நிபா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக ஆன் லைன் மூலம் சிகிச்சை அளிக்கும் வசதியை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, ஆறு பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது; அதில், இருவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் 'இ - சஞ்சீவினி' எனப்படும் தொலைபேசி வாயிலாக சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ், நிபாவுக்கான ஆன்லைன் புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியில் இருந்து, மாலை 5 மணி வரை, ஆன்லைன் வாயிலாக சிகிச்சை பெற முடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமலேயே டாக்டர்களின் ஆலோசனையை பெற முடியும். மேலும் நிபா வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற முடியும்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக புதிய பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை. நேற்று முன்தினம், 42 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது, கடந்த இரண்டு தினங்களாக புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. நடைமுறைகளின்படி, கடைசியாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தினத்தில் இருந்து, 42 நாட்கள் வரை கண்காணிப்பு பணிகள் நடத்த வேண்டும் என்றார்.