பிச்சாவரம் சதுப்பு நில காட்டில் 100+ கிலோ பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் அகற்றம்!


கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நில காட்டில் 100 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அகற்றப்பட்டன.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிள்ளை பேரூராட்சியில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் சுற்றுலாப் பயணிகளால் போடப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை கிள்ளை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அகற்றும் பணி இன்று (செப்.24) நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கினார்.

சிதம்பரம் சார்- ஆட்சியர் ராஷ்மி ராணி, பயிற்சி ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது, பேரூராட்சி எழுத்தர் செல்வராஜ், பேராசிரியர் ராமநாதன், பேரூராட்சி, ஊழியர்கள் சுற்றுலாத்துறை ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் சுமார் 100 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டது. பிச்சாவரம் இயற்கை சூழலுடன் பராமரிக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x