நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காபி செடிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவசாய தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இதில் சுமார் 65,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பழ வகைகளான, ஆரஞ்சு, பேரிக்காய், பயிரிடப்பட்டு வருகிறது. இதே போல் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஊடுபயிராக காபி மற்றும் மிளகு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. தேயிலைக்கு நிலையான விலை கிடைக்காத சூழலில், இந்த ஊடு பயிர்கள் மூலமாக விவசாயிகள் ஓரளவிற்கு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காபி பயிர்களில் பூப்பிடிக்கும் காலம் என்பதால் இந்த மழை அதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்துள்ளது. இதனால் காபி பயிரிட்டுள்ள தோட்டங்களில் காபி பழங்கள், செடிகளில் காய்த்து தொங்குகின்றன.
நன்கு விளைந்தவுடன், அவற்றை பறித்து, தோல் நீக்கி, வெயிலில் காய வைத்து, காபித்தூள் தயாரிக்கும் அளவிற்கு பக்குவப்படுத்தி அவை சேமித்து வைக்கப்படும்.
இதை உதகை, குன்னூர் மற்றும் சமவெளி பகுதிகளிலிருந்து காபித்தூள் தயாரிக்கும் சிறிய கடைகள், நிறுவனங்கள் விளையும் இடத்திற்கே வந்து நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் ஓரளவுக்கு நிலையான வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.