ஓடிடி உலகம்: சிறுத்தை மனிதனை வேட்டையாடும் ‘ஆரண்யாக்’


ஒரு குற்றம். அதன் பின்னணியைத் தேடிப்போகும் போலீஸ் அதிகாரியின் பயணம். அவர் சந்திக்கும் சவால்கள். இந்தப் பின்னணியைக் கொண்டு, சமீபத்தில் பாலிவுட்டில் சில வெப் தொடர்கள் வெளியாகி மிகப் பெரும் வெற்றிபெற்றன. உதாரணத்துக்கு, ‘தி ஃபேமிலி மேன்’, ‘பாதாள் லோக்’ போன்ற தொடர்களைச் சொல்லலாம். அப்படியான கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது ‘ஆரண்யாக்’ தொடர். இயக்குநர் வினை வைக்குல் இயக்கத்தில் ரவீனா டாண்டன், பரம்ப்ரடா சாட்டர்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ளது இந்தத் தொடர்.

ஆட்கொல்லி சிறுத்தை மனிதன்:

சிரோனா என்ற கற்பனையான ஓர் மலைக் கிராமத்தில் நடக்கிறது ‘ஆரண்யாக்’ தொடரின் கதை. சிரோனாவில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் கஸ்தூரி டோக்ரா. கணவர் மற்றும் தன் மகள், மகனுடன் நேரத்தைச் செலவிடவும், உடைந்துவிடும் நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் கணவருடனான தனது மண வாழ்க்கையைச் சீரமைக்கவும் ஒரு வருட காலம் பணியிலிருந்து விடுப்பு எடுக்கிறார் கஸ்தூரி. அங்கிருந்து தொடங்குகிறது கதை.

கஸ்தூரியின் பதவியை இடைக் காலத்துக்கு நிரப்ப, சிரோனாவில் பதவியேற்பார் அங்கத் மாலிக். அங்கத் மாலிக் பதவி ஏற்றதும் சிரோனா வந்திருந்த பிரான்ஸ் பெண்ணான ஜூலியின் மகள் ஏமி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாள். தான் விடுப்பிலிருக்கும் நேரம் பார்த்து இப்படி ஒரு பெரிய கேஸ் நடக்கிறதே என்ற தவிப்பில் இருப்பார் கஸ்தூரி. ஒருகட்டத்தில் ஏமியின் உடலைக் கஸ்தூரி தற்செயலாகக் கண்டுபிடிக்க, மீண்டும் பணியில் இணைவார்.

பெருநகரங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் விசாரணையைத் திட்டமிட்டு நடத்தும் அங்கத், உள்ளூரிலேயே 15 வருடம் பழக்கப்பட்டு, ஊர் மக்கள் அனைவரையும் அறிந்து வைத்திருக்கும் கஸ்தூரி - இவர்கள் இருவருக்கும் விசாரணையில் கருத்து முரண்பாடுகள் நீடிக்கும். ஏமி கொலை செய்யப்பட்டது போலவே, பல ஆண்டுகள் முன்பு பல பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பார்கள். இந்தக் கொலைகளைச் செய்தது, சிறுத்தையும் மனிதனும் கலந்த கலவையான அமானுஷ்யமான சிறுத்தை மனிதன்தான் என்ற செய்தியும் மக்கள் மத்தியில் பேசப்படும்.

ஏமியைக் கொன்றதும் சிறுத்தை மனிதன்தான் என்று சில காவல் அதிகாரிகளே நம்பும் சூழ்நிலை இருக்கும். ஏமியின் கொலை வழக்கை இணைந்து விசாரிக்க ஆரம்பிப்பார்கள் கஸ்தூரியும் அங்கத்தும். விசாரணையின் எல்லைகள் விரிய விரிய, அந்த ஊரின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளின் மகன்கள், அரசியல்வாதிகளுக்கு இடையிலான பதவிப் போட்டி, அதில் ஒரு அரசியல்வாதியின் மகளைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தொழிலதிபர், காவல் துறையில் இருக்கும் கறுப்பு ஆடுகள், ஏமியின் அம்மா ஜூலியிடம் இருக்கும் ரகசியம், முக்கிய குற்றவாளி போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே, பொது இடத்தில் வைத்து கழுத்தில் நகத்தால் கீறிக்கொள்ளும் சிறுத்தை மனிதன் என கதாபாத்திரங்களின் தன்மைகள் சிறிது சிறிதாக 8 எபிசோடுகளுக்கு விரிகின்றன.

கணிக்கமுடியாத முடிவு:

அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் போலக் கடைசி மணித்துளி வரை இவர்தான் கொலைகாரர் என்று கணிக்க முடியாதது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தாலும், திரைக்கதை முழுக்க வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள். யார் யாருக்கு என்னென்ன பிரச்சினை, அவர்களின் நோக்கம் என்ன என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பார்ப்பது சிரமமாக இருக்கிறது. கொலைகாரன் யாரென்று பார்வையாளர்கள் கணித்துவிடாமல் இருப்பதற்காகவே, பல கதாபாத்திரங்களுக்கு பின் கதைகளும் பிரச்சினைகளும் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது சில இடங்களில் அயர்வை ஏற்படுத்துகின்றன.

ரவீனா டாண்டன்:

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரவீனா டாண்டன் நடிக்கும் முதல் தொடர் ‘ஆரண்யாக்’. திரைக்கதையின் மையக் கதாபாத்திரத்தின் பொறுப்பறிந்து மிக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரவீனா. குற்றவாளிகளைச் சிறிதும் யோசிக்காமல் அடி பின்னி எடுத்து விசாரிக்கும் காட்சிகளிலும், கருஞ்சிறுத்தையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் காட்சிகளிலும் அதிரடி பெண்மணியாகப் பாய்ச்சல் காட்டுபவர், தன் கணவரின் உண்மை ஸ்வரூபம் அறிந்ததும் மனமுடைந்து அழும் காட்சிகளில் கையறு நிலையில் இருக்கும் பரிதாபமான பெண்ணை கண் முன் நிறுத்துகிறார்.

பரம்ப்ரடா சாட்டர்ஜி, இத்தொடர் முழுதும் முகத்தில் பெரும் சலனங்களைக் காட்டாத இறுக்கமான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரவீனா கேட்கும்போது துக்கம் மேலிட, பேச்சை மாற்றும் காட்சிகளில் அவர் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. இத்தொடரின் முக்கிய பலம் சுரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு. சிக்கலான திரைக்கதையை முடிந்தவரை எளிமைப்படுத்தி தொய்வில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். கற்பனை நகரமான சிரோனாவையும் இன்னொரு கதாபாத்திரமாகவே நம்மை உணரச் செய்கிறது, கோஸ்வாமியின் ஒளிப்பதிவு.

நீ...ண்ட கதை:

ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலை சிறுத்தை மனிதன் என்ற அமானுஷ்ய மனிதனால் நடத்தப்படுகிறது என்ற வதந்தி. உண்மையில் அந்த கொலையைச் செய்தது யார். இப்படியான ஒரு திரைக்கதையை முடிந்தவரைச் சிக்கலாகவும் குழப்பமாகவும் சொல்லியிருக்கிறது ஆரண்யாக். பாலிவுட்டிலிருந்து பல அற்புதமான தொடர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ‘ஆரண்யாக்’ தொடருக்கு ஜஸ்ட் பாஸ் மட்டுமே போட முடியும்.

தற்போது வெளியாகியிருக்கும் முதல் சீசனில், தலா 40 முதல் 48 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய 8 எபிசோடுகள் இடம்பெற்றுள்ளன. முதல் 6 எபிசோடுகளில் பரபரப்பாக முடிச்சுகளைப் போட்டு, கடைசி 2 எபிசோடுகளில் அதற்கான விடைகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

க்ரைம் திரில்லர் நாவல்கள் படிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்றால், ‘ஆரண்யாக்’ தொடரும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால், இந்தத் தொடரை ஒரு நாவல் போல் உருவாகியிருப்பதுதான். கதை வேறு, திரைக்கதை வேறு என்ற வேறுபாட்டை உணர்ந்து கொள்ளாமல் நீண்ட நாவலாக வெளியாகியிருக்கிறது ‘ஆரண்யாக்’

x