விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது தந்தையுடனான நினைவுகள் குறித்து பகிர்ந்துகொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சார்ந்த நிகழ்ச்சிகளின், பெண் தொகுப்பாளர்களில் திவ்யதர்ஷினி பிரபலமானவர். நிகழ்ச்சியை உயிரோட்டத்துடன் தொகுத்து வழங்குவது முதல், பிரபலங்களை நிரடாது நாசூக்கான கேள்விகளை முன்வைப்பது வரை டிடி-யின் பாணி அலாதியானது. அண்மைக்காலமாக தொகுப்பாளினிகளுக்காக குரல் கொடுத்து வரும் வகையிலும் டிடி கவனிக்கப்பட்டு வருகிறார்.
தொழில் நிமித்தம் மட்டுமல்ல, தனிப்பபட்ட வகையிலும் டிடி சக பெண்களுக்கு முன்னுதாரணமானவர். உடல்நிலை, குடும்ப வாழ்க்கை என சகலத்திலும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் இவர், அவற்றை மீறி சாதனை படைத்து வருகிறார். மூட்டு பிரச்சினை காரணமாக நீண்ட நேரம் நின்றபடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு மாற்றாக தொகுப்பாளர்கள் அமர்ந்தபடியும் தங்கள் பணிகளை தொடர்வதை சாதித்துக் காட்டினார். விவாகாத்துக்குப் பின்னர் தனது புன்னகையை தொலைக்காது சக பெண்களுக்கு உத்வேகம் தந்து வருகிறார் டிடி.
டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது சமூக ஊடக கணக்குகளில் டிடி நீலகண்டன் என்ற பெயரிலேயே வலம் வருகிறார். இந்த வகையில் தந்தை நீலகண்டனை தன்னுடன் பிரியாது வைத்திருக்கிறார். இதற்கிடையே தனது தந்தை குறித்த அவரது நினைவுகூரல் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. தந்தையின் கடைசி தருணத்தின்போது, அவருக்கு தான் சத்தியம் ஒன்றை அளித்ததாகவும், அதனை இன்று வரை பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
”என்னுடை மரணத்துக்குப் பின்னர் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று டிடியின் தந்தை சாகும் தருவாயில் அவரிடம் கோரிக்கை வைத்தாராம். அதன்படி அப்பாவிடம் சத்தியம் செய்த திவ்யதர்ஷினி அதனை இன்றுவரை கைவிடாது பின்பற்றுவதாகவும் உருக்கம் தெரிவித்துள்ளார். தந்தையின் பெயரை தனது பெயருடன் சேர்த்திருக்கும் திவ்யதர்ஷினி, தந்தைக்கு பிற்பாடு அவரது இடத்தை குடும்பத்தில் பூர்த்தி செய்து வருவது, டிடி ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.