தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற வால்பாறை: ‘பிஎஸ்என்எல்’ செல்போன் கோபுரங்களை கூடுதலாக ஏற்படுத்த வலியுறுத்தல்


ரம்மியமாக காட்சியளிக்கும் வால்பாறை நகரின் ஒரு பகுதி.

வால்பாறை: கோவை மாவட்டத்தில் உள்ள மலைவாழிடமான வால்பாறையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான வால்பாறைக்கு, இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பருவமழைக் காலத்தில் வால்பாறை எஸ்டேட் பகுதியில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் தமிழகம்-கேரள வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர், உணவு, இனப்பெருக்கம் ஆகியவற்றுக்காக இடம் பெயரும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வால்பாறையில் உள்ள வனப்பகுதியில் முகாமிடுவதும், இரவில் தேயிலைத் தோட்டங்கள், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது.

அவ்வாறு வரும் யானைகள், சத்துணவு மையம், ரேஷன் கடை, பள்ளிக் கட்டிடம், தொழிலாளர் குடியிருப்பு ஆகியவற்றை சேதப்படுத்தி வருகின்றன. பேரிடர் காலங்களிலும், வன விலங்குகளால் ஏற்படும் அபாய காலங்களிலும் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால், வால்பாறை பகுதியில் உள்ள பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் முழுமையாக மொபைல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. அவசரக் காலங்களில் எஸ்டேட் பகுதியில் இருந்து, எந்தவொரு துறையினரையும் தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்களும், தொழிலாளர்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வால்பாறை நகரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். வால்பாறை நகரப் பகுதி, முடீஸ், காடம்பாறை, கவர்க்கல், சோலையாறு நகர் உள்ளிட்ட 11 இடங்களில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பிஎஸ்என்எல் சேவையை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, அனைத்து வங்கிகளிலும் பிஎஸ்என்எல் சேவையை மட்டுமே நம்பியுள்ளனர். மழைக்காலத்தில் வால்பாறையில், பிஎஸ்என்எல் நெட் ஒர்க் சேவை துண்டிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மொபைல்போனில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள முடியாமல் அவதியடைகின்றனர். மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும், மொபைல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸை அழைக்க முடியாத நிலை உள்ளது.

இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும், பிஎஸ்என்எல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்களின் தொலை தொடர்பு தேவை பாதிக்கப்படுவதுடன், வங்கி மற்றும் பிற துறைகளின் சேவைகள், ஆன்லைன் வர்த்தக சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வால்பாறையில் தடையில்லாமல் சேவை வழங்க, கூடுதல் மொபைல்போன் கோபுரங்களை அமைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

x