நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் இக்னேசியஸ் டெலஸ் புளோரா (54). இவர் தனது 17 வயதில் ராணுவத்தில் செவிலியர் பிரிவில் பணியில் சேர்ந்து, பின்னர் தனது கடின உழைப்பால் பதவி உயர்வுகள் பெற்று, தற்போது ராணுவத்தில் செவிலியர் பிரிவில் தமிழகத்தின் முதல் மேஜர் ஜெனரலாக உள்ளார்.
அவருக்கு பாராட்டு விழாவும், அவரது சாதனைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவும் ராஜாவூர் புனித மிக்கேல் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.
அவர் தனது உரையில், “நாட்டில் செவிலியர்களின் சேவையானது மிகவும் பெருமை வாய்ந்த கடமை உணர்வு வாய்ந்த பணியாகும். அவர்களுக்குத் தான் நோய்களின் அடிப்படை தன்மை பற்றியும், நோயாளிகளின் நிலைமை பற்றியும் தெளிவாக உணரக்கூடிய தன்மை இருக்கும். செவிலியர் பணியில் ஈடுபட வேண்டுமென்றால் இறைவனின் அருளும், பெற்றோர்களின் ஆசிர்வாதமும் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் இந்திய ராணுவத்தில் செவிலியர் பிரிவில் தமிழகத்தின் முதல் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 5 ஆயிரம் செவிலியர்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்றிருப்பதும், குமரி மாவட்டத்தில் குறிப்பாக, ராஜாவூர் பகுதியை சேர்ந்த இவர் ராணுவத்தில் உயர் பதவியை அடைந்திருப்பதும் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது” என்றார்.
விஜய் வசந்த் எம்பி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரும் புளோராவை வாழ்த்திப் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோராவின் கணவர் முனைவர் இக்னேசியஸ் ஜோசப் ஜான் விழாவில் வெளியிட்ட புத்தகம் குறித்து விளக்கி பேசியதுடன், விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.