கூடலூர்: தமிழக கேரள எல்லையான குமுளியில் குறைந்த செலவில் பல்வேறு சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப்பார்க்க பட்ஜெட் சுற்றுலா பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. இங்குள்ள தேக்கடி சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ளதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளும் இங்கு அதிகளவில் வருகின்றனர். இவர்களுக்காக படகு சவாரி, கதகளி, களரி, மோகினி ஆட்டம், ஜீப் மற்றும் யானை சவாரி, பசுமை நடை உள்ளிட்ட ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் இங்கு உள்ளன.
இருப்பினும் வாடகை மற்றும் சொந்த வாகனங்களிலேயே பல பகுதிகளுக்கும் செல்லும் நிலை இருந்து வந்தது. பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா மையங்களை ஒருங்கிணைத்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பட்ஜெட் சுற்றுலா சிறப்பு பேருந்து இயக்கத்தைத் தொடங்கி உள்ளது.
இன்று இந்த பேருந்து இயக்கத்தை பீர்மேடு தொகுதி எம்எல்ஏ-வான வாழூர் சோமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினி பிஜு முன்னிலை வகித்தார். இந்த பட்ஜெட் சுற்றுலா பேருந்து காலை 8 மணிக்கு குமுளியில் இருந்து கிளம்பும்.
பருந்துப்பாறை, வாகமன் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காண்பித்துவிட்டு மாலையில் இப்பேருந்து குமுளிக்குத் திரும்பும். சுற்றுலா பகுதிகள் குறித்து தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் விளக்கம் அளிக்கப்படும். இதில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.380 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். உணவு உள்ளிட்ட இதர செலவுகள் சுற்றுலா பயணிகளைச் சார்ந்தது.