இந்தியாவில் 500 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதம் அளவிற்கு உயரும் என வெளியான தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகளுக்கான விலை நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் சந்தை விலைக்கு ஏற்க ஒவ்வொரு ஆண்டும் மிகக்குறைந்த அளவில் விலை ஏற்றத்தை அறிவிக்கும்.
உதாரணமாக ரூ.90 முதல் ரூ.261 விலையிலான மருந்துகளுக்கு 0.00551 சதவீதம் விலை உயர்வு நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில செய்தி நிறுவனங்களில், 500க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு 12 சதவீதம் அளவிற்கு விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்தி வெளியானது. குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள் 500ன் விலைகள் கடுமையாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வருபவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் மருந்துகளை உட்கொள்பவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 12 சதவீதம் அளவிற்கு விலை உயர்வு என்பது தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு 0.1 பைசாவிற்கும் குறைவாகவே இருக்கும் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகளை வாங்குவோர் அச்சப்பட தேவையில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!