லூயிசா எந்த ஆணாலும் நிராகரிக்கப்படவும் இல்லை என்பது மேலும் ஆறுதல் அளிக்கும் விஷயம். அதுமட்டுமின்றி, ’மேட்ரிகல்ஸ்’ குடும்ப உறுப்பினர்களில் இனம், நிற அடிப்படையில் பலதரப்பட்டவர்கள் இருப்பதைக் காணலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’மேட்ரிகல்ஸ்’ குடும்பம் அபுலா மூலம் தாய்வழிச் சமூகமாக உயிர்ப்பெற்றெழுகிறது. அதேபோல படத்தில் ஆண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் குடும்பத்தலைவன், ஊர் பஞ்சாயத்துத் தலைவர், கதாநாயகியை வில்லனிடமிருந்து காப்பாற்றும் அதிரடி ஹீரோ போன்ற பதவிகள் ஆண்களுக்கு இங்கு வழங்கப்படவில்லை. மீராவின் அப்பாவும் தாய்மாமா ப்ரூனோவும் எல்லாவிதமான பலவீனங்களும் நிறைந்த மாந்தர்களாகவே வந்து போகிறார்கள்.

இளம் வயதில் கணவனை இழந்த அபுலாவோ தனது 3 குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஊருக்கே தாயாக மாறுகிறார். அதேநேரம் மூதாட்டியான பிறகும் தனது தவறை பேத்தியான மீராபெல்லிடம் ஒப்புக்கொள்ளும்போது, அதிகார படிநிலையையும் கடந்த அன்புசூழ் சமூகமாக ’என்காட்டோ’ பரிணமிக்கிறது. சினிமா என்பதைத்தாண்டி, தென் அமெரிக்க நாடான கொலம்பியா என்றாலே போதைப் பொருள் கடத்தலிலும் கலவரத்திலும் ஈடுபடும் குற்றவாளிகளின் கூடாரம் என்கிற மோசமான முத்திரையை மாற்ற, படத்தின் எழுத்தாளர்களும் இயக்குநர்களுமான ஜரெட் புஷ், பைரன் ஹாவர்ட், சரைஸ் காஸ்ட்ரோ ஸ்மித் ஆகிய மூவரும் அற்புதமாக முனைந்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்த்து ரசித்தபடியே தங்களின் கட்டுப்பெட்டித்தனத்திலிருந்து விடுபட வந்திருக்கிறது ‘என்கான்ட்டோ’.

x