[X] Close

திரும்பிப் பார்க்கிறோம் 2018: கண்கலங்க வைத்த தமிழ் சினிமா பிரபலங்களின் மறைவுகள்


death-of-cine-celebs

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 14:00 pm
  • அ+ அ-

2018-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த வருடம் தமிழ் சினிமா பிரபலங்களின் மறைவுகள், நம்மைக் கண்கலங்க வைத்தன. அவற்றைப் பார்க்கலாம்...

பிப்ரவரி 24: நடிகை ஸ்ரீதேவி

1969-ம் ஆண்டு வெளியான ‘துணைவன்’ தமிழ்ப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி (வயது 55). பிறகு, 1976-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினியுடன், கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஸ்ரீதேவி, 1978-ம் ஆண்டு இந்தியிலும் அறிமுகமானார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்தவர், தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலானார். இந்நிலையில், உறவினர் திருமணத்துக்காகக் குடும்பத்துடன் துபாய் சென்ற ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட, அங்கேயே அவர் உயிர் பிரிந்தது. அவருடைய உடல், விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்கு நடைபெற்றது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 55 வயதிலும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பெருமை, வேறெந்த பெண்ணுக்கும் கிடைக்காது. அதனால்தான், இறந்தும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மயிலு. கடந்த வருடத்தில் வெளியான ‘மாம்’ படத்தில் நடித்ததற்கான ‘சிறந்த நடிகை’க்கான விருது ஸ்ரீதேவிக்கு இந்த வருடம் அறிவிக்கப்பட்டது. 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு, இது முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

 மார்ச் 7: தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர்

பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'பட்டியல்'. இந்தப் படத்தைத் தயாரித்தவர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தை சேகர் (வயது 63). எனவே, இவர் 'பட்டியல் சேகர்' என்று அழைக்கப்பட்டார். 'பட்டியல்' தவிர 'கழுகு' மற்றும் 'அலிபாபா' படங்களையும் தயாரித்துள்ளார். அத்துடன், 'ராஜ தந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 'பட்டியல்' சேகர், தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மார்ச் 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஜூலை 1: தயாரிப்பாளர் தியாகராஜன்

சிவகுமார், ஜெயசித்ரா நடிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர். தியாகராஜன் (வயது 74). ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘ரங்கா’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அன்புக்கு நான் அடிமை’, ‘அன்னை ஓர் ஆலயம்’ உள்ளிட்ட 33 படங்களை அவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலான படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 3: இயக்குநர் சி.சிவக்குமார்

அஜித் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டை ஜடை வயசு’ படத்தை இயக்கியவர் சி.சிவக்குமார் (வயது 49). அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’ படத்தையும் இயக்கினார். உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர், சென்னை சாலிகிராமம் வெங்கடேசா நகரில் தனியாக வசித்து வந்தார். ஆகஸ்ட் 3-ம் தேதி அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் விருகம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிவக்குமார் நாற்காலியில் அமர்ந்தவாறு இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீஸார் சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செப்டம்பர் 7: தயாரிப்பாளர் எம்.ஜி.சேகர்

எம்.ஜி. பிக்சர்ஸ் மூலம் விஜயகாந்த் நடித்த ‘திருமூர்த்தி’, விஜய் நடித்த ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’, மம்மூட்டி நடித்த ‘கிளிப்பேச்சு கேட்கவா’, சத்யராஜ் நடித்த ‘தாய்மாமன்’ மற்றும் ‘சிவசக்தி’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் எம்.ஜி.சேகர் (வயது 76). மேலும், ‘வசந்த மலர்கள்’, ‘சீமான்’, ‘பூச்சூடவா’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 7-ம் தேதி மாலை காலமானார்.

செப்டம்பர் 7: தயாரிப்பாளர் எம்.ஜி.சேகர்

எம்.ஜி. பிக்சர்ஸ் மூலம் விஜயகாந்த் நடித்த ‘திருமூர்த்தி’, விஜய் நடித்த ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’, மம்மூட்டி நடித்த ‘கிளிப்பேச்சு கேட்கவா’, சத்யராஜ் நடித்த ‘தாய்மாமன்’ மற்றும் ‘சிவசக்தி’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் எம்.ஜி.சேகர் (வயது 76). மேலும், ‘வசந்த மலர்கள்’, ‘சீமான்’, ‘பூச்சூடவா’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 7-ம் தேதி மாலை காலமானார்.

நவம்பர் 30: இயக்குநர் ராபர்ட்

தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த இரட்டை இயக்குநர்களில் முக்கியமானவர்கள் ராபர்ட் - ராஜசேகர். ‘ஒருதலை ராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராபர்ட் (வயது 68), அதன்பிறகு இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து ‘பாலைவனச் சோலை’, ‘கல்யாண காலம்’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘பறவைகள் பலவிதம்’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘புதிய சரித்திரம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன், இணைந்து இயக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்ளாத ராபர்ட், சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நவம்பர் 30-ம் தேதி காலமானார்.

டிசம்பர் 18: மேக்கப் மேன் முத்தையா

சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த ‘பராசக்தி’ படத்தில், அவருக்கு மேக்கப் போட்டவர் முத்தப்பா. அதுமட்டுமல்ல, கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்கும் இந்த முத்தப்பா தான் மேக்கப் மேன். இப்படி சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்கள் தொடங்கி தற்போதுள்ள த்ரிஷா வரை பலருக்கும் மேக்கப் போட்டவர் முத்தப்பா. ஒருகட்டத்தில், ரஜினிக்கு மட்டுமே ஆஸ்தான மேக்கப் மேனாக மாறினார். அத்துடன், ரஜினி படங்களில் சின்னச்சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார் முத்தப்பா. ‘மேக்கப் மேன் முத்தப்பா படத்தில் நடித்தால் ராசி’ என்று சொல்லி, எப்படியாவது அவருக்கு ஒரு கேரக்டர் வாங்கிக் கொடுத்துவிடுவார் ரஜினி. முத்தப்பாவைப் பற்றி ‘ஒப்பனைக்காரன்’ என்றொரு புத்தகமே வெளிவந்துள்ளது. இள.அழகிரி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முத்தப்பா, டிசம்பர் 18-ம் தேதி காலை சென்னையில் காலமானார்.

டிசம்பர் 27: நடிகர் சீனு மோகன்

கிரேசி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் மோகன் (வயது 61). 1979-ல் கிரேசி கிரியேஷன்ஸ் நாடகக்குழு ஆரம்பித்த நாட்களில் இருந்தே அதில் மோகன் இடம்பெற்றிருந்தார். 80-களின் இறுதியில், 'வருஷம் 16', 'அஞ்சலி', 'தளபதி' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். எனினும், தொடர்ந்து மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து, தொடர்ந்து நடித்து வந்தார். கிரேசி மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தபோது, அதிலும் சீனு கதாபாத்திரத்தில் மோகன் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் மோகன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல குறும்படங்களிலும் மோகன் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு 'இறைவி' படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து 'ஆண்டவன் கட்டளை', 'கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த மோகன், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், டிசம்பர் 27-ம் தேதி காலை, தீவிர மாரடைப்பின் காரணமாக மோகன் காலமானார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close