சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன் பிரச்சினை, பற்களுக்கு கெடுதல் என மென்பானம் (Soft drinks) பருகுவதால் ஏற்படும் ஆபத்துகளின் அணிவகுப்பு மிகவும் பெரியது. மென்பானங்களுக்கு மாற்றாக, கோடைக் காலத்தில் நம் தாகம் தணிக்க என்ன செய்யலாம்? - இதோ எளிய குறிப்புகள்...
இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. இதைக் குளிரக் குளிரக் குடிக்க விரும்புபவர்கள் ஃபிரிட்ஜுக்கு பதிலாக மண்பானையில் ஊற்றிவைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியம்.
தண்ணீருக்கு அடுத்து, தாகம் தணிக்க உதவுவது இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர். இயற்கைப் பழங்கள், பழச்சாறுகளும் இதற்கு உதவும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடலாம். எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம். சத்தான, சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும்.
மாறாக, இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.
சாஃப்ட் டிரிங்ஸ் ஏன் வேண்டாம்? - மென்பானங்களைத் தொடர்ந்து அருந்தும் போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து, இரைப்பைப் புண், குடற்புண் ஏற்படும். பசியின்மை, புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவிடும்.
பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் மென்பானங்களைக் குடிக்கிறோம். இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. மென்பானங்களை வரம்பின்றி அருந்தும் போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த நாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கி விடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.
உணவியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, பழம் சாப்பிடுவதே நல்லது. காரணம், பழத்தை அப்படியே நேரடியாகச் சாப்பிடும்போது, பழத்தின் சத்துகளோடு, அதன் தோலில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுப்பதுடன், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது.