6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?


விவசாயிகளின் வாகனங்களை முடக்க சாலைகளில் காத்திருக்கும் ஆணிகள்

6 மாத தேவைக்கான உணவுப்பொருட்கள், டீசல் எரிபொருள் உள்ளிட்டவையுடன் டெல்லி எல்லையில் குவியும் விவசாயிகள், நீண்ட போராட்டத்துக்கு அவர்கள் தயாராகி இருப்பதை காட்டுகிறது.

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தங்களது புதிய போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி இருக்கின்றனர். 2020-ம் ஆண்டு சுமார் 13 மாதங்களாக டெல்லியின் எல்லையில் முகாமிட்ட தங்களின் முந்தைய போராட்டத்துக்கு நிகராக அடுத்து சுற்றுக்கு அவர்கள் தயாராகி உள்ளனர். 6 மாதங்களுக்கான உணவு தானியங்கள் மற்றும் எரிபொருளுடன் அவர்கள் குவிந்திருப்பது, அவர்களின் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

மின்சாரச் சட்டம்(2020) ரத்து, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 'டெல்லி சலோ' பேரணி டெல்லியை எட்டி வருகிறது. முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் 2 மத்திய அமைச்சர்கள், விவசாயிகளின் தலைவர்களை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

சண்டிகரில் அரசு தரப்புக் குழுவுடன் நள்ளிரவு வரை நீண்ட அந்த பேச்சுவார்த்தை சுமூகத்தை எட்டவில்லை. இதனையடுத்து, விவசாயிகள் இன்று காலை ஃபதேகர் சாஹிப்பில் இருந்து தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினர். “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அரசாங்கம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இந்த முறை எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னரே டெல்லியை விட்டு வெளியேறுவோம்" என்று சூளுரையுடன் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். மக்களவை தேர்தல் நெருக்கம் என்பதால், தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்ற நப்பாசையும் விவசாயிகளுக்கு இருக்கிறது.

விவசாயிகளின் முந்தைய போராட்டம்

இதன்பொருட்டு உணவுப்பொருள், எரிபொருள் மட்டுமன்றி போராட்ட தடைகளை எதிர்கொள்ளும் நோக்கில், அனைத்து கருவிகள், உபகரணங்களுடனும் அவர்கள் குவிந்துள்ளனர். போராட்ட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், மாநகரின் எல்லை நெடுக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய எல்லைப் புள்ளிகளான காஜிபூர், திக்ரி மற்றும் சிங்கு ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் நகருக்குள் செல்லாத வகையில் சாலைகளில் ஆணிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை ஒரு மாத கால தடை விதித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

x