[X] Close
 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக மொட்டையடித்துக் கொண்டு நம்பிக்கை விதைத்த 4 வயது சிறுமி


this-woman-s-4-year-old-daughter-chopped-off-hair-to-support-her-grandmother

  • kamadenu
  • Posted: 10 May, 2018 17:12 pm
  • அ+ அ-

குடும்பத்தில் யாருக்காவது உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்டவருடன் சேர்த்து அவரை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும். அதிலும், புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும் போது நோயாளிக்கு இரு மடங்கு கவலை அதிகரிக்கும். ஒன்று, நோயால் ஏற்படக்கூடிய உடல் வலி. மற்றொன்று, மன வேதனை. குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய முடியை இழக்க வேண்டி இருப்பதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் முடியை தானமளிக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனால், மும்பையை சேர்ந்த 4 வயது சிறுமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய பாட்டிக்கு ‘பெண்கள் முடியை இழந்தாலும், அதுவும் தனியழகு தான்’ என்பதை அழகாக உணர்த்தி, பாட்டிக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.
தன்னுடைய அம்மாவுக்கு, தனது 4 வயது மகள் நம்பிக்கை நட்சத்திரமானதை அச்சிறுமியின் தாய் ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ எனும் முகநூல் பக்கத்திலிருந்து பதிவிட்டுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவு:

“ஒராண்டுக்கு முன்பு என்னுடைய அம்மா நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் புற்றுநோயின் 4-ம் கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அவர் எப்போதும் எனக்கு தூணாக இருப்பவர். ஒரு அம்மாவாக எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுப்பவர். என்னுடைய மகள் இஷான்விக்கு சிறந்த பாட்டியாக இருந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை முதலில் அறிந்துகொண்ட போது நான் கையறு நிலையில் இருந்தேன். என்னுடைய அம்மா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். யாராலும் வெல்ல முடியாத என் அம்மா, பலவீனமாக இருந்த ஒரு தருணத்தை நான் அப்போது பார்த்தேன். 

ஆனால், நட்சத்திரங்கள் எங்களை பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடைய 4 வயது மகள் எங்களை மீட்க முன் வந்தாள். அவள் என்னுடய வெளிச்சத்திற்கு காரணமானவள் மட்டுமல்ல, என்னுடைய அம்மாவின் இருண்ட நாட்களை அவள் மலரச் செய்தாள். என் அம்மாவுக்கு உணவு ஊட்டுவாள். கட்டித் தழுவுவாள்.

ஆனால், என் அம்மா முடியை இழக்க ஆரம்பித்தபோது தான் எனக்கு புற்றுநோயின் கொடூரமே புரிந்தது. வீட்டின் காலிங்பெல் அடித்தாலே, அம்மா ஓடிச்சென்று தன்னுடைய ‘விக்’ஐ எடுத்து வருவார். பெண் மொட்டையாக இருப்பது என்பது அவமானத்துடன் இணைத்துப் பேசப்படுவதால் அம்மா மிகவும் பாதிக்கப்பட்டார். ஆனால், என் மகள் இஷான்வி மொட்டை அடித்துக் கொள்வது ‘டிரெண்டியாக’ இருக்கும் என சொல்லி எங்களை சமாதானப்படுத்துவாள். அப்படி எடுத்துக் கொள்ளும்போது உடல் நலக் குறைவுடன் அதனை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இருக்காது. அதை எங்களுக்கு நிரூபிக்க, இஷான்வி தானும் மொட்டை அடித்துக் கொண்டாள்.

நண்பர்கள் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி 4 வயதில் இஷான்வி பொருட்படுத்தவில்லை. மொட்டை அடித்துக் கொள்ளுவது நவீனமாக இருக்கும் என்பதை தன்னுடைய பாட்டிக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாள்.

இப்போது என் அம்மாவும், இஷான்வியும் மொட்டை அடித்துக் கொள்வதில் பார்ட்னர் போல் செயல்படுகின்றனர். அதைப் பற்றியே பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இருவருமே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.

சமூகத்தில் நம்பப்பட்டிருக்கும் எல்லாவற்றைப் பற்றியும் என் மகள் கேள்வி எழுப்புகிறாள். தைரியமாக இருப்பவர்கள், வாழ்க்கைக்காக போராடுபவர்கள் ஏன் முடியை இழப்பதற்கு இவ்வளவு சங்கடப்படுகிறார்கள்? பெருமையாக உணருங்கள். அதனை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள். அதனை என் மகள் எனக்கு உணர்த்தியிருக்கிறாள். இதை மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.” 
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close