இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் நாகை விவசாயிகள் கண்ணீர்!


இடுப்பளவு தேங்கியுள்ள நீரில் மூழ்கிய பயிர்கள்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சம்பா மற்றும் தாளடி இளம்பயிர்கள் தண்ணீர் முழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

நடப்பாண்டு குறுவை சாகுபடியின் போது, போதிய மழையின்மை காரணமாகவும், காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராத காரணத்தினாலும் 80 சதவீதம் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் உற்பத்தி பாதிப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்களாவது தங்களுக்கு கை கொடுக்கும் என விவசாயிகள் சாகுபடி பணியைத் தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் நேரடி மற்றும் நடவு முறையில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது.

தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தற்சமயம் அந்த பயிர்கள் 20 முதல் 35 நாட்கள் இளம் பயிராக உள்ள நிலையில், நாகை மாவட்டம் முழுதும் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. அது விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்தது. இந்த நிலையில், நேற்று முதல் மாவட்டம் முழுவதும் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாகுபடி செய்துள்ள வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

வயல்வெளிகளில் இடுப்பளவு நீர் தேங்கியுள்ளது

மேலும் வாய்க்கால்களில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் வயலில் இருந்த தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை இன்னும் தொடரும் என கூறப்படும் நிலையில், இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

வயல்கள் எல்லாம் குளம் போல் மாறி பயிர்கள் நீரில் மூழ்கி வெளியே தெரியாத அளவிற்கு உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

x