உலக தடுப்பூசி தினமான இன்று அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்தம் வயதிற்கு ஏற்ற தடுப்பூசிகளை தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி வாரத்தின் அனைத்து நாட்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் சிறப்பு அமர்வுகளாக, கிராமம் மற்றும் நகரங்களில் அங்கன்வாடி மையம் மற்றும் குறிப்பிட்ட பொது இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பம் பதிவு செய்தவுடன், Td தடுப்பூசி முதல் தவணையும், ஒரு மாதத்திற்குப் பிறகு இரண்டாம் தவணையும் வழங்கப்படுகிறது. ரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் நோயைத் தடுப்பதற்காக அளிக்கப்படுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த ஒரு வருடத்திற்குள் மொத்தமாக 20 டோஸ் தடுப்பூசிகளும், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 4 தவணைகள், 5-6 வயதுடைய சிறுவர்களுக்கு 1 தவணையும், 10 வயது மற்றும் 16 வயதுடையவர்களுக்கு முறையே 1 தவணையும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடி மதிப்பிலான 3.20 கோடி தடுப்பூசிகள் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தடுப்பூசிகளும் தமிழ்நாட்டில் உள்ள 2,691 குளிர்பதன நிலையங்களில் (மாநில தடுப்பூசிக் கிடங்கு, மண்டல தடுப்பூசிக் கிடங்கு, மாவட்ட தடுப்பூசிக் கிடங்கு, ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகள்) உபகரணங்கள் சேமிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று உலக தடுப்பூசி தினத்தில் அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அவர்தம் வயதிற்கு ஏற்ற தடுப்பூசிகளை தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தடுக்கப்படக் கூடிய காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, H இன்புளூயன்ஸா-நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ருபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நிமோகோக்கல் நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.