தமிழகத்தில் கனமழையால் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வேலை நாளாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மழையை பொறுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முடிவு செய்யலாம் என கூறியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகப்பட்டினம். திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இரண்டு தாலுகாக்களுக்கு மட்டும் (கந்தர்வக்கோட்டை, கரம்பக்குடி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை வேலை நாளாக கருதப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கனமழைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...