அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் ’ப்ரீ-வெட்டிங் ஷூட்’ நடந்ததில், அரசு மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
’ப்ரீ-வெட்டிங் சூட்’ என்பது நவயுக இளசுகளின் திருமண ஏற்பாட்டில் தவிர்க்க முடியாததாகவும், முந்தைய தலைமுறையினரின் கண்டனத்துக்கு ஆளாவதாகவும் மாறி வருகிறது. திருமணத்துக்கு முன்பாகவே ஜோடியாக நெருக்கம் பாவிப்பதும், அத்துமீறல் படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம்பெறுவதும் பொதுவெளியில் அதிருப்திக்கும் ஆளாகி வருகிறது.
அவற்றின் வரிசையில், கர்நாடக மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் தனது மனைவியாக மாறவிருக்கும் பெண்ணுடன், ப்ரீ-வெட்டிங் சூட் நடத்திய அரசு மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார். சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் அரசு மருத்துவமனையில், எடுக்கப்பட்ட இந்த ’ப்ரீ-வெட்டிங் ஷூட்’ வீடியோ இணையத்தில் வைரலானது. அதே வேகத்தில் அந்த வீடியோவுக்கு கண்டனங்களும் குவிந்தன.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அபிஷேக் என்ற மருத்துவர், நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். அவருடன் மருத்துவ உதவியாளரும் அவரது மனைவியாகப் போகும் பெண்ணும் உடனிருக்கிறார். அந்த ஆபரேஷன் தியேட்டரில், கேமரா, லைட்டிங் சகிதம் சிலர் மும்முரமாக படிப்பிடிப்பு நடத்துகின்றனர்.
ஆபரேஷன் தியேட்டரில் கேமராக்களுடன் நுழைந்த அந்நியர்களைக் கண்டதும், அறுவைசிகிச்சைக்கு ஆளாகும் நோயாளி பதற்றத்தில் எழவும் முயற்சிக்கிறார். அவரை அமைதிப்படுத்தி படுக்கச் செய்ததுடன், அறுவை சிகிச்சையை தொடரவும் செய்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களை முகம் சுளிக்கச் செய்தது.
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றது. அதிர்ந்துபோன அவர் உடனடியாக மருத்துவரை பணி நீக்கம் செய்ய உத்தவிட்டார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர் என்பதால், ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட அந்த மருத்துவர் உடனடியாக பணியை இழந்தார்.
"அரசு மருத்துவமனைகள் மக்களின் தேவைக்காகவே உள்ளன. தனிப்பட்டவர்களின் தேவைக்கு அல்ல. இதில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றும் அமைச்சர் குண்டுராவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.