விருதுநகர்: என் உலகம் சிறியது என்றாலும் வண்ண மயமானது என சிரித்துக் கொண்டே சொல்கிறார் மூதாட்டி கலாதேவி (89). இந்த வயதிலும் உல்லன் நூலில் கலைநயமிக்க பொருட்களை தயாரித்து சுயமாக வருமானம் ஈட்டி வருகிறார். விருதுநகர் அருகே உள்ள பாண்டியன் நகர் முத்தால் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி கலாதேவி. சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக் கத்தில் பிறந்த இவர், திருமணமாகி 70 ஆண்டு களுக்கு முன்பு விருதுநகர் வந்தவர்.
உல்லன் நூலில் எந்த உருவத்தையும் பின்னிக் கொடுக்க முடியும் என்கிறார் தன்னம்பிக்கையோடு. விருது நகர் மேற்கு காவல் நிலையம் எதிரே உள்ள சர்ச் சுற்றுச்சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி பல வகையான பொம்மை களையும், கடவுள் உருவங்களை யும் மிக அழகாக உல்லன் நூலில் தயாரித்து விற்று வருகிறார்.
இதுகுறித்து, கலாதேவி கூறியதாவது: எனக்கு மகன், மகள் உள்ளனர். கணவர் இறந்தபிறகு மகன் வீட்டில் வசித்து வருகிறேன். எப்போதும் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். சிறு வயதில் நாடகங்களில் நடித்தேன். அதனால் தற்போது கலைஞர்களுக்காக அரசு வழங்கும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் பெறுகிறேன்.
அதில், ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகைக்கு கொடுத்து விடுவேன். மீதிப் பணத்தில் உல்லன் நூல் வாங்கி பொம்மைகள், கடவுள் சிலைகள் தயாரிக்கிறேன். முத்தாள் நகரில் இருந்து இங்கு வரை சுமார் 3 கி.மீ. தூரம் தினமும் நடந்தே வந்து செல்கிறேன்.
உல்லன் நூலில் தொப்பி, பர்ஸ், சிவலிங்கம், முருகன், விநாயகர் உருவங்கள், பொம்மைகள், கிளி போன்ற பல்வேறு வகையான உருவங்கள் செய்து விற்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.
சிலர் குறிப்பிட்ட பொம்மை, கடவுள் உருவம் போன்றவற்றை செய்து கொடுக்குமாறு ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். உலகம் ஒன்றுதான் என்றாலும் வாழும் நாம் ஒவ் வொருவருக்கும் தனித்தனி உலகம் உண்டு. என் உலகம் சிறியது என்றாலும் வண்ணமயமானது என சிரித்துக்கொண்டே கூறினார் கலாதேவி.