கோவை: இந்தியர்களின் வாழ்வியலிலும், கலாச்சாரத்திலும் ஒன்றாக கலந்துவிட்டதில் தேக்கு மரம் முக்கிய அங்கம் வகிக்கிறது. வீடுகளில் வாசல் கதவு தொடங்கி ஜன்னல்கள், பீரோ, கட்டில் என அனைத்திலும் நீக்கமற இடம்பிடித்த மரம் என்றால் தேக்கு தான். நீண்ட ஆயுளுடன் மழை, வெயிலை தாங்கி நிற்பதால் அனைவருக்கும் தேக்கு மரம் என்றால் அலாதி பிரியம்.
தேக்கு மரத்தின் தேவை அதிகரித்துவிட்டதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. இந்தியாவில் பரவலாக தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தாலும் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்தியாவில் தேக்கு மரத்துக்கான சந்தை வாய்ப்புகளை உணர்ந்த தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தேக்கு மரத்தை வளர்த்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.இந்தியா சுமார் 17 நாடுகளில் இருந்து தேக்கு மரங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இந்தியாவில் தேக்கு மர தேவையைக் கருத்தில் கொண்டு, கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (ஐஎஃப்ஜிடிபி) திசு வளர்ப்பு மூலம் தேக்கு மர நாற்றுகளை உருவாக்கி உள்ளது. மேலும் திசு உற்பத்தி மூலம் லட்சக்கணக்கிலான தேக்கு மர நாற்றுகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் வழங்கி வருகிறது.
திசு வளர்ப்பு முறையில் தேக்கு மர நாற்றுகளை உருவாக்கிய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் (ஐஎஃப்ஜிடிபி) மூத்த விஞ்ஞானி ரேகா வாரியர் கூறியதாவது: இந்தியாவில் தேக்கு மரங்கள் பரவலாக வளர்க்கப்பட்டு வந்தாலும், உள்நாட்டு தேவையைப்பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. சுமார் 80 சதவீதம் அளவுக்கு தேக்கு மரங்களை இறக்குமதி செய்து கட்டுமானம் மற்றும் இதர மர தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
இந்தியாவில் 50 முதல் 60 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்ட நல்ல தேக்கு மரங்கள் அறுவடை செய்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தென் அமெரிக்க நாடுகள் வெறும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வளர்ந்த தேக்கு மரங்களை வெட்டி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்தியாவில் தேக்கு மரத்தின் தேவை அதிகமாக இருப்பதால், உடனே இறக்குமதி செய்து விடுகிறோம்.
இதனிடையே, மத்திய அரசின் மர மேம்பாட்டு திட்டத்தின் மூலம் திசு வளர்ப்பு முறையில் தேக்கு மர நாற்றுகளை வளர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக 1995 முதல் திசு வளர்ப்பு முறையில் தேக்கு மர நாற்றுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஆனைமலை, டாப்சிலிப் மற்றும் கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து தரமான தேக்கு மர தளிர்களை சேகரித்து, 2000-வது ஆண்டில் சோதனை முறையில் தேக்கு மர நாற்றுகளை உருவாக்கினோம்.
அவற்றை விவசாயநிலங்களில் நட்டு அதன் வளர்ச்சி ஆய்வுசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு முதல் திசு வளர்ப்புமுறையில் அதிகளவில் தேக்கு மர நாற்றுகளை உருவாக்கி விநியோகித்து வருகிறோம். அத்துடன் தனியார் ஆய்வகங்களுக்கும் உரிமம் வழங்கியுள்ளோம்.
அவர்களும் தரமான திசு வளர்ப்பு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் தேக்கு மர நாற்றுகளுக்கு 10 சதவீத தொகையாக உரிமைத்தொகையாகப் பெற்று வருகிறோம். பொதுவாக விதையில் இருந்து தேக்கு மர நாற்றுகளை வளர்க்கும் போது விதையின் தன்மை மாறும். மேலும், தேக்கு மரத்தின் வளரும் தன்மையும் மாறும். அடுத்து கட்டிங் முறையில், அதாவது 1 கட்டிங்கில் இருந்து 60 தேக்கு மர நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். ஆனால் திசு வளர்ப்பு முறையில் 1 தளிரில் இருந்து 60 ஆயிரம் தேக்கு மர நாற்றுகளை உருவாக்க முடியும்.
ஐஎஃப்ஜிடிபி மூலம் இதுவரை 15 லட்சம் தேக்கு மர நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளோம். தனியார் ஆய்வகங்கள் மூலம் 10 லட்சம் தேக்கு மர நாற்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகை தேக்கு மர நாற்றுகளை 20 முதல் 25 ஆண்டுகளில் அறுவடை செய்து கட்டுமானம் உட்பட மர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். அதிகமான கிளைகள் இல்லாமல் சுமார் 40 அடி உயரம் வரை வேகமாக வளரும் தன்மையுடையது. ஆழமாக வேரூன்றி வளரும்.
திசு வளர்ப்பு முறையில் உருவாக்கிய தேக்கு மர நாற்றுகள் தோப்பில் சீரான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். மேலும், காற்று அதிகம் வீசும் பகுதிகளில் காற்று தடுப்பானாக சவுக்கு மரங்களை வளர்த்து தேக்கு மரம் சாய்ந்துவிடாமல் தடுக்கலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சவுக்கு மரங்களை வெட்டி எடுத்து விட வேண்டும். ஒரு ஹெக்டரில் 500 தேக்கு மரங்களை வளர்க்க முடியும். இதில் உளுந்து, கடலை உட்பட பல்வேறு பயிர் வகைகளை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். முழு வளர்ச்சி அடைந்த தேக்கு ஒரு கன மீட்டர் ரூ.2500 முதல் ரூ.5000 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது.
ஐஎஃப்ஜிபிடி திசு வளர்ப்பு முறையில் உருவாக்கிய தேக்கு மர நாற்றுகள் தமிழகம்,மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் என பல்வேறு மாநிலங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட தேக்கு மர நாற்றுகளுக்கு காப்புரிமை உள்ளிட்ட அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. தேக்கு, சவுக்கு, மலைவேம்பு, வேம்பு, புளி, கடம்பு உட்பட பல்வேறு முக்கிய மர சாகுபடிகள் குறித்த காணொலிகள் இந்நிறுவனத்தின் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.