மாத்தி யோசி... 3 விநாடி நேர முதலீட்டில் வாரம் ரூ120 கோடி வருமானம் பார்க்கும் சீனப் பெண்


ஜெங் ஜியாங் ஜியாங்

சீனாவின் சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், வெறும் 3 விநாடிகளில் பொருட்களுக்கு ரெவ்யூ செய்வதன் மூலம் வாரத்துக்கு ரூ120 கோடி வரை வருமானம் பார்க்கிறார்.

இது சமூக ஊடகங்களின் காலம். பிரபலம் ஆவது முதல் வருமானம் குவிப்பது வரை, சாமானியர்களுக்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவி வருகின்றன. நேரத்தை விரையமாக்குவது முதல், வீண் வம்புகளில் சிக்குவது வரை சமூக ஊடகங்களில் எதிர்மறையாளர்களே அதிகம் வியாப்பித்திருக்கிறார்கள். அதே சமூக ஊடகங்களில் நேர்மறையாளர்கள் உட்கார்ந்த இடத்தில் பெரும் வருமானத்தை அறுவடை செய்து வருகிறார்கள்.

ஜெங் ஜியாங் ஜியாங்

அதற்கு உதாரணமாகி இருக்கிறார் ஜெங் ஜியாங் ஜியாங் என்ற சீனத்து இளம்பெண். சாமானிய சமூக ஊடகவாசியாக ஆரம்பத்தில் அறியப்பட்டவர், தனித்துவம் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸை பெற்றிருக்கிறார். டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு நிகரான சீனாவின் சமூக ஊடகங்களில் ஒன்று டோயின். இதில் பல்வேறு பொருட்களை வேகவேகமாய் மதிப்பாய்வு செய்து ஜியாங் வீடியோ வெளியிடுகிறார்.

அதன் மூலம் வாரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ120 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். சமூக ஊடகப் பிரபலங்கள் பலரும் மேற்கொள்ளும் ரெவ்யூ உத்தியையே இவரும் பின்பற்றுகிறார். ஆனால் அதற்கான கால அவகாசத்தில் ஜியாங் பெரிதும் வேறுபடுகிறார். எண்ணி 3 விநாடிகள் மட்டுமே ஒரு பொருளை கேமராவுக்கு காட்டுகிறார். பின்னர் அதனை எறிந்துவிட்டு அடுத்த பொருளை கையில் ஏந்துகிறார். இப்படி தலா 3 விநாடி மட்டுமே ஒரு பொருளுக்கான மதிப்பாய்வுக்கு ஒதுக்குகிறார்.

தொடக்கத்தில் ஜியாங் மதிப்பாய்வு செய்யும் வேகம் மற்றும் அவர் பேச்சின் சுவாரசியத்துக்காக வீடியோக்களை காண ஆரம்பித்தவர்கள், பின்னர் அவர் ரெவ்யூ செய்யும் பொருட்களாலும் ஈர்க்கப்பட்டு அவற்றை வாங்க ஆரம்பித்தனர். இதனால் ஜியாங் மூலம் தங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டுமென பெரும் நிறுவனங்கள் தவமிருக்கின்றன. அவை ஜியாங் கோரும் கட்டணத்தையும் வழங்க சித்தமாயிருக்கின்றன.

இந்த வகையில் தனது 3 விநாடி மதிப்பாய்வு மூலமாக, கூரையை பிளந்துகொண்டு கோடிகளில் வருமானம் பார்க்கிறார் ஜியாங். வெறும் 3 விநாடி மட்டுமே ஜியாங் ஒரு பொருளை கேமராவுக்கு காட்டுவதும், அது குறித்து ரத்தின சுருக்கமாய் விளக்குவதும், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்றன. இதன் விளைவாக குறிப்பிட்ட பொருள் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் இணையத்தை நோக்கி நகர்கிறார்கள். இவ்வாறாக குறிப்பிட்ட பொருட்களின் விற்பனை எகிறவே, ஜியாங் செய்யும் 3 விநாடி ரெவ்யூக்கு பார்வையாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப வருமானமும் வளர்ந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x