கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், கிணற்று நீர் பாசன நிலங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆற்றுநீர், ஏரி நீர், கிணற்று நீர் மூலம் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
நெல் சாகுபடி பிரதானம்: குறிப்பாக, தென்பெண்ணை ஆற்று நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கெலவரப்பள்ளி, சின்னாறு, கிருஷ்ணகிரி அணைகள், பாரூர் பெரிய ஏரி மற்றும் பாம்பாறு அணைகள் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பிரதானமாக நடைபெற்று வருகிறது.
மேலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 9,009 ஏக்கர் விளை நிலங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
கிணற்றுப் பாசனங்களுக்குப் பருவமழை மட்டுமே கைகொடுத்து வருவதால், பருவ மழை பொய்க்கும்போதும், பருவத்துக்கு ஏற்ப மழை பெய்யாதபோதும், இச்சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு: இந்நிலையில், நிகழாண்டில் கிணற்று நீர் பாசனம் மூலம் சூளகிரி, கெலமங்கலம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில்,
தற்போது, மழையின்றி வெயில் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. இதனால், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வேளாண் பணிக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெற்பயிருக்கு நீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1,000 அடிக்கு கீழ் தண்ணீர்: இதுதொடர்பாக சூளகிரி ஊராட்சி ஒன்றியம் இம்மிடிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கிணறுப் பாசனத்தை நம்பி நெல் நடவு செய்துள்ளோம். ஆனால், எதிர்பார்த்த மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. இதில், ஆழ்துளைக் கிணறுகளில் 1,000 அடிக்குக் கீழ் தண்ணீர் சென்று விட்டது.
இதனால், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாததால், நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், நெல் நாற்று, நிலம் சீரமைத்தல், நடவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குச் செய்த செலவினங்கள் வீணாகி விட்டன. எனவே, வேளாண்மைத் துறை அலுவலர்கள், கிணற்று நீர் பாசனப் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கை கொடுக்கும் பயிர் காப்பீட்டுத் திட்டம் வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. குறிப்பாக, ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி நடவு செய்யப்பட்ட நெல் மற்றும் ராகி உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வாய்ப்பாக உள்ள பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, விழிப்புணர்வும், ஏற்படுத்தி வருகிறோம். காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளுக்கு, நெற்பயிர் பாதிக்கப்பட்டால், உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.