பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்பட்ட 11,284 சிறப்பு பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் இதுவரை பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்காக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதன்படி கடந்த 12ம் தேதி முதல் இன்று வரையிலும் நான்கு நாட்கள் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களும் முன்பதிவு செய்யாதவர்களும் இதில் பயணித்து வருகின்றனர்.
முன்பதிவு செய்தவர்கள் புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், முன்பதிவு செய்யாதவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். அந்த வகையில் இந்த நான்கு நாட்களில் தற்போது வரை 11,284 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் இதுவரை 6.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 2.44 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்ததாகவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வருகிற 17ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், சொந்த ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.