ஓடிடி உலா: விவாகரத்தைக் கொண்டாடும் ‘டிகப்பில்ட்’


காதல் கதைகளின் நோக்கம் என்ன... கதை இறுதியில் திருமணத்தில் முடிய வேண்டும். பெரும்பாலான காதல் கதைகள் நாயகனும் நாயகியும் ஒன்றுசேர என்னென்ன இன்னல்களைச் சந்திக்கிறார்கள் என்பதை மையம் கொண்டே இருக்கும். வெகு சில கதைகள் மட்டுமே பிரிவையும் விவாகரத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அப்படி உருவான ஒரு சில கதைகளில் ஒன்றுதான் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘டிகப்பில்ட்’.

மாதவன், சுர்வீன் ச்சாவ்லா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, ‘பாத்தாள்லோக்’ தொடரின் திரைக்கதையை எழுதிய ஹர்டிக் மேத்தா இத்தொடரை இயக்கியுள்ளார். ‘சீரியஸ் மேன்’ நாவலின் மூலம் பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மனு ஜோசப் ‘டிக்கப்பில்ட்’ திரைக்கதையை உருவாக்கியுள்ளார். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்து, திருமண பந்தத்தில் இருந்து விடுபட நினைக்கும் தம்பதியர், விவாகரத்து செய்தியைப் பள்ளிக்குச் செல்லும் தங்கள் பெண்ணிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற சவால். இதுதான் இத்தொடரின் கதை.

விவாகரத்து பார்ட்டி

மும்பை குர்கான் பகுதியில் சகல வசதிகளுடன் செல்வந்தர்களாக வாழ்பவர்கள் ஆர்யா (மாதவன்), அவரது மனைவி ஸ்ருதி (சுர்வீன் ச்சாவ்லா) மற்றும் அவர்களது மகள் ரோகிணி. இந்தியாவின் 2-வது அதிக விற்பனைகளைக் கொண்ட நாவலாசிரியர் ஆர்யா. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ருதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தீர்ந்துபோய் திருமண வாழ்க்கை மட்டும் எஞ்சி நிற்க, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

இருவரும் விவாகரத்து செய்துகொண்டாலும், தங்கள் மகள் கல்லூரிக்குச் செல்லும்வரை ஒரே வீட்டில் நண்பர்களாக வசிப்போம் என்று முடிவெடுப்பார்கள். ஆனால், இந்த முடிவை தங்கள் மகளிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம் இருவருக்கும் இருக்கும். விவாகரத்து என்பது சோகமான ஒரு விஷயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை, தங்கள் மகளுக்கும் சமூகத்துக்கும் உணர்த்தும் வகையில் விவாகரத்து பார்ட்டி (டிகப்ளிங் பர்ட்டி) நடத்த முடிவெடுப்பார்கள். இவர்கள் எப்படிப் பிரிந்தார்கள், அவர்களுடைய விவாகரத்து பார்ட்டி நடந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

மாதவனின் புதுப் பரிமாணம்

திரைக்கதையில் வரும் ஆர்யா, மிகச் சிக்கலான யாரும் அவ்வளவு எளிதில் விரும்பி விடமுடியாத ஒரு ஆணின் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன். அசுத்தமான கைகளின் மீதான அவருடைய பயமாக இருக்கட்டும், இந்தியாவின் அதிக விற்பனைகளைக் கொண்ட எழுத்தாளரான சேட்டன் பகத்துடன் அடிக்கடி மோதிக் கொள்வதாக இருக்கட்டும், நகைச்சுவைக்குப் பஞ்சம் வைக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார் மாதவன். (அந்த நகைச்சுவைகளில் சில சிக்கலும் உள்ளன. அவற்றைப் பற்றி இறுதியில் பார்ப்போம்).

ஏர்போர்ட்டில் காவல் அதிகாரியிடம் வம்பிழுப்பது, திருநங்கைகள் என்று நினைத்து மேடையில் பெண்களிடம் பேட்டி எடுப்பது என்று பல ரகளைகளைச் செய்கிறார் மாதவன். தலைக்கனம் பொருந்திய மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத, தான் போட்டு வைத்திருக்கும் சிறிய வட்டமே உலகம் என்று நினைக்கும் ஆணாதிக்கம் நிறைந்த இந்திய மேட்டுக்குடி ஆணை மிகத் துல்லியமாகப் பிரதிபலித்திருக்கிறார் மாதவன். ஆர்யாவின் மனைவியான ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுர்வீன் ச்சாவ்லா, தன்னுடைய அதீத அறிவின் மூலம் மற்றவர்களைத் தொல்லைப்படுத்தும் ஆர்யாவுக்குச் சரியான பதிலடி கொடுக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

திருமணச் சிக்கல்கள்

திருமணத்தையும் உறவுச் சிக்கல்களையும் மையமாக வைத்து திரைக்கதை உருவாகி இருந்தாலும், அவை பற்றி ஆழமாகப் பேசுகிறதா என்றால் இல்லை. அதீத பணம் கொண்ட வாழ்வில் வேறு எந்தக் குறைகளும் இல்லாத இருவர், நம் வாழ்வில் பிரச்சினை எதுவும் இல்லையே என்று தேடிப் போய் திருமணத்தில் பிரச்சினையை வரவழைத்துக்கொண்டது போலவே 2 கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

உறவுச் சிக்கல்களையும் மனப் பிணக்குகளையும் அழுத்தமாக ஆராயாமல், கதையின் ஒரு சிறு அங்கமாக வைத்துக்கொண்டு நகைச்சுவையை நம்பி மட்டுமே திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. இத்தொடரின் அடிப்படை காரணத்தையே இது கேள்விக்குள்ளாக்குகிறது. ஒருசில இடங்களில் மட்டுமே ஆர்யா மற்றும் ஸ்ருதிக்கு இடையிலான சிக்கல் அழுத்தமாகக் காட்டப்படுகிறது. முக்கியமாக, இறுதி எபிசோடில் ஆர்யா மற்றும் ஸ்ருதியின் கார் ஓட்டுநர் பேசும் காட்சியைச் சொல்லலாம்.

பிரச்சினைக்குரிய நகைச்சுவைகள்

சமூகப் பிரச்சினைகளை மிகக் கவனமாகக் கையாண்ட ‘பாத்தாள்லோக்’ போன்ற திரைக்கதையை எழுதின ஹர்டிக் மேத்தா, தான் இயக்கியுள்ள ‘டிகப்பில்ட்’ தொடரில் எப்படி இது போன்ற நகைச்சுவைகளையும் கதாபாத்திரங்களையும் அனுமதித்தார் என்ற கேள்வி பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. உருவக் கேலி, உழைக்கும் வர்க்கத்தினரை எள்ளி நகையாடுவது, பெண்களைப் பற்றிய ஆணாதிக்க மனநிலையை நிலைநிறுத்தும் இரண்டாந்தர நகைச்சுவைகள் என்று தொடர் முழுக்க ஆர்யாவும் அவரது நண்பர்களும் பேசுவது போலத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டார்க் காமெடி என்று இவற்றை நியாயப்படுத்தும் தரப்பினர், ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் ஒரு திரைக்கதையில் ஒரு கதாபாத்திரம் ஆணாதிக்கம் கொண்டவராகவோ, சிறுபான்மை மக்களுக்கு எதிரானவராகவோ, உழைக்கும் வர்க்கத்தினரை தரக்குறைவாகப் பேசும் முதலாளித்துவ மனநிலை உள்ளவராகவோ கூட இருக்கலாம். ஆனால், திரைக்கதையின் ஓட்டத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் பார்வையும், கருத்தும் தவறு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லவேண்டியது படைப்பாளர்களின் கடமை. அப்படிச் சொல்லும்பட்சத்தில், அது போன்ற கதாபாத்திரங்களையும் கருத்துகளையும் திரைக்கதையின் ஒரு அங்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், இப்படி மட்டமான நகைச்சுவைகளைச் சொல்லிவிட்டு அக்கதாபாத்திரம் தண்டனையே இல்லாமல் திரைக்கதையின் இறுதியில் நழுவிச்சென்றால், அந்தக் கதாபாத்திரத்தின் கருத்துகளுக்குப் படைப்பாளர்கள் ஒத்துப்போவதையே குறிக்கும்.

‘டிகப்பில்ட்’ தொடரின் முடிவில், ஆர்யா கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட முடிவு சரியா என்பதை, ரசிகர்களின் பொறுப்பில் விட்டுவிடுவதே நல்லது.

x