[X] Close

மன்னிப்பு... விஜயகாந்துக்கு மட்டுமா பிடிக்காத வார்த்தை?


mannippu-vijayakanthkku-mattumaa-pidikatha-vaarthai

  • வி.ராம்ஜி
  • Posted: 03 May, 2018 10:58 am
  • அ+ அ-

 

காலம் ரொம்பத்தான் மாறிவிட்டது. முன்பெல்லாம் கேட்கிற மன்னிப்புகளும் கொடுக்கப்படுகிற மன்னிப்புகளுமே சக மனிதர்களிடையே உறவுகளை வலுப்படுத்தும். இன்னும் இன்னுமாய் அன்பு வளர்க்கும். ஒரு மன்னிப்புக்குப் பிறகான சந்திப்புகளும் பேச்சுகளும் சம்பவங்களும் தருணங்களும் இன்னும் இனிக்கச் செய்பவை. நெருங்கச் செய்பவை. அந்த மன்னிப்புகள்... ‘ஸாரி’ என்றாகி... இப்போது அதுவும் இல்லாது போய்விட்டதுதான் எல்லாவற்றுக்கும் சிக்கலாகிவிட்டன.

மனித உணர்வுகளும் எண்ணங்களும் விசித்திரமானவை. உங்கள் வீட்டுக்கு ஒருவர் வருகிறார்... உடனே நீங்கள் ‘காபி சாப்பிடுங்கள்’ என்பீர்கள். அவர், ‘பரவாயில்லை, இப்பதான் சாப்பிட்டேன்’ என்பார். ஆனாலும் நீங்கள் விடமாட்டீர்கள். அவரும் வேண்டாம் வேண்டாம் என்றே மறுப்பார்.

இப்போது காட்சியை கொஞ்சம் மாற்றிப் போடுங்கள். உங்கள் வீட்டுக்கு ஒருவர் வருகிறார். அவரை வரவேற்க மட்டுமே செய்கிறீர்கள். ஆனால் ‘காபி சாப்பிடுங்கள்’ என்று சொல்லவில்லை. இத்துடன் நிறைவாகிவிடுகிறது, இந்தச் சந்திப்பு?

‘என்னய்யா அவன்... சுத்த இங்கிதமோ பண்பாடோ தெரியாதவனா இருக்கான். அவன் வீட்டுக்கு போனேன். ஒருவார்த்தை காபி சாப்பிடுன்னு சொல்லவே இல்லை’ என்பார்கள்தானே.

கேட்டால் வேண்டாம் என்கிறார்கள். கேட்காவிட்டால், கேட்கவே இல்லை என்று பொருமித் தூற்றுகிறார்கள். என்ன இது டிசைன்?

ஆமாம். காபி குடியுங்கள் என்பது உங்கள் பண்பாடு. வேண்டாம் என மறுப்பது அவரின் உரிமை. கேட்கப்படும்போதுதான் மறுக்கப்படும். ஏற்கப்படும். கேட்காததற்கு, பல காரணங்களைச் சொல்லிக் கொள்ளலாம்தானே.

இன்னொரு சம்பவம்...

ரயிலிலோ, பஸ்சிலோ... உங்கள் காலை ஒருவர் மிதித்துவிடுகிறார். அவரின் ஷூ, உங்கள் சுண்டுவிரலில் பட்டு வலி பின்னியெடுக்கிறது. உடனே அவர் என்ன செய்வார். முதலில் அவரின் கைகளால், உங்களை பாவனையாகத் தொடுவார். ‘ஸாரிங்க... தெரியாம மிதிச்சிட்டேன்’ என்பார். வலியைப் பல் கடித்துத் தாங்கிக் கொண்டே, நீங்கள் என்ன சொல்வீர்கள். ‘பரவாயில்ல... பரவாயில்ல...’ என்பீர்கள். ‘இதெல்லாம் கூட்டத்துல சகஜம்தான்’ என்று சமாதானப்படுத்துகிற விதமாகச் சொல்லுவோம்.

இப்போது கொஞ்சம் மாற்றிப் பாருங்கள்.

உங்கள் காலை நச்சென்று ஒருவர் மிதித்துவிட்டார். ஆனால் பாவனையாக உங்களைத் தொட்டுக் கொள்ளவும் இல்லை.  உங்களிடம் ‘ஸாரி’ கேட்கவும் இல்லை. சரி பரவாயில்லை என்று நினைத்துக் கொள்வீர்களா நீங்கள்?

அதான் இல்லை. ‘ஏங்க... ஷூ காலால இப்படி மிதிக்கிறீங்க’ என்பீர்கள். ‘கவனிக்கலை’ என்று  அசால்ட்டாக அவர் பதில் சொல்வார். ‘மிதிக்கறதையும் மிதிச்சிட்டு, எகத்தாளமா பதில் சொல்றீங்க’ என்று நீங்கள் எகிறுவீர்கள். ‘அதான் கவனிக்கலைன்னு சொன்னேன்ல’ என்று பதிலுக்கு அவரும் எகிறுவார். ‘ச்சீ... என்ன கலிகாலமோ எழவோ? மிதிச்சிட்டு ஒரு ஸாரி கூட கேக்காம பொணமாட்டம், இரக்கமே இல்லாம இருக்கானுங்க’ என்று உங்களுக்கு நீங்களாகவோ அல்லது அக்கம்பக்கத்தாரின் அனுதாபம் வேண்டியோ... பொருமலாகப் பேசிவிட்டு, அமருவீர்கள்.

ஆனால் ஷூ காலால் மிதித்த வலியை விட, அந்த ஆள் ‘ஸாரி’ கேட்காத வலிதான்  அந்தநாள் முழுவதும் உங்களைக் குடைந்தெடுத்து, மனதை கனமாக்கி என்னவோ செய்துகொண்டிருக்கும். ஏதோ ஓர் மிகப்பெரிய அநீதியை இந்த உலகமே சேர்ந்து உங்களுக்கு வழங்கிவிட்டதாக வருந்துவீர்கள். அந்த ‘ஸாரி’ கேட்காத கோபத்தை, எல்லோரிடமும் கோபமாகக் காட்டி, ஆத்திரமாகப் பேசி, எப்போதும் எரிச்சலுடனேயே எல்லோரையும் அணுகுவீர்கள்.

நீங்கள் சொல்வதும் உண்மைதான். இதுமாதிரியான சின்னச் சின்ன தருணங்களில் சொல்லுகிற ‘ஸாரி’களும் மன்னிப்புகளும்... மிகப்பெரிய ஆறுதலைத் தந்து, எப்போதோ எங்கேயோ பட்டுவிட்ட ரணங்களுக்கு ஒத்தடமாக, களிம்பாக அமைகிறது. ஆனால் ‘ஸாரி’ எனும் வார்த்தையைச் சொல்ல பலருக்கும் மனமில்லை.

மிக நெருங்கியவரிடமும் ஸாரி கேட்பதில்லை. உரிமை, உறவு, நட்பு, நமக்குள் ஸாரியெல்லாம் எதற்கு என்று ஸாரியை விட்டுவிடுகிறோம். யாரோ ஒருவரிடம் கேட்கவேண்டிய ஸாரிகளையும் மன்னிப்புகளையும் கூட கேட்பதே இல்லை. அப்படிக் கேட்டுவிட்டால், யாரிடம் மன்னிப்புக் கேட்கிறோமோ அவர்கள், ஒருகட்டத்தில், நெகிழ்ந்த அன்பில், நமக்கு நெருங்கியவர்களாகவும் மாறுவதற்கான சூழலும் இருக்கிறது.

காரோ டூவீலரோ... ஓட்டிக்கொண்டிருக்கும் போது, இடதுபக்கம் திரும்புவதற்கு இருபதடி முன்னதாக, இண்டிகேட்டர் போடவேண்டும். ஆனால் ஏதோவொரு ஞாபகத்தில் இருந்ததால், போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியதால், பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக்கொண்டே சென்றதால், திரும்பும் போதுதான் இண்டிகேட்டர் போடுகிறீர்கள். பின்னே வருபவரோ அல்லது முன்னே சென்றவரோ இதனால் முட்டிமோதி விழ நேரிடுகிறது. காரை ஓரங்கட்டி, அவரையும் அவர் டூவீலரையும் சரிசெய்து, அவரிடம் ஒரு மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்களா? அல்லது மன்னிப்பு கேட்பவர்களைத்தான் பார்த்திருக்கிறீர்களா?

இந்த மாத ஸேலரி ஸ்லிப்பையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளையோ, வீட்டில் தேடி, மனைவியைத் திட்டி, வீட்டையே ரெண்டாக்கி, அதகளம் பண்ணி, காலை உணவைக் கூட சாப்பிடாமல் கிளம்பி, அலுவலகத்திற்குள் வந்தால், அங்கே உங்கள் கப்போர்டில், பல்லிளித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தேடிய பொருள். ‘அடச்சே... அவளை எப்படிலாம் திட்டிட்டோம்’ என்று வீட்டுக்கு போன் செய்து, ‘ஸாரிடா கண்ணு. ஆபீஸ்லதான் இருக்கு. வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வைச்ச மாதிரி ஞாபகம். அதான் காணோமேன்னு டென்ஷனாயிட்டேன். ஸாரிடா ராஜாத்தி’’ என்று மனைவியிடம் சொல்லிவிடுகிறோமா என்ன?

மன்னிப்பு... தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை என்று ஏதோ ஒரு படத்தில் விஜயகாந்த் சொல்லுவார். யோசித்துப் பார்த்தால் பலருக்கும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.

மன்னிப்பு கேட்க எவரும் தயாராக இல்லை. ஆனால் மன்னிப்பை யாரோ நம்மிடம் கேட்கவேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பு.

கேட்டால்தான் கிடைக்கும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்னிப்பைக் கேளுங்கள். அங்கே மன்னிக்கவும் செய்வார்கள். அன்பு காட்டவும் தயாராகிவிடுவார்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close