[X] Close

உலக தண்ணீர் தினம்: குடத்தின்நீரைவிட குளிர்ச்சியான இதயங்கள்


world-water-day

  • பால்நிலவன்
  • Posted: 22 Mar, 2018 15:29 pm
  • அ+ அ-

ஆற்றில் குளித்ததும் சேற்றில் விளையாடியதையும் நினைத்து பழைய நினைவுகளில் ஏங்கும் மனிதர்கள் இன்று அதிகம். அதிலும் ஆற்றுவெள்ளம் கரைபுரண்டோடும் ஊர்களில் வாழ்ந்தவர்கள் இன்று தாகத்தைப் போக்க மினரல் பாட்டில்களிலும் மிடறுகள் நனைக்கப்படுவதையும் சில பக்கெட் தண்ணீரில் குளியலை முடிப்பதையும் ஏக்கத்தோடு பேசுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்கு இடமாற்றம் மட்டுமல்ல கால மாற்றமும்தான் காரணம் என்று தோன்றுகிறது.

ஆனால் ஊரில் இருந்த காலத்திலேயே பஞ்சத்தை அனுபவித்த நாட்களில் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் ஏராளம் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  

இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் பழைய நினைவுகள் அலைஅலையாய் முட்டிமோதத் தொடங்கின... அதெல்லாம் ஒரு விதமான காலம்! என்ன சொல்வது? எல்லோருக்கும் தண்ணீருக்கு ஆலாய்ப் பறந்ததற்கு காரணம் வான்மழை பொய்த்ததை மட்டும் சொல்வதா? அப்படி பொய்த்ததனால்தான் இயற்கையின் இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்தது என்று  சொல்வதா? வறண்ட அழகியலின் சோக சித்திரங்கள் என்று சொல்வதா என்று தெரியவில்லை.

1981, 82, 83, 84 போன்ற ஆண்டுகள் என்று நினைவு. என்றென்றும் மறக்கமுடியாத ஆண்டுகளாய் மனதில் பதிந்து போயின அந்த ஆண்டுகள். மிகப்பெரிய வறட்சித் தாண்டவமாடிய காலம் என்று சொல்ல வேண்டும். 

தண்ணீருக்கு அலைந்த முதல் ஞாபகம் அவரவர் தோட்டத்து கிணறுகள் வற்றிப்போய், ஊர் மக்கள் அனைவரும் சர்க்கார் கிணற்றில் (ஊர்பொதுக்கிணறு) தண்ணீருக்குப் போய் நின்றதுதான். மூன்று பக்கமும் உள்ள கழிகளின் ராட்டினங்களிலிருந்து தாம்புக்கயிற்றில் பக்கெட்கள் ஒருசேர இறங்கி நீரோடு மேலேறும்... சமயத்தில் இரண்டு கயிறுகள் பிணைந்துகொள்வது உண்டு. சில நேரங்களில் பக்கெட் கயிற்றிலிருந்து பக்கெட் கழன்று தண்ணீருக்குள் விழ அதை எப்படியாவது எடுக்கவேண்டும்.

பாதாள கொலுசு கேட்டு அலைய வேண்டி இருக்கும். பாதாள கொலுசு எல்லார் வீட்டிலும் இருக்காது. 

பாதாள கொலுசுவுக்கு பதிலாக நமதுவீட்டிலிருந்து ஏதாவது ஒரு பாத்திரம் தர வேண்டும். முக்கியமாக பித்தளை சொம்பு இந்தமாதிரி. பாதாள கொலுசும் தண்ணீரில் விழுந்துவிட்டால் பித்தளை சொம்பு அவர்களுக்கே சொந்தமாகிவிடும்.

இதில் கொடுமை என்னவென்றால்.. எல்லோரும் ஒரே நேரத்தில் காலையிலிருந்து தண்ணீர் எடுக்கும்போது மாலை 7 மணிக்கெல்லாம் தண்ணீர் அடிமட்டத்திற்கு இறங்கிவிடும். பக்கெட் வேகமாக இறங்கி ''டங் டங்'' என்று சத்தம் கேட்கும். இதனால் நள்ளிரவில் அல்லது நள்ளிரவுக்குப் பின் நாங்கள் எழுப்பப்படுவோம். ஊரே அடங்கிய நேரத்தில் இரண்டு தெரு தள்ளிப்போய் தண்ணீரை சர்க்கார் கிணற்றில் சேந்தி எடுத்துவருவோம்....

ஒருகட்டத்தில் அது முற்றிலுமாக வற்றும் நிலை. வறண்டு கிடந்த அந்த பிரமாண்டமான பொதுக்குளத்தில் அதில் கிணறு தோண்டியிருந்தார்... குளமே சேறாக இருக்க... கால்களை அங்கங்கே பதித்து நடந்து கிணற்றில் இறங்கி அந்த தண்ணீர் அதற்கு மேல் குட்டைபோன்ற கலங்கல்... அதை எடுக்கும்போதே துண்டில் வடிக்கட்டி வீட்டுக்கு வந்து காய்ச்சிக் குடிப்போம்.

ஒரு கட்டத்தில் சேறு கலங்கிய குட்டையும் காய்ந்து இறுக.... அதில் வெட்டப்பட்ட கிணற்றில் கிடைத்த நீரும் வெகு கீழ்மட்டத்திற்கு இறங்கிவிட கொட்டாங்குச்சி (தேங்காய் சிரட்டை) எடுத்துச்சென்று வறட்வறட் சேற்றுத்தண்ணீரை எடுத்து துண்டு கட்டிய குடத்தில் ஊற்றி அதை நிரைக்க ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகும். அதைக்கொண்டுவந்து காய்ச்சி குடிக்கும்போது இதாவது கிடைத்ததே என்றுதான் தோன்றும்.

பின்னர் கோயில் தெப்பக்குளத்தில் வெட்டப்பட்ட கிணற்றில் தண்ணீர் எடுத்துவந்ததைப் பற்றியோ, ஏரியில் இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் அனல்கக்கும்பொடிமனலில் செருப்பில்லாமல் நடந்துசென்று தண்ணீர் எடுத்து வந்ததைப் பற்றியோ தென்னந்தோப்புத் தாண்டியுள்ள நடைபாய் கிணற்றில் படிகள் இன்றி பொக்கைபொறைச்சலாய் உள்ள கிணற்றுச் சுவற்றில்  எச்சரிக்கையோடு கால்வைத்து இறங்கி தண்ணீர் எடுத்துவந்ததைப்பற்றியோ சொல்லி போரடிக்க விரும்பவில்லை. ஆனால் இத்தகைய காலக்கட்டங்களில் எல்லாம் ஒரு அற்புதமான விஷயத்தைப் பார்க்கமுடிந்தது. ஊரிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அணுசரனையோடு இருந்த நாட்களாக அவை இருந்தன. 

 ''அண்ணே சைக்கிள்ல எனக்கும் ஒரு குடம் எடுத்துவர்றீங்களாண்ணே காசு கொடுத்துர்றேன்ன.'' ''அட என்னம்மா நீ... அந்த காச வாங்கிதான் நான் மாடி வீடு கட்டப்போறேனா? சரியான ஆளும்மா நீ.... குடத்தை கொடுமா இப்படி'' என்ற குரலில் இருந்த கரிசனம் வானத்து மேகத்தைவிட இதமானது.

''அக்கா தண்ணிக்குத்தான் போறேன்.. உனக்குத்தான் உடம்பு சரியில்லையே உன் குடத்தையும் குடுக்கா உனக்கும் சேர்த்து எடுத்துவர்றேன்...'' என்று இன்னொரு குடத்தை வாங்கிச்சென்று தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக எடுத்துவந்து உதவிசெய்த குரல்களில் தொனித்த ஈரம் குடத்தில் நிறைந்த நீரின் ஈரத்தை விட குளிர்ச்சியானது.... அவரது இதயமும்....

காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டன... இன்று பேருந்து நிலையங்களில் குழந்தை தண்ணீர் இல்லாமல் அழுவதைப் பார்க்க நேரிடுகிறது. டிராவல் பேக்கில் வெளியே செருகியிருந்த தண்ணீர் பாட்டிலை யாரும் பார்ப்பதற்குள் சட்டென்று பேக் உள்ளே போட்டு வேகமாக ஜிப்பை போடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்த நேரம் ஒரு அபயக் குரல், ''அம்மா இந்த தண்ணீரை அந்தக் குழந்தைக்கு கொடுங்க... அவரைப் பார்த்தால் படித்தவர் போல் தெரியவில்லை...'' தனது உடம்புக்கு முடியாத மனைவியோடு எங்கோ மருத்துவமனைக்கு போய்க்கொண்டிருக்கிறார் போல.... அவரது கண்களே கூட பஞ்சடைந்து இருக்கிறது. தண்ணீர் பாட்டிலை எடுததுத் தந்த அவரது யூரியா கைப்பையின் ஒரு பக்க பிடி அறுந்து கிடக்கிறது.

- பால்நிலவன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close